Wednesday, August 17, 2011


நாளை (18.08.11) என் அம்மாவிற்கு நடக்க இருக்கும் இருதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலமுடன் வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம். கிட்டதட்ட ஒன்றரை மாதமாக நாங்கள் ஏஞ்ஜியோகிராம் பார்க்க, வேறு மருத்துவரைப் பார்க்கவென அலைந்து கொண்டிருந்தோம். கோவையில் நாங்கள் பார்த்த மருத்துவமனை டாக்டர்கள், அடைப்பு 90 முதல் 100 சதவீதம் உள்ளது. சர்ஜரி தான் செய்ய வேண்டும், ஆனால் அம்மா சர்ஜரி தாங்கும் நிலையில் இல்லை, மாத்திரை சாப்பிட்டு எத்தனை நாட்கள் இருக்க முடியுமோ அவ்வளவுதான் என்று சொல்லி விட்டார்கள்.
பல டாக்டர்களை நாங்கள் அணுகிய போது மதுரையில் இந்த டாக்டர் மட்டும் பயமில்லை, சர்ஜரி செய்யலாம் என்று கூறவே, வெள்ளியன்றே மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறோம். நாளை  (18.08.11) காலை 9 மணிக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 

Thursday, July 7, 2011

திரும்பிப் பார்க்கிறேன்....


வாழ்க்கையில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கை முடிக்கும் இவ்வேளையில், நான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கத் தோன்றியது.

நான் கடந்து வந்த பாதை அப்படி ஒன்றும் மலர்ப்படுகை அல்ல. கற்களும், முட்களும் நிறைந்த கரடு முரடான பாதை தான். இவ்வளவு நாட்களில் நான் சாதித்தது என்று சொல்லப் போனால், பெரியதாக எதுவும் இல்லை.

ரொம்ப வசதியான குடும்பம் என்று சொல்ல முடியாது. தொடக்கப்பள்ளி ஆசிரியரின் வீட்டில் என்ன வசதியோடு வளர முடியுமோ அப்படித்தான் நான் வளர்ந்தேன். வீட்டில் மூன்று பெண்களில் மூத்த பெண் என்பதால் வேலைகளும் அதிகம், பொறுப்புகளும் அதிகம். அம்மாவிடம் கற்றுக் கொண்டது என்று சொல்ல சமையலைத் தவிர வேறு எதுவும் இல்லை. குழந்தைகளிடம் எப்படி எல்லாம் கோபப்படக் கூடாது என்பதற்கு என் அம்மாவே எனக்கு உதாரணம். என்னைப் பெற்றவர்களைப் பொறுத்தவரை ஏதோ படிக்க வைத்தார்கள். கல்யாணம் செய்து வைத்தார்கள். அத்துடன் அவர்கள் கடமையும் முடிந்தது. அதன் பிறகு வாழ்க்கையில் நான் எவ்வளவோ கஷ்டங்கள் பட்ட போதும் கண்டு கொள்ளவேயில்லை. வயதானபின் அவர்களை நான் பராமரித்து, அவர்களின் தேவைகளை மட்டுமே நான் கவனிக்க வேண்டும் என நினைத்தனர். குழந்தைகள், என் வாழ்க்கை என நான் நினைக்க ஆரம்பித்ததும் மனத்தாங்கல் வந்தது. இப்போது எல்லாம் சரியாகி சமாதானம் ஆனாலும் ஒரு முழுமையான அம்மா, அப்பா பாசம் இன்று வரை எனக்குக் கிடைக்கவே இல்லை என்பது தான் உண்மை:-( இருப்பினும் இந்த நாளை நான் கொண்டாடக் காரணமாக இருந்த அவர்களுக்கு நன்றி.

