Wednesday, February 3, 2010

லவ் பேர்ட்ஸ் - பகுதி 1

எல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன்.


நான் முதலில் வளர்க்கணும் நினைச்சது லவ் பேர்ட்ஸ் தான். பெட் அனிமல்னாலே சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற சிரமங்கள் இருக்குமேன்னு அந்தப் பக்கமே போகக் கூடாதுன்னு நினைச்சேன்.

பையன் மீன் தொட்டி வேணும்னு கேட்ட போது கூட ரொம்ப யோசிச்சு, எல்லாம் அவன் பொறுப்புன்னு சொல்லி ஒரு கிறிஸ்மசுக்கு வாங்கி கிஃப்டா கொடுத்தோம்.   மீன் செத்துப் போகும், திரும்ப வாங்கி விடுவான், செத்துப் போகும் இப்படியே போய் அவனே வெறுத்து கடைசியில் காலியாகவே விட்டுட்டான்.

பையனும் அந்த வருடம் ஸ்கூல் முடித்து காலேஜில் சேர வெளியூர் போய்ட்டா, நாம மட்டும் தனியா இருக்கணுமேன்னு கவலையா இருந்துச்சு. அப்பதான் இவர் என் பர்த்டேக்கு என்ன வேணும்னு கேட்டார். லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடி வேணும்னு கேட்டேன். அழகா கூண்டோடு வாங்கிக் கொடுத்தார். லவ்பேர்ட்ஸ் முட்டை வைத்து, குஞ்சு பொரித்து பெரிய குடும்பமா ஆனது போல் கனவெல்லாம் வந்தது.ரெண்டு லவ் பேர்ட்ஸும் பச்சையும், மஞ்சளும் கலந்த குட்டி குருவிகள். குட்டியாக இருந்ததால் கொத்தாமல் இரண்டுமே என் கையை நீட்டினால் ஏறி உட்கார்ந்து கொள்ளும். ஃபேனை நிறுத்தி விட்டு, எல்லாக் கதவையும் அடைத்து விட்டு கூண்டை திறந்து விட்டால் போதும். இரண்டும் கூண்டு மேலே வந்து உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருக்கும். விளையாடியது போதும், உள்ளே போங்கள் என்று சொன்னால் போய்விடும். கதவை சாத்தி விடுவோம். அதிலும் முழுவதும் மஞ்சளாக இருக்கும் குருவி தான் எங்களின் பெட். கைகளில் ஏறி விளையாடும். பச்சை கலந்த குருவி கொஞ்சம் பயப்படும். நான் ஆபீசில் இருந்து வந்தால் போதும். கூண்டின் ஓரம் வந்து இதுக்கும், அதுக்கும் நடந்து என்னைக் கூப்பிடும். நான் மறுபுறம் போய் நின்றால் எப்படியோ கண்டு அங்கும் வந்துவிடும். கீழே உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டு இருந்தால் எட்டிக் கூப்பிடும். கீரை, கொத்தமல்லித் தழைன்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க.


எங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஆஸ்பிட்டலிலேயே ஒன்றரை மாதம் இருக்க வேண்டி வந்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்த அன்று என்னைப் பார்த்ததும் இங்கும் அங்கும் ஓடி மஞ்சள் குருவி கத்திய கத்தல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரை ஸ்டெரச்சரோடு மேலே தூக்கி வர வந்த எங்கள் ஆபீஸ் நண்பர்கள் அப்படி ஆச்சரியப்பட்டார்கள். கையில் எடுத்ததும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது. ஆறறிவு இருக்கும் மனிதர்களிடம் உள்ள அன்பை விட, அந்தப் பறவைகள் காட்டிய பாசத்தில் அன்று நெகிழ்ந்து அழுதே விட்டேன். நாங்கள் எவ்வளவோ நல்லது செய்தவர்கள் கூட, எங்களை ஆஸ்பிட்டலில் வந்து பார்க்காத ரணம், இந்தக் குட்டிக் குருவிகள் காட்டிய அன்பில் மறந்தது.

வாங்கி ரொம்ப நாளாச்சே, இன்னும் முட்டை வைக்கலையேன்னு ஒரே யோசனையாக இருந்தது. அப்போது தான் அவருக்கு பயிற்சி கொடுக்க எங்க வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிசியோதெரபிஸ்ட் சொன்னார், இரண்டுமே ஆண் குருவிகள் என்று. ஏதாவது ஒன்றைக் கொடுத்து விட்டு வேறு பெண் குருவி மாற்றி வந்து விடுங்கள் என்று சொன்னார். இரண்டுமே எங்களுக்குப் பிடிச்சது. எதைக் கொடுக்க? கூண்டை வேணா பெரிசா மாற்றலாம்னு யோசித்துக் கொண்டிருந்தோம். விபத்தின் தாக்கம் குறையாததால் அவர் முதலில் நடக்கட்டும்,பிறகு பார்க்கலாம்னு இருந்தோம். அப்போது தான்,

அந்த சம்பவம் நிகழ்ந்தது......

மீதி சிறிய இடைவேளைக்குப் பின்..........

;;