Thursday, November 4, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

Tuesday, July 6, 2010

நன்றி நவில்கிறேன்!!!!


என்னுடைய பிறந்த நாளன்று ஐம்பதாவது பதிவை போட்டு விட வேண்டுமென்று எண்ணி இருந்தேன். அதற்குள் ஏதேதோ நடந்து, அடுத்த பதிவே அன்று தான் போட முடிகிறது.

மருதாணி இட்ட கைகளின் படமும், பதிவும் போட்ட போது அடுத்த பதிவு அந்தக் கைக்கு ஆபரேஷன் ஆன செய்தியைப் பற்றித்தான் இருக்கும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. என் பெண் வாராவாரம் வீட்டிற்கு வருவது போல் தான் அந்த வாரமும் வீட்டிற்கு வருவதற்காக பஸ் ஏறிய அரை மணி நேரத்திற்குள்ளேயே அவள் ஏறிய பஸ் விபத்துக்கு உள்ளாகியது. கடந்த இருமுறையும் மற்றவர்களுக்கு அடிபட்ட போதெல்லாம் பெண்ணிற்கு அதிக அடியில்லாமல் தப்பித்துக் கொண்டாள். இந்த முறை மற்றவர்களுக்கெல்லாம் அதிகமாக அடிபடவில்லை. என் பெண்ணிற்கு மட்டுமே அதிகமான அடி.

நான்கு வழிச்சாலையிலும் விபத்து ஏற்படுத்த முடியுமென அதி வேகமாக பஸ்ஸை ஓட்டி முன்னால் சென்ற பஸ் பிரேக் போட்ட போது, கண்ட்ரோல் இல்லாமல் போய் முன்னால் சென்ற பஸ்ஸில் அடித்த டிரைவரைக் குற்றம் சொல்வதா? ஓடும் பஸ்ஸில் நின்று கொண்டும் கடலை போட்டுக் கொண்டு சரியாக கம்பியைப் பிடிக்காமல் என் பெண்ணின் கையின் மேல் விழுந்த மூன்று பேரை குற்றம் சொல்வதா? அவ்வளவு வேகமாக பிரேக் போட்டும் கம்பியை விடாமல் பிடித்திருந்த என் பெண்ணைக் குறை சொல்வதா? அது எப்படியோ, விழுந்தவர்களின் பாரம் தாங்காமல் இடது கை எலும்பு முழங்கைக்கு மேல் இரண்டாகவே ஒடிந்து விட்டது. அவ்வளவு வலியிலும் ஒடிந்த கையை பேக்கின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு எங்களுக்கு போன் செய்து விபரத்தை சொல்லி விட்டு, கிட்டதட்ட 2 மணி நேரம் கார் வரும் வரை காத்திருந்தது பெரிய விஷயம்.

மனிதாபிமானமே இல்லாமல் நட்ட நடு ரோட்டில் இரவு நேரத்தில் பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டு விட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ்ஸை எடுத்துக் கொண்டு போன கண்டக்டரையும், டிரைவரையும் என்ன சொல்வது? உடன் பயணித்த இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே துணைக்கு இருந்திருக்கிறார்கள். நல்லவர்களுக்கு நன்றி சொல்லி மகளை சென்னையின் பிரபல எலும்பு முறிவு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் சென்ற போது ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்குமென நாங்கள் நினைக்கவே இல்லை. ஆபரேஷன் செய்தால் தான் கை விரைவில் குணமாகும் என டாக்டர் சொல்ல, வேறு வழியின்றி இரண்டு நாட்கள் கழித்து (வீக்கம் குறைந்ததும்) ஆபரேஷன் நடந்தது. மூன்று நாட்கள் கழித்துதான் மகளையே கண்ணில் கண்டோம் (அந்தக் கதையை தனியாக சொல்கிறேன்).
                                                 (ஆபரேஷனுக்கு முன்பு)