கணவர் - என் கணவர் எனக்குக் கிடைத்திருக்கும் வரம். என்னுள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்தது மட்டுமன்றி, என்னை வெளி உலகத்திற்குக் காட்டியவரே அவர் தான். உடல்நிலை சரியில்லாத போதெல்லாம் கூடவே இருந்து ஒரு குழந்தையைக் கவனிப்பது போல் கவனித்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் என் கண்கள் கலங்குகிறது. ஏழேழு ஜென்மம் மட்டுமல்ல. அதன்பிறகு எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவரே எனக்குக் கணவராக வர வேண்டும். (எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு விமோசனமே கிடையாதா என்று அவர் புலம்புவது உங்களுக்கு கேட்கிறதா?) என் கடைசி மூச்சு உள்ளவரை அவரை விட்டு ஒரு கணமும் பிரியாத வரம் வேண்டும் இறைவா!

என் அம்மா (மாமியார்) - எனக்கு உடம்பு சரியில்லை என்றால், நீ கஷ்டப்படாதே, தம்பியைக் கொஞ்சம் உதவி செய்யச் சொல் என்று சொல்லும் நல்ல மனம் கொண்ட அம்மா. இன்னும் சொல்ல முடியாதவை எவ்வளவோ. இப்படி ஒரு மாமியாரைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.

குழந்தைகள் -
பெரிய மகள் - சந்தோஷத்தையும், துக்கத்தையும் என்னுடன் சரிக்கு சரியாக பகிர்ந்து கொண்டவள். என்னுடைய சபதத்தை நிறைவேற்ற எனக்கு உறுதுணையாக நின்றவள்.

சின்ன மகள் - அவளின் தைரியம் எனக்கே பாடம் சொல்லும். தன்னலம் கருதாத அவளின் மனது யாருக்கும் வராது.

மகன் - அவனிடமிருந்து நான் கற்றுக் கொண்டது எப்போதும் நிதானத்தை கைவிடாத மனஉறுதி.

படிப்பில் எந்த விதத்திலும் சோடை போகாத குழந்தைகள். நன்கு படித்து இன்று எல்லோரும் நல்ல நிலைக்கு வந்து விட்டார்கள். அந்த நிலைக்கு நான் அவர்களைக் கொண்டு வந்து விட்டேன் என்பதில் என் பாதி கடமை முடிந்ததாக நினைக்கிறேன். இன்னும் ஒரு முக்கியமான கடமையைச் செய்யவே இப்போது முழு மூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதனாலேயே வேறு எதிலும் எனக்கு கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை. இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு பாக்கியத்தை இந்த ஜென்மத்தில் அளித்த கடவுளுக்கு நன்றி.

என்னை உயர்வாக நினைக்கும் என் நட்புகளைக் கொடுத்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

கடந்து வந்த பாதையில் என் மனதறிந்து நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லை. யார் மனமும் நோகும் படி பேசியதில்லை. அப்படி தெரியாமல் நான் ஏதும் தவறு செய்திருந்தால் இந்த நேரம் நான் இறைவனிடம் மன்னிப்பு கோருகிறேன். இனி அது போல் நேராதிருக்கவும் வழிகாட்டக் கோருகிறேன். நூறாண்டுகள் வாழ வேண்டுமென்றில்லை, இருக்கும் காலத்தில் ஆரோக்கியத்துடன் இருக்கவும், இனி நடக்க இருக்கும் காரியங்கள் நல்லவிதமாக நடப்பதற்கும், என் உறவுகளும், நட்புகளும் நலமுடன் இருக்கவும் இவ்வேளையில் இறைவனிடம் வேண்டுகிறேன்.

 

Monday, June 27, 2011

அம்மாவின் திருமணநாள் பரிசு!

