Tuesday, June 8, 2010

கைகளில் கை வண்ணம்!!!

சின்ன வயசிலிருந்தே எனக்கு மருதாணி வைத்துக் கொள்வதென்றால் ரொம்ப விருப்பம். மெஹந்தி கோனெல்லாம் இல்லாத காலத்தில் அரைத்த மருதாணியையே தீக்குச்சியின் பின்புறத்தால் கொடி போலெல்லாம் போட்டுக் கொள்வேன். எப்ப நேரம் கிடைத்தாலும் மெஹந்தி கோன் வாங்கி இட்டுக் கொள்வேன்.

நண்பரின் மகளுக்கு பிறந்தநாள் பரிசு வாங்க கடைக்கு போனபோது மெஹந்தி கோன் கண்ணில் பட்டது.  மெஹந்தி போட்டு ரொம்ப வருடமே ஆச்சேன்னு ஒரு கோன் வாங்கினேன். ஞாயிறு வரை காத்திருந்து, மதியம் சாப்பிட்டதும், மெஹந்தி போடலாமென்று கோனை எடுத்து வைத்தேன்.

பக்கத்தில் இருந்த என் பெண் பார்த்த பார்வை, 'நீ மட்டும் மெஹந்தி போட்டுக் கொள்ளப் போகிறாயா?' என்று கேட்டது. கார்ப்பரேட் ஆபீசில் வேலை செய்யும் அவள், மெஹந்தி போட்டுக் கொள்வாளா என்ற சந்தேகத்தோடு நீ வைத்துக் கொள்கிறாயா என்று கேட்டேன். அழகாக போட்டு விட்டால் வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னாள். எனக்குத் தெரிந்தவரை போடுகிறேன் என்று சொல்லி அவளின் இடது கையில் போட ஆரம்பித்தேன். ரொம்ப நாளாக வைக்காமல் இருந்து வைத்ததால் கைகளில் சிறிது தடுமாற்றம்.



கோன் சின்னதாக இருக்கு, சரி, ஆளுக்கு ஒரு கைக்கு போட்டுக் கொள்ளலாமென நினைத்துக் கொண்டே ஒரு கையை போட்டு முடித்தேன். ரொம்ப குறைவாகவே கோனில் மீதி இருப்பது போல் தோன்றியது. எதற்கும் கேட்போமே என்று இன்னொரு கைக்கும் போடவா என்று பெண்ணிடம் கேட்டேன். உங்களுக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாள். சின்னப்பெண் கை அழகை விடவா நமக்கு முக்கியம் என்று ஆர்வத்துடன் அடுத்த கைக்கும் போட ஆரம்பித்து விட்டேன். கொஞ்சமாக மெஹந்தி இருக்கவே டிசைனை சுருக்கி ஒரு வழியாக கோன் காலியாகவும் நானும் முடிக்கவும் சரியாக இருந்தது.


கொஞ்சூண்டு மீதி கோனில் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் தோன்றவே, அதையும் விடாமல் என் கையில் போட்டு, என் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டேன்.

இரண்டு மணி நேரம் கழித்து எடுத்தபின் பெண்ணின் கை அழகாக சிவந்து இருந்ததில், நல்லவேளை! இரண்டு கைக்குமாக போட்டு விட்டோமே என்று சந்தோஷப்பட்டேன்!!

 



என் கைக்கும் நல்லா சிவந்து தானே இருக்கு :-)

;;