Sunday, April 25, 2010


பதிவு போட்டு ரொம்ப நாளாகி விட்டது. ஊருக்கு போனது, பேரன் வந்தது எல்லாம் போக, இங்கு சொல்லியவைகளை நான் செய்து கொண்டு இருப்பதும் நேரம் இல்லாததற்கு ஒரு காரணம். புரியலையா? வருடாந்திர சாமான்கள் வாங்கியாச்சு. காய வைத்து சுத்தம் செய்யணும். போட்டு வைக்கும் பாத்திரங்களை கழுவி காய வைக்கணும். வைக்கும் இடத்தை துடைத்து அடுக்கணும். எவ்வளவு வேலைகள்? அப்படி தான் இப்ப தோணும். ஆனால், சாமான்கள் வீட்டில் இருந்தால் மன மகிழ்ச்சியோடு சமைப்பதே தனி சுகம் தான்.

வருட சாமான்கள் வாங்க சரியான பருவம் மாசி மாதம் கடைசி முதல் பங்குனி மாதம் முதல் பாதி வரை (பிப்ரவரி 15 தேதியில் இருந்து மார்ச் 15 தேதி வரை) எப்படி பாதுகாப்பதுன்னு போன பதிவில் சொன்னேன். எப்படி பார்த்து வாங்கணும்னு  இப்ப சொல்றேன்.

அரிசி அவரவர் விருப்பம்.வெள்ளைப் பொன்னி, கர்நாடகா பொன்னி, ஆத்தூர் கிச்சடி, மணச்சநல்லூர் பொன்னி இதெல்லாம் சாப்ப்பாட்டுக்கு நன்றாக இருக்கும். பவானியும் நன்றாக இருக்கும். சாதம் நீளநீளமாக இருக்கும். சிலருக்கு பிடிக்காது. 

இட்லிக்கு ஐ.ஆர்.20 நன்றாக இருக்கும். நிறையப் பேர் கார் அரிசி என்று சொல்லப்படும் குண்டு அரிசியை பயன்படுத்துவார்கள். அந்த அரிசி மாவு காணும். ஆனால், ஐ.ஆர்.20 தான் இட்லி சாஃப்டாக இருக்கும்.

துவரம் பருப்பில் பச்சைபருப்பு அதிகம் கலக்காத, பாலிஷ் போடாத பருப்பு என்றால் தான் சாம்பார் ருசியாக இருக்கும். பருப்பு சிறிதும், பெரிதுமாக இல்லாமல் ஒன்று போல் இருக்க வேண்டும். சொத்தையான வெள்ளைப் பருப்பு, ஓட்டைப் பருப்பு இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். பருப்பில் தோல் அதிகம் ஒட்டி இருக்கக் கூடாது.

உளுத்தம் பருப்பு பார்க்கும் போதே ஒரு பளபளப்பு தெரியணும். அள்ளினால் நல்லா மாவு போல் வெள்ளையாக கையில் ஒட்டணும். சிலர் முழு உளுந்து வாங்கி உடைத்துக் கொள்வார்கள். அதற்கு தண்ணீர் குறைவான இடத்தில் விளைந்த பயிறே நன்றாக இருக்கும். முழு உளுந்தில் நல்லெண்ணெய் தடவி ஒரு நாள் முழுவதும் காய வைத்து, திருகு கல்லில் போட்டு  உடைத்து, அதற்கென உள்ள சல்லடையில் சலிப்பார்கள். இப்பல்லாம், மிஷனில் கூட உடைத்து தருகிறார்கள். ஆனால், தோலை கழுவி எடுப்பதே பெரிய வேலையாக இருக்கும். சிலர் உடைத்த தோலுடன் கூடிய பருப்பும் வாங்குவார்கள். அதற்கு   தோல் நல்ல கருப்பாக இருப்பதாக பார்த்து வாங்கணும்.

கடலைப்பருப்பு பெரிதாக இல்லாமல் சிறு பருப்பாக ஒன்று போல் இருக்கணும். கொஞ்சம் லேசாக மினுமினுப்பு இருக்கும்.  ஓட்டை, தோல் இருக்கக் கூடாது.

பாசிப்பருப்பு பெரிதாக இருந்தால் சுவை இருக்காது. சிறிசாக இருக்கணும். வெள்ளை கலராக இல்லாமல் மஞ்சள் கலராக இருக்கணும். பச்சை தோல் இருக்கக் கூடாது.