அம்மாவின் 51வது திருமணநாளுக்கு (27-06-2011) என்ன பரிசு கொடுப்பது என யோசித்த போது, அம்மா கொஞ்ச நாளாக கேட்டுக் கொண்டிருந்தது போல் புடவையில் நானே பெயிண்டிங் செய்து கொடுத்தால் என்னவென்று தோன்றியது. 15 நாட்களே இருந்த நிலையில் அதற்குள் முடிக்க முடியுமா என தோன்றியது. இதென்ன பிரமாதம்? ஊதித் தள்ளி விடலாம். 5 நாட்களிலேயே முடித்து விடலாம்  என்று சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்தேன். புடவையின் கலரும், டிசைனும் ஏற்கனவே அம்மா சொல்லி இருந்தார்கள். அந்த டிசைனை டிரேஸ் பேப்பரில் வரைந்து எடுத்து, ஊசி வைத்து துளை போட்டு தயார் செய்தேன். தேவையான ஃபேப்ரிக் கலர்கள், அவுட்லைனர் எல்லாம் வாங்கி வந்தாயிற்று.

புடவையில் பிளவுசுக்கான பகுதியை அளந்து விட்டுவிட்டு, தொடங்க வேண்டிய இடத்தை மார்க் செய்து ஸ்டென்சில் பேப்பரை புடவை மேல் வைத்து சாக் பவுடரை மண்ணெண்ணையில் கரைத்து சின்ன துணியில் தொட்டு பேப்பர் மேல் தேய்க்க டிசைன் புடவையில் விழுந்தது. 

 3D அவுட்லைனர் கொண்டு டிசைனின் வெளிப்புறம் முதலில் வரைந்தேன். 
  


அவுட்லைனர் காய்ந்தபின் உட்புறம் பெயிண்ட் செய்தேன்.


ஆபீஸ் போய் வந்து மாலை 6 மணி போல் உட்கார்ந்தால் இடையில் டிபனுக்கு ஒரு மணி நேரம் போக, இரவு பனிரெண்டு அல்லது ஒரு மணி வரை போடுவேன். எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில்  முடித்து விடலாம் என நினைத்தேன். பாதி புடவை முடித்தபின் பிரச்னை ஆரம்பமானது. உடம்பு ரொம்ப முடியாமல் போக உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. இதனால் நான்கு நாட்கள் வேலை தடைபட்டது.

இப்போதைக்கு உடம்பு முழுதும் சரியாகாது என்று தெரிந்தபின், இனியும் கால தாமதம் செய்தால் சரியான நேரத்திற்கு புடவையை அனுப்ப முடியாது என்று தோன்றவே திரும்பவும் புடவையைக் கையில் எடுத்தேன். 


உடம்பு ரொம்ப முடியாமல் போக உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. இதனால் நான்கு நாட்கள் வேலை தடைபட்டது. உடம்பு ரொம்ப முடியவில்லையென்று ஆபீஸுக்கு லீவு போட்டேன். இப்போதைக்கு உடம்பு முழுதும் சரியாகாது என்று தெரிந்தபின், இனியும் கால தாமதம் செய்தால் சரியான நேரத்திற்கு புடவையை அனுப்ப முடியாது என்று தோன்றவே மனது கேட்காமல் பெயிண்ட் பண்ண திரும்பவும் புடவையைக் கையில் எடுத்தேன். தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் உடம்பு கஷ்டப்படுத்த, சிறிது நேரம் பெயிண்ட் செய்வது, சிறிது நேரம் படுப்பதுமாக வேலையைத் தொடர்ந்தேன். லீவும் இரண்டு நாட்கள் தான். திரும்ப ஆபீஸ் போக ஆரம்பித்தாயிற்று. மூன்றே நாட்கள் தான், அதுவும் இடையில் ஞாயிற்றுக்கிழமை வேறு. அடுத்த நாள் அனுப்பினால் தான் திங்களன்று அம்மா கைக்கு போய்ச் சேரும். வெள்ளியன்று இரவு உட்கார்ந்து வேலையை முடித்து விட்டுத்தான்  படுத்தேன். 


 இரவு முழுக்க காயவிட்டு, காலையில் அயர்ன் செய்து கையோடு   ஆபீஸ்  எடுத்து போனோம்.

அப்பாவுக்கு ஒரு சர்ட் எடுத்து அதையும் சேர்த்து பேக் செய்து மாலை வீடு திரும்பும் போது நேரே கொரியர் ஆபீஸ் போய் பார்சலை அனுப்பி விட்டு வந்தோம்.