இட்ட மருதாணி கூட அழியவில்லை. அந்தக் கை முழுவதும் கட்டுடன் பார்த்த போது கலங்கிய மனதை, பெண்ணின் முன் அழக் கூடாதென கஷ்டப்பட்டு தேற்றிக் கொண்டேன். ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து கட்டு பிரித்ததும் வீடு வந்தோம். பிசியோதெரபிஸ்ட் வந்து தினமும் கைக்கு பயிற்சி கொடுக்கிறார். தற்போது லீவில் தான் உள்ளாள். ஒரு மாதம் கழித்து திரும்ப செக்கப் போகும் போது டாக்டர் சொல்வதைப் பொறுத்துத்தான் ஆபீஸ் போக முடியும்.


அந்த நேரத்தில் என்னிடம் போன் செய்து விசாரித்தவர்களில் நிறையப் பேரை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. இங்கும், அறுசுவையிலும் என் மகளுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நெஞ்சம் நெகிழ நன்றி சொல்வதைத் தவிர நான் வேறு என்ன சொல்ல முடியும்? அவர்களும், அவர்களின் குடும்பமும் நலமாக இருக்க வேண்டுமேன நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் _()_


Tuesday, June 8, 2010

கைகளில் கை வண்ணம்!!!

சின்ன வயசிலிருந்தே எனக்கு மருதாணி வைத்துக் கொள்வதென்றால் ரொம்ப விருப்பம். மெஹந்தி கோனெல்லாம் இல்லாத காலத்தில் அரைத்த மருதாணியையே தீக்குச்சியின் பின்புறத்தால் கொடி போலெல்லாம் போட்டுக் கொள்வேன். எப்ப நேரம் கிடைத்தாலும் மெஹந்தி கோன் வாங்கி இட்டுக் கொள்வேன்.

நண்பரின் மகளுக்கு பிறந்தநாள் பரிசு வாங்க கடைக்கு போனபோது மெஹந்தி கோன் கண்ணில் பட்டது.  மெஹந்தி போட்டு ரொம்ப வருடமே ஆச்சேன்னு ஒரு கோன் வாங்கினேன். ஞாயிறு வரை காத்திருந்து, மதியம் சாப்பிட்டதும், மெஹந்தி போடலாமென்று கோனை எடுத்து வைத்தேன்.

பக்கத்தில் இருந்த என் பெண் பார்த்த பார்வை, 'நீ மட்டும் மெஹந்தி போட்டுக் கொள்ளப் போகிறாயா?' என்று கேட்டது. கார்ப்பரேட் ஆபீசில் வேலை செய்யும் அவள், மெஹந்தி போட்டுக் கொள்வாளா என்ற சந்தேகத்தோடு நீ வைத்துக் கொள்கிறாயா என்று கேட்டேன். அழகாக போட்டு விட்டால் வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னாள். எனக்குத் தெரிந்தவரை போடுகிறேன் என்று சொல்லி அவளின் இடது கையில் போட ஆரம்பித்தேன். ரொம்ப நாளாக வைக்காமல் இருந்து வைத்ததால் கைகளில் சிறிது தடுமாற்றம்.கோன் சின்னதாக இருக்கு, சரி, ஆளுக்கு ஒரு கைக்கு போட்டுக் கொள்ளலாமென நினைத்துக் கொண்டே ஒரு கையை போட்டு முடித்தேன். ரொம்ப குறைவாகவே கோனில் மீதி இருப்பது போல் தோன்றியது. எதற்கும் கேட்போமே என்று இன்னொரு கைக்கும் போடவா என்று பெண்ணிடம் கேட்டேன். உங்களுக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாள். சின்னப்பெண் கை அழகை விடவா நமக்கு முக்கியம் என்று ஆர்வத்துடன் அடுத்த கைக்கும் போட ஆரம்பித்து விட்டேன். கொஞ்சமாக மெஹந்தி இருக்கவே டிசைனை சுருக்கி ஒரு வழியாக கோன் காலியாகவும் நானும் முடிக்கவும் சரியாக இருந்தது.