கொத்தமல்லி ரொம்ப பொடியாக இல்லாமல் கொஞ்சம் பெரிசா இருந்தால் தான் மணமாக இருக்கும். அள்ளும் போதே  மணக்கும். அதிகம் களிமண் உருண்டைகள், குச்சி, தூசு இல்லாமல் பார்த்து வாங்கணும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுன்னு சும்மாவா சொன்னாங்க? சிறு கடுகு தான் நல்லது. கொஞ்சம் பெரிதாக இருந்தால், தாளித்ததும் முழிமுழிச்சு பார்த்துகிட்டு இருக்கும்:-) நிறைய பேருக்கு அது பிடிக்காது. கல், மண் இல்லாமல் பார்த்து வாங்கணும் (எப்படியும் இருக்கும், குறைவாக இருப்பதாக பார்க்கணும்).

மிளகாய் குண்டு மிளகாயை விட நீள மிளகாய் தான் தினசரி உபயோகத்திற்கு நல்லது. பொடி அரைக்கவும் நீள மிளகாய் தான் நல்லது. செத்துப் போன மிளகாய் அதிகம் இல்லாமல் பார்க்க நல்ல சிவப்பு கலராக, ஆட்டிப் பார்த்தால் நிறைய விதை ஆடுவது
போல இருக்கணும்.

புளி வரட்டு வரட்டுன்னு இல்லாமல் நல்லா சதைப்பிடிப்பாக இருக்கணும். கொட்டை, கோது அதிகம் இல்லாமல் சுத்தமாக இருக்கான்னு பார்க்கணும். புளியை சிறிது வாயில் போட்டு பார்த்தால் புளிப்பும் இருக்கணும், லேசான இனிப்பும் கலந்து ருக்கணும். புளிப்பு மட்டும் இருந்தால் குழம்பு வெடிப்பாக இருக்கும். கண் அடிக்க வைக்கும்;-) இனிப்பாக இருந்தாலும் குழம்பு  இனித்துக் கொண்டு சுவை இருக்காது.

தட்டப்பயிறு (காராமணி) இளம் சிவப்பில் ஒன்று போல் முத்தாக இருக்கணும். ஓட்டை இருக்கக் கூடாது. அதிகம் பிஞ்சு பயிறு இருக்கக் கூடாது. பாசிபயிறும் பச்சைக்கலரில் ஒரே சைஸில் இருக்கணும். வெள்ளை கோடு அதிகம் தெரியக் கூடாது.

கொண்டக்கடலை அதிக சுருக்கம் இல்லாமல், ஓட்டை இல்லாமல் பெரிசு பெரிசா இருக்கணும்.

பொட்டுக்கடலை பெரிசு பெரிசாக இருக்கணும். பொடியாக இருந்தால் பிஞ்சு கடலையை வறுத்ததுன்னு அர்த்தம். கையில் நசுக்கினால் பொருபொருன்னு பொடியாகணும்.

சீரகம் சன்னமாக, லேசாக தேய்த்து முகர்ந்தாலே மணக்கணும். கருப்பா இருந்தால் அது பழைய சீரகம். புதுசுன்னா ஒரு மாதிரி  பிரவுனாக இருக்கணும்.

சோம்பு பச்சை கலரில் இருக்கணும். மஞ்சளாக இருந்தால் அது பழசு. ஒன்று போல் இருக்கணும். பிஞ்சு அதிகம் கலந்து ஏமாற்றி விடுவார்கள். பார்த்து வாங்கணும்.

கசகசா மண் போல கலரில் இல்லாமல், வெள்ளையாக இருக்கான்னு  பார்த்து வாங்கணும்.

மிளகு சுருக்கம் அதிகம் இல்லாமல், மணமாக, நல்ல கருப்பு நிறத்தில் இருக்கணும்.

ஏலக்காய் பச்சை கலரில் திரண்டு இருக்கணும்.

வெந்தயம் மஞ்சள் வண்ணத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்பாக இருப்பது போல் இருக்கணும். பச்சை அதிகம் கலந்து இருக்கக் கூடாது.

வாங்கும் பருவம் முடிந்து விட்டதேன்னு நினைக்க வேண்டாம். இப்பக் கூட ஒண்ணும் மோசமில்லை. பருப்பு விலை ஏறி, திரும்பவும் இறங்கி உள்ளது. புளி விலையும் குறைந்து உள்ளது. மற்ற பொருட்களின் விலை ரொம்ப அதிகமாக ஏறவில்லை. வாங்கணும்னு நினைப்பவர்கள் இப்பவும் வாங்கலாம்.