எப்படியும் திங்கள் காலை அம்மா கையில் போய் சேர்ந்து விடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். இன்று காலையில் அம்மா, அப்பாவை போனில் கூப்பிட்டு வாழ்த்தி விட்டு, கூரியர் வந்தது பற்றி ஏதும் சொல்வார்களோ  என்று பார்த்தேன். தங்கையிடமும் கூப்பிட்டு விசாரித்தால் இன்னும் வில்லையென்று சொன்னாள். கொரியர் ஆபீஸ் கூப்பிட்டு கேட்டால் கொண்டு போய்க் கொடுக்க ஆள் இல்லை, நாளைக்கு தான் டெலிவரி செய்ய  முடியும் என்று சொல்கிறான். நாங்களும் எங்கெங்கோ கூப்பிட்டு பேசியும் பலனில்லை. நாளை காலை 10 மணிக்கு எப்படியும் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி விட்டார்கள்:-(

(கூரியரில் ஒவ்வொரு முறையும் இதே போல் தான். வீட்டிற்கு போன் செய்து உங்களுக்கு கூரியர் வந்திருக்கு, ஆபீஸுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். 80 வயதான அப்பா ஆட்டோ பிடித்து  போனால், ஒரு மணி நேரம் உட்கார வைத்து ஐடி செக் செய்து பிறகு பார்சலைக் கொடுப்பது என்பதே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  போன முறை  மருந்து அனுப்பி மூன்று நாட்கள்  கழித்து, கொண்டு வந்து கொடுத்தார்கள். இவ்வளவுக்கும் எல்லா ஊர்களிலும் கிளை பரப்பி, பெரிய பெயரோடு இருக்கும் புரஃபசனல் (!!!!)  கூரியர் தான் அது.)

சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று அம்மாவிடம் இன்னமும் சொல்லவில்லை. பரிசு தான் போய்ச் சேரவில்லை. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களாவது அவர்களுக்கு போய் சேரட்டும்!!!

Thursday, April 28, 2011

திருப்தியாக முடித்த வேலை!!!

தோழி ஸாதிகாவிடம் பேசிய பின்பு, அடுத்த நாளே பிளாக்கில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்குள் இந்த முக்கியமான வேலை வரவே அதை 10 நாட்களில் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்த பொழுது, எங்கள் வீட்டில் இருக்கும் நான் வரைந்திருந்த கிளாஸ் பெயிண்டிங்கை பார்த்து விட்டு, அவர்கள் புதியதாக கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டு ஜன்னலுக்கு ஒரு கிளாஸ் பெயிண்டிங் செய்து தர வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டிற்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லையென வரைந்தேன், ஆனால் எந்த நம்பிக்கையில் என்னிடம் இவ்வளவு பெரிய வேலையை தருகிறாரென மலைத்தேன். எனினும் வீடு கட்டி முடியும் தருவாயில் சொல்லுங்கள், பெயிண்டிங் செய்து தருகிறேன் என்று  நானும் சொல்லி இருந்தேன். சொன்னது போலவே கிரகப்பிரவேசத்திற்கு பத்தே நாட்கள் இருக்கும் நிலையில் ஜன்னலின் அளவும், கிளாஸும் என்னிடம் தந்தார் :-)

கண்டிப்பாக கிரகப்பிரவேசத்திற்குள் என்னால் முடித்துத் தர முடியாது என்று சொல்லி விட்டேன். ஏனென்றால் ஜன்னல் அளவு அப்படி!.  ரொம்ப சின்னதாக ஐந்தடி உயரம், மூன்றடி அகலம் தான்!!! (ஆனால், எப்படியும் குறிப்பிட்ட நாளுக்குள் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என மனதிற்குள் முடிவு செய்தேன்.)