கொஞ்சூண்டு மீதி கோனில் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் தோன்றவே, அதையும் விடாமல் என் கையில் போட்டு, என் ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டேன்.

இரண்டு மணி நேரம் கழித்து எடுத்தபின் பெண்ணின் கை அழகாக சிவந்து இருந்ததில், நல்லவேளை! இரண்டு கைக்குமாக போட்டு விட்டோமே என்று சந்தோஷப்பட்டேன்!!

 என் கைக்கும் நல்லா சிவந்து தானே இருக்கு :-)

Monday, May 31, 2010

பேரனின் பிறந்த நாள்.

இடைவேளை (!) முடிஞ்சு வந்தாச்சு. உறவினர்கள் வருகை, பேரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்தும் கடந்த ஒரு வாரமாக வேறு சில முக்கிய அலுவல் காரணமாக உடனே பதிவு போட முடியவில்லை.

மே 18ந் தேதி பேரனின் பிறந்த நாள் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் லானில் எல்லா ஏற்பாடுகளும் செய்ய, எங்களுக்கு முன் 'லைலா' "நானும் தான் கலந்து கொள்வேன்" என அடம் பிடிக்க, எல்லா ஏற்பாடுகளையும் அவசர அவசரமாக ஹாலுக்கு மாற்றும்படி ஆயிற்று. 'லைலா'வே வரும்போது நாங்கள் வர மாட்டோமா என விருந்தினர்களும் சரியான நேரத்திற்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.

பேரனின் பெயருக்கு ஏற்றவாறு 'ப்ரின்ஸ்' தீமில் (அவசரமாக) அலங்கரிக்க பட்ட ஹால்

வந்திருந்த அனைவருக்கும் வெல்கம் டிரிங்.


பலூனுடன் பர்த்டே பாய்.


என்ன செய்தாலும் முகம் காட்ட மறுக்கும் நல்ல பிள்ளை.கேக்கை க்ரவுன் வடிவத்தில் செய்ய சொல்லி ஆர்டர் கொடுத்தால், கேக்கில் க்ரவுனை மட்டும் வரைந்தே கொடுத்து விட்டார்கள்.
தயாராகவுள்ள பர்த்டே கேக்.


வந்திருந்தோர் அனைவரின் கைகளிலும் 'டாட்டூ' வரையப்பட்டது. 
இது ஜோவின் தாத்தாவின் கையில்.

ஜோவின் மாமா கையில்.எனது கையிலும் டாட்டூ புடவைக்கு மேட்சான கலரில்.

யாரோட டாட்டூ அழகாக இருக்கு? என் கையிலா? என் பெண்ணின் கையிலா?

சின்ன சின்ன விளையாட்டு போட்டிகளில் கலக்கிய குழந்தைகள் 'என்ன பரிசுகள் எனக்கு?' என ஆவலுடன்.

மழைக்கு இதமாக சூடான டின்னர் (ஸ்வீட் கார்ன் சூப், ருஸ்ஸியன் சாலட், க்ரிஸ்பி வெஜ் ஃப்ரை, ஆலு டிக்கா, தஹி வடை, புதினா பரோட்டா, ஃபுல்கா, ஜீரா ரைஸ், வெஜ் புலாவ், டால் மக்கானி, பனீர் கோலா க்ரேவி, பப்பட், கேரட் அல்வா, ஐஸ்க்ரீம்).


பேரனுடன் நான்.

 கொண்டாட்டங்கள் முடிந்து தூக்க கலக்கத்தில் ஜோ.


அடுத்த நாள் 'ஷோஹன்' சைனீஸ் ரெஸ்டாரென்டில் குழந்தைக்கான இருக்கையில் ஜோக்குட்டி.


