Tuesday, July 6, 2010

நன்றி நவில்கிறேன்!!!!


என்னுடைய பிறந்த நாளன்று ஐம்பதாவது பதிவை போட்டு விட வேண்டுமென்று எண்ணி இருந்தேன். அதற்குள் ஏதேதோ நடந்து, அடுத்த பதிவே அன்று தான் போட முடிகிறது.

மருதாணி இட்ட கைகளின் படமும், பதிவும் போட்ட போது அடுத்த பதிவு அந்தக் கைக்கு ஆபரேஷன் ஆன செய்தியைப் பற்றித்தான் இருக்கும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. என் பெண் வாராவாரம் வீட்டிற்கு வருவது போல் தான் அந்த வாரமும் வீட்டிற்கு வருவதற்காக பஸ் ஏறிய அரை மணி நேரத்திற்குள்ளேயே அவள் ஏறிய பஸ் விபத்துக்கு உள்ளாகியது. கடந்த இருமுறையும் மற்றவர்களுக்கு அடிபட்ட போதெல்லாம் பெண்ணிற்கு அதிக அடியில்லாமல் தப்பித்துக் கொண்டாள். இந்த முறை மற்றவர்களுக்கெல்லாம் அதிகமாக அடிபடவில்லை. என் பெண்ணிற்கு மட்டுமே அதிகமான அடி.

நான்கு வழிச்சாலையிலும் விபத்து ஏற்படுத்த முடியுமென அதி வேகமாக பஸ்ஸை ஓட்டி முன்னால் சென்ற பஸ் பிரேக் போட்ட போது, கண்ட்ரோல் இல்லாமல் போய் முன்னால் சென்ற பஸ்ஸில் அடித்த டிரைவரைக் குற்றம் சொல்வதா? ஓடும் பஸ்ஸில் நின்று கொண்டும் கடலை போட்டுக் கொண்டு சரியாக கம்பியைப் பிடிக்காமல் என் பெண்ணின் கையின் மேல் விழுந்த மூன்று பேரை குற்றம் சொல்வதா? அவ்வளவு வேகமாக பிரேக் போட்டும் கம்பியை விடாமல் பிடித்திருந்த என் பெண்ணைக் குறை சொல்வதா? அது எப்படியோ, விழுந்தவர்களின் பாரம் தாங்காமல் இடது கை எலும்பு முழங்கைக்கு மேல் இரண்டாகவே ஒடிந்து விட்டது. அவ்வளவு வலியிலும் ஒடிந்த கையை பேக்கின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு எங்களுக்கு போன் செய்து விபரத்தை சொல்லி விட்டு, கிட்டதட்ட 2 மணி நேரம் கார் வரும் வரை காத்திருந்தது பெரிய விஷயம்.

மனிதாபிமானமே இல்லாமல் நட்ட நடு ரோட்டில் இரவு நேரத்தில் பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டு விட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ்ஸை எடுத்துக் கொண்டு போன கண்டக்டரையும், டிரைவரையும் என்ன சொல்வது? உடன் பயணித்த இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே துணைக்கு இருந்திருக்கிறார்கள். நல்லவர்களுக்கு நன்றி சொல்லி மகளை சென்னையின் பிரபல எலும்பு முறிவு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் சென்ற போது ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்குமென நாங்கள் நினைக்கவே இல்லை. ஆபரேஷன் செய்தால் தான் கை விரைவில் குணமாகும் என டாக்டர் சொல்ல, வேறு வழியின்றி இரண்டு நாட்கள் கழித்து (வீக்கம் குறைந்ததும்) ஆபரேஷன் நடந்தது. மூன்று நாட்கள் கழித்துதான் மகளையே கண்ணில் கண்டோம் (அந்தக் கதையை தனியாக சொல்கிறேன்).
                                                 (ஆபரேஷனுக்கு முன்பு)

இட்ட மருதாணி கூட அழியவில்லை. அந்தக் கை முழுவதும் கட்டுடன் பார்த்த போது கலங்கிய மனதை, பெண்ணின் முன் அழக் கூடாதென கஷ்டப்பட்டு தேற்றிக் கொண்டேன். ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து கட்டு பிரித்ததும் வீடு வந்தோம். பிசியோதெரபிஸ்ட் வந்து தினமும் கைக்கு பயிற்சி கொடுக்கிறார். தற்போது லீவில் தான் உள்ளாள். ஒரு மாதம் கழித்து திரும்ப செக்கப் போகும் போது டாக்டர் சொல்வதைப் பொறுத்துத்தான் ஆபீஸ் போக முடியும்.


அந்த நேரத்தில் என்னிடம் போன் செய்து விசாரித்தவர்களில் நிறையப் பேரை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. இங்கும், அறுசுவையிலும் என் மகளுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நெஞ்சம் நெகிழ நன்றி சொல்வதைத் தவிர நான் வேறு என்ன சொல்ல முடியும்? அவர்களும், அவர்களின் குடும்பமும் நலமாக இருக்க வேண்டுமேன நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் _()_


;;