இதற்கிடையில் மிக தொலைவிலிருக்கும் அவர்கள் கட்டிக் கொண்டிருந்த வீட்டைப் போய்ப் பார்த்து, ஜன்னல் எங்கு வரும் என்று பார்த்து வந்தோம். தலைவாசலுக்கு அருகில் போர்டிகோவில் முன்புறமுமாக இருந்தது. அடுத்து பெயிண்டிங் செய்வதற்கான டிசைனை நெட்டில் தேட  ஆரம்பித்தேன். ஜன்னல் இரண்டு பக்கமும் பார்வையில் படுவது போன்ற இடமாதலால், எங்கள் வீட்டில் இருப்பது போல் மனித உருவங்கள் சரிவராது என்று பூக்கள் டிசைனை தேடினேன். என் மனதுக்கு பிடித்தது போல் ஒரு டிசைனை தெரிவு செய்து டவுன்லோட் செய்து, ஸ்கேன்  செய்து, ஒரே தாளில் ஜன்னல் சைஸுக்கு (3'x5') ப்ரிண்ட் எடுத்து வந்தேன்.

முதலில் கிளாஸை எங்கே வைத்து வரைவது என்பதே பெரிய யோசனையாக இருந்தது. மடக்கும் கட்டிலை ஹாலில் விரித்து அதன் மேல் மெத்தையை விரித்து கிளாஸை அதன் மேல் வைத்தாயிற்று. பின் தேவைப்படும் எல்லா கிளாஸ் பெயிண்டிங் கலர்களை வாங்கி வந்தாச்சு. தேர்வு செய்த டிசைனை சிடி மார்க்கர் பேனாவால் கிளாஸில் வரைந்தாச்சு. தினமும் இரவு 7 மணிக்கு உட்கார்ந்தால் நடு இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ ஆகும். 

முதலில் பூக்களை கோல்டன் கலர் அவுட்லைனராலும், இலை மற்றும் தண்டை கருப்பு அவுட்லைனராலும்  வரைந்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக பூக்களும், இலைகளும் வண்ணம் பெற ஆரம்பித்தது. உயிர் பெற்றனவா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்:-) 


கிளாஸ் கலரில் டபுள் ஸேடு கொண்டு வருவது மிகவும் கஷ்டமான வேலை. இரண்டு, மூன்று கலர்களை மிக்ஸ் செய்து பூக்களும், இலைகளும் கொண்டு வருவதற்குள் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் போனேன். ஃபேன் போட்டால் கலர்கள் உலர்ந்து விடும். ஏசி ரூமுக்குள்ளும் அதே கதி  தான். அதனால், வியர்வை சொட்ட சொட்ட.... சொட்டும் வியர்வை கிளாஸிலும் படாமல் போடுவதற்குள் ரொம்பவே ரிஸ்க் எடுத்து விட்டோமோ என்று கூட தோன்றியது.


 அதிலும் முதலாவதாக வண்ணமிட்ட இந்தப் பூ மட்டும் எனக்கு ரொம்பவே பிடித்தது.


இடையில் இன்னொரு சோதனை. பூக்களுக்கு நான் போட்டு வந்த கலர் தீர்ந்து போய் இரண்டு இதழ்களுக்கு மட்டும் போட வேண்டிய நிலையில் கலர் கிடைக்காமல் கடை கடையாக அலைந்து கடைசியில் அந்தக் கலரை வாங்கி இதழை முடித்தேன்.


பார்டராக போட்ட பிரவுன் கலர்தான் என்னை ரொம்பவே படுத்தி விட்டது. மற்ற கலர்கள் போல் இல்லாமல் ரொம்ப திக்காக இருக்கவே, கலர் இறங்காமல் விரல்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்து விட்டது. இன்னுமே அந்த வலி சரியாகவில்லை.