Friday, May 14, 2010

இடைவேளை

என் தங்கைக்காக ஒரு புடவை எடுக்க நினைத்து தேடினேன். எனக்கு பிடித்த கலர், டிசைனில் குந்தன் ஸ்டோன் ஒர்க் இல்லை. ஸ்டோன் ஒர்க் செய்த புடவையின் கலரும், டிசைனும் எனக்குப் பிடிக்கவில்லை. யோசித்துக் கொண்டிருந்த போது, எதுக்கு யோசிக்கணும்? பிடிச்ச டிசைனில் புடவை எடுத்துகிட்டு,  அதில் ஸ்டோன் ஒர்க் செய்வது உங்களுக்கு கஷ்டமான்னு என் பெண்ணும், கணவரும் சொன்னார்கள். அந்த ஐடியாவும் சரியாகத் தோன்றவே, பிடிச்ச கலரில் புடவையை தேர்ந்தெடுத்தேன்.

புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்ய அதிகமாக ஒன்றும் செலவு இல்லை. ஏற்கனவே பெண்ணின் சுடிதாருக்காக வாங்கிய ஸ்டோன் மீதி வீட்டில் இருந்தது. ஃபெவிக்ளூவும் எப்போதும் வீட்டில் இருக்கும். எனக்கு தேவைப்பட்டது நேரமும், வேலை செய்ய கைகளும் தான். நேரம் தான் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. எப்படியோ இரண்டு நாட்களாக இரவு தூங்கும் நேரத்தில் மிச்சப்படுத்தி வேலையை முடித்து விட்டேன்!!

வாங்கிய புடவை 


 ஸ்டோன் ஒர்க் செய்ய தயாராக....

முழுவதும் ஸ்டோன் ஒட்டிய பின்.....புடவையின் முந்தானையில் உள்ள பூக்களில் மட்டும் கொஞ்சம் அதிகமாக ஸ்டோன் ஒட்டினேன்.புடவையின் கலர், டிசைன், ஸ்டோன் ஒர்க் எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க!!

அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்! ஒரு பத்து நாட்கள் நான் பிளாக் பக்கமே வரமுடியாது. பேரனின் பிறந்தநாளை முடித்துக் கொண்டு, நிறைய புது விஷயங்களோடு வருகிறேன்.
அதுவரைக்கும் என் வலைப்பூவிற்கு வரும் அனைவருக்கும் முன்னதாகவே நன்றி சொல்லிக் கொள்கிறேன்!!


Monday, May 10, 2010


பிளாக்கில் எழுதி ரொம்ப நாட்கள் ஆனது போல் இருக்கு. இன்னமும் இரண்டு வாரங்களுக்கு கொஞ்சம் அதிகமான வேலை தான். உறவினர் வருகை, பேரனின் பிறந்தநாள் எல்லாம் முடித்த பிறகு தான் நேரம் கிடைக்கும். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இந்தப் பதிவு.

வருடாந்திரப் பொருட்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது போல் இருக்குன்னு போன பதிவோடு முடித்து விடலாம் என்று இருந்தேன். ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல வந்தால் முழுவதும் சொல்லி முடித்தால் தானே உபயோகமாக இருக்கும். அது மட்டுமன்றி மேனகாவின் வேண்டுகோளும் முக்கிய காரணம்.

வருடாந்திரப் பொருட்கள் பாதுகாக்கும் முறை,பராமரித்தல்,சுத்தப்படுத்துதல் எல்லாம் சொல்லியாகி விட்டது. இந்தப் பகுதியில் எந்த அளவு வாங்குவது என்பது பற்றியும் சொல்லி விடுகிறேன்.

சராசரியாக 4 பேர் (2 பெரியவர்கள் + 2 சிறியவர்கள்) உள்ள குடும்பத்திற்கான, ஒரு வருடத்திற்கான அளவு இது. அவ்வப்போது வரும் விருந்தினர்களுக்கும் சேர்த்தே இருக்கும்.

அரிசி - 225 கிலோ (3 x 75 கிலோ),
இட்லி அரிசி - 50 கிலோ,
கோதுமை - 50 கிலோ,
துவரம் பருப்பு - 15 கிலோ (மாதம் ஒரு கிலோ + விருந்தினர் செலவு),
உளுத்தம் பருப்பு - 15 கிலோ,
கடலைப் பருப்பு - 3 கிலோ,
பாசிப்பருப்பு - 3 கிலோ,
புளி - 5 கிலோ,
மிளகாய் - 2 கிலோ,
கொத்தமல்லி (தனியா) - 3 கிலோ
கடுகு - 2 கிலோ,
சீரகம் - 2 கிலோ (தினமும் ரசம் வைப்பதாக இருந்தால் 2 கிலோ,  இல்லைன்னா ஒரு கிலோ போதும்),
மிளகு -1/2 கிலோ,
சோம்பு - 1/2 கிலோ,
வெந்தயம் - 2 கிலோ,
கசகசா -1/2 கிலோ,
மஞ்சள் தூள் - 1/2 கிலோ,
பொட்டுக்கடலை - 5 கிலோ,
நிலக்கடலை - 2 கிலோ,
கொண்டக்கடலை - 2 கிலோ,
பச்சைப் பட்டாணி - 2 கிலோ,
பாசிப்பயிறு (முழு) - 2 கிலோ,
தட்டைப்பயிறு (காராமணி) - 2 கிலோ,
கொள்ளு - 2 கிலோ,
ராகி (கேழ்வரகு)- 5 கிலோ,
வெள்ளை சோயா - 2 கிலோ,
கருப்பு சோயா - 1 கிலோ,
மொச்சை - 1 கிலோ,
சின்ன ஜவ்வரிசி - 2 கிலோ (உப்புமா செய்வதற்கும், பணியாரம், இட்லிக்கு மாவு அரைக்கும் போது சேர்க்க),
கெட்டி அவல் - 2 கிலோ,
மீல் மேக்கர் -1 கிலோ,
பட்டை - 25 கிராம்,
ஏலக்காய் - 25 கிராம்,
கிராம்பு - 25 கிராம்,
பிரிஞ்சி இலை -5 கிராம்,
அன்னாசிப்பூ - 25 கிராம்,
மராட்டி மொக்கு - 25 கிராம்.

வருடத்திற்கும் தேவையான சாம்பார் பொடி அரைப்பதற்கு போதுமான மிளகாயும், தனியாவும் இதனுடன் சேர்ந்துள்ளது. சாம்பார் பொடி அரைக்கவில்லையெனில். ஒரு கிலோ மிளகாயையும், ஒரு கிலோ தனியாவையும் குறைத்துக் கொள்ளலாம்.

எனக்குத் தெரிந்தவரை எல்லாப் பொருட்களையும் கொடுத்துள்ளேன்.விடுபட்டவை எதுவும் இருந்தால் ஞாபகம் வரும் போது சொல்கிறேன். இங்கு கொடுக்கப்பட்ட அளவுகள் தோராயமான அளவு தான். இதிலுள்ள பொருட்களை கூட்டி, குறைத்து வாங்குவது அவரவர் விருப்பம்.

அரிசி மற்றும் கோதுமை தவிர்த்து எஞ்சிய பொருட்கள் வாங்க இந்த வருடம் சுமார் நான்காயிரம் ரூபாய் தேவைப்படும். அரிசியும், கோதுமையும் தரம் பொறுத்து விலை மாறும். மற்ற பொருட்களும் வெவ்வேறு தரத்தில் உள்ளன. இது முதல்   தரத்திற்கான விலை. வருடம் ஒரு முறை வாங்குவதால், விலையைப் பார்க்கக் கூடாது. விலை குறைவென தரக்குறைவான பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனமல்ல.

மொத்தமாக, சீசனில் வாங்குவதால் பின்னாளில் வரக்கூடிய விலையேற்றத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வருடம் ழுழுமைக்கும் ஒரே மாதிரியான பொருட்கள் இருப்பதால் சமைப்பதற்கு தேவையான அளவுகளும் மாறாது. ருசியும் மாறாது.

கிடைக்ககூடிய இடங்கள் என்றால், எனக்குத் தெரிந்தவை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்.