ரிவர்ஸ் பெயிண்டிங் என்பதால் முழுவதும் முடித்த பிறகு தான் என்னாலேயே படத்தின் முன் பக்கத்தைப் பார்க்க முடிந்தது:-)


கிளாஸ் பெயிண்டிங்கில் பெரிய பிரச்னையே ஏர் பப்பிள்ஸ் தான். அதிலும் அவ்வளவு பெரிய பெயிண்டிங்கில் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் சில சின்ன சின்ன பப்பிள்ஸ் வரத்தான் செய்தது. எப்படியோ கிரகப்பிரவேசத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே பெயிண்டிங்கை முடித்து, காய்வதற்கு ஒரு நாள் டைம் விட்டு கிரகப்பிரவேசத்திற்கு முந்தின நாள் பெயிண்டிங்கை அனுப்பி வைத்து விட்டேன்.


 கிரகப்பிரவேசத்தன்று பெயிண்டிங் பொருத்தப்பட்ட ஜன்னலைப் பார்த்தபோது மனதில் ஏற்பட்ட திருப்திக்கும்,  சந்தோஷத்திற்கும் அளவே இல்லை.........  நண்பரின் பிரமாண்டமான வீட்டிற்கு இந்த பெயிண்டிங் மேலும் அழகு சேர்த்தது.

வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் பார்த்து வியந்து பாராட்டியதை நண்பர் சொன்ன பொழுது 10 நாட்களாக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து விட்டன.நீங்களும் பார்த்து ஏதாவது சொல்லி விட்டுப் போனால், இன்னும் சந்தோஷமாக இருக்கும்:-))

Tuesday, April 26, 2011

வந்தேன்...வந்தேன்....வந்தேன்....

                                                                   
வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் எனதன்பு வணக்கம்!!! மிக நீண்ண்ண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் முகம் காட்ட வந்துள்ளேன். நிறைய நாட்கள் கழித்து திரும்ப வந்திருக்கிறேன். பெண்ணின் விபத்துக்குப் பிறகு நான் திரும்பவும் வர வேண்டுமென நினைத்த போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. மனம் வெறுத்து எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட எண்ணியே முடிவெடுத்திருந்தேன். தோழி ஸாதிகாவின் வார்த்தைகளே திரும்ப என்னை இங்கே வர வைத்தது. நன்றி தோழி :-)

நான் பிளாக் துவங்கி ஒரு வருடமும் முடிந்து விட்டது. ஆனால், நான் போட்டிருப்பது என்னவோ வெறும் 50 பதிவுகளே! என்னால் மற்றவர்களைப் போல அடிக்கடி பதிவிடவும் முடிவதில்லை. ஆபீஸ் போய் வந்து, வீட்டு வேலைகள் முடித்து கிடைக்கும் சிறிது நேரத்தில் முன்பெல்லாம் கம்ப்யூட்டரே கதியென்று இருந்தேன். அதனால் மற்ற வேலைகள் எதையுமே கவனிக்க இயலாமல் கொஞ்ச காலம் போனது. ஆரம்பித்து வைத்திருந்த நிறைய வேலைகள் பாதியில் நின்று போயிருந்தது. கிடைத்த இந்த இடைவெளியில் அவைகளையாவது முடிக்க நினைத்தேன். ஓரிரு வேலைகளை முடிக்கவும் முடித்தேன். அவை என்னவென்று அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேனே:-)

இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கத்தான் செய்கிறது. அப்படிப் பார்த்தால் வேலைகள் முடியவும் போவதில்லை, நாமும் இப்போதைக்கு வரமுடியப் போவதில்லையென்று தோன்றியது. தோழி.ஸாதிகா என்னை இந்த 15 நாட்களாக ரொம்பவே எதிர்பார்த்திருப்பாங்க. அவர்களுக்காகவாவது விரைவில் இங்கு வர வேண்டும் என நினைத்தேன். இடையில் ஒரு முக்கியமான வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால், அதை நல்லவிதமாக முடித்த திருப்தியோடு இங்கு வந்திருக்கிறேன். என்னை ஞாபகம் வைத்து, இங்கு எட்டிப் பார்ப்பவர்கள் எல்லோரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க:-)


அட! மறந்துட்டேனே, திருப்தியோடு முடித்த வேலை என்னவென்று கண்டிப்பாக அடுத்த பதிவில்........

Saturday, January 15, 2011

;;