1) ஈரோடு அருகே அந்தியூர் சந்தையில் எல்லாப் பொருட்களும் தரமானதாகக் கிடைக்கும்.

2) இராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி சந்தையில் நல்ல பொருட்கள் கிடைக்கும். ஆனால், கொஞ்சம் விழிப்புடன் வாங்க வேண்டும். நன்கு தெரிந்தவர்கள் யாரேனும் கூட இருந்தால் நலம்.

3) சேலத்தில் லீ பஜார் என்னுமிடத்தில் எல்லாம் கிடைக்கும்.

4) கரூர், திண்டுக்கல்லில் மிளகாய் மட்டும் கிடைக்கும்.

5) சில டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் சீசனில் இதற்கென தனி பிரிவே இருக்கும். அங்கேயே சில்லறையில் வாங்குவதற்கும், மொத்த பொருட்கள் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் உண்டு.

இவ்வளவு பொருட்களை நாம் முன் கூட்டியே வாங்கி விடுவதால், மாதாந்திர மளிகை லிஸ்ட்டில் கணிசமான தொகை குறையும். இவை போக ரவை, மைதா, எண்ணெய் வகைகள், சோப், பேஸ்ட் போன்றவைகள் மட்டும் வாங்கினால் போதும்.

கூடுமானவரை எல்லா விளக்கங்களும் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். அடுத்த பகுதி என்னவாக இருக்கும்னு யோசிச்சுகிட்டேஏஏஏஏஏ இருங்க:-)

Saturday, May 1, 2010

காணாமற் போன ரகசியம்...

ஒரு பதினைந்து நாட்களாக பிளாக்குக்கு மட்டுமன்றி, அங்கு இங்கென எங்கும் போக முடியாதபடி வேலை....வேலை...வேலை. அப்படி என்னதான் பெரிய வேலை என்கிறீர்களா? வருடாந்திர பொருட்கள் வாங்குங்கன்னு எல்லாருக்கும் சொன்னால் போதுமா? நானும் அந்த வேலையை செய்ய வேண்டுமே!

வருடாவருடம் வாங்குவது தான் என்றாலும், இந்த வருடம் பொருட்கள் வீடு வந்து சேர கொஞ்சம் தாமதம். தங்கை வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து வருவதில் ஆரம்பித்த வேலை இன்னும் முடியவில்லை.

கவருடன் வாங்கி வந்த பொருட்கள் காய வைப்பதற்கு தயாராக ....


வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கும் பொருட்கள்.....(பாதிப் பொருட்களின் படம் மட்டுமே போட்டுள்ளேன்).

கல் அரித்து, கழுவி முதல் நாள் துணியில் போட்டு காயவைத்து, அடுத்த நாள் தட்டில் காய வைக்கப்பட்டிருக்கும் கடுகு. 


காய வைத்து ஆற வைக்கப்பட்டிருக்கும் பருப்பு.


 ஆறிய பின் முதலில் புடைத்து....

பிறகு சல்லடையில் சலித்து சுத்தம் செய்யப்படுகிறது.


பொருட்கள் போட தயாராக கழுவி, காய வைத்து, ஆறிக் கொண்டிருக்கும் பாட்டில்களும், டப்பாக்களும்.


காய வைத்த புளி உப்பு சேர்த்து, உருண்டைகளாக்கி வைக்கப்பட்டுள்ளது. கவரில் போட்டு ஃபிரீஸரில் அடுக்கப்பட காத்திருக்கிறது.


சாமான்களை டப்பாக்களில் போட்டு ஷெல்ஃபில் அடுக்கியாச்சு.


தினப்படி உபயோகத்திற்கென்று வெளியே வைக்கப் பட்டிருக்கும் பொருட்கள்.


 
சமைக்கப் போவதும், சமைத்ததும் பிறகு வரும் படங்கள் காட்டும்:-)

இந்தப் பதிவு பார்த்துட்டு ஏதாவது சொல்லிட்டு போனால், கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கும் சமைச்சு தருவேன் ;-)

;;