பி.கு: இதையும் எந்தப்   புத்தகத்திலிருந்தாவது  காப்பி  அடிச்சு போட்டேனான்னு   சொல்வாங்களான்னு  பார்ப்போம்:-)

Saturday, April 10, 2010

எந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன். உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓரிருவருக்காவது பயன்பட்டால் சந்தோஷமே. வெளிநாட்டில் இருப்பவர்கள் இதனைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு இப்படி மொத்தமாக வாங்கி வைப்பது தான் நல்லதாக இருக்கும்.

இந்தப் பருவத்தில் எல்லாப் பொருட்களின் விலையும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இன்னொன்று மொத்தமாக வாங்குவதால், பொருட்கள் ஒரே மாதிரி இருக்கும். மாதாமாதம் வாங்கும் போது உளுத்தம்பருப்பே ஒரு மாதம் மாவு காணும். அடுத்த மாதம் சரியாக இருக்காது. முதல் மாதம் போல் போட்டால் சரி வராது. மிளகாய், புளி, கடுகு வகைகளும் அப்படியே. ஒரு வகை மிளகாய் காரம் அதிகமாக இருக்கும். சிலவகை காரமே இருக்காது. மொத்தமாக வாங்கி பயன்படுத்தும் போது ஒரே நாளில் நிதானம் தெரிந்து விடும். பிறகு எவ்வளவு பேர் வந்தாலும் சரியாக சமைக்க முடியும்.

தினப்படி உபயோகத்திற்கென்று கொஞ்சமாக எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு பொருளை எடுப்பதானாலும் ஈரக்கையால் எடுக்காமல், சுத்தமான உலர்ந்த கையால் எடுக்க வேண்டும். தினப்படி உபயோகத்திற்கென முன்னால் வைக்கும் பொருட்கள் தீர்ந்து போகப் போகிறதென்றால், கொஞ்சம் முன்பே நிதானமாக பெரிய கண்டெயினரில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் போது அவசரம் அவசரமாக எடுத்தால் தண்ணீர் ஏதும் படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

காய வைத்த பொருட்கள் நன்கு ஆறியபின் தான் டப்பாக்களில் போட வேண்டும். டப்பாக்களையும் நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, சூடு ஆறிய பின் தான் பொருட்களை கொட்ட வேண்டும்.

எந்தெந்த சாமான்களை எப்படி பாதுகாப்பாதுன்னு இந்த பகுதியில் சொல்லப் போகிறேன்.உண்மையில் எத்தனை பேருக்கு இது பயன்படும்னு தெரியலை. இருந்தாலும் ஓரிருவருக்காவது பயன்பட்டால் சந்தோஷமே. வெளிநாட்டில் இருப்பவர்கள் இதனைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு இப்படி மொத்தமாக வாங்கி வைப்பது தான் நல்லதாக இருக்கும்.

இந்தப் பருவத்தில் எல்லாப் பொருட்களின் விலையும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இன்னொன்று மொத்தமாக வாங்குவதால், பொருட்கள் ஒரே மாதிரி இருக்கும். மாதாமாதம் வாங்கும் போது உளுத்தம்பருப்பே ஒரு மாதம் மாவு காணும். அடுத்த மாதம் சரியாக இருக்காது. முதல் மாதம் போல் போட்டால் சரி வராது. மிளகாய், புளி, கடுகு வகைகளும் அப்படியே. ஒரு வகை மிளகாய் காரம் அதிகமாக இருக்கும். சிலவகை காரமே இருக்காது. மொத்தமாக வாங்கி பயன்படுத்தும் போது ஒரே நாளில் நிதானம் தெரிந்து விடும். பிறகு எவ்வளவு பேர் வந்தாலும் சரியாக சமைக்க முடியும்.

தினசரி உபயோகத்திற்கென்று கொஞ்சமாக எடுத்து வைத்து பயன்படுத்த வேண்டும். எந்த ஒரு பொருளை எடுப்பதானாலும் ஈரக்கையால் எடுக்காமல், சுத்தமான உலர்ந்த கையால் எடுக்க வேண்டும். தினசரி  உபயோகத்திற்கென முன்னால் வைக்கும் பொருட்கள் தீர்ந்து போகப் போகிறதென்றால், கொஞ்சம் முன்பே நிதானமாக பெரிய கண்டெயினரில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் போது அவசரம் அவசரமாக எடுத்தால் தண்ணீர் ஏதும் படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

காய வைத்த பொருட்கள் நன்கு ஆறியபின் தான் டப்பாக்களில் போட வேண்டும். டப்பாக்களையும் நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, சூடு ஆறிய பின் தான் பொருட்களை கொட்ட வேண்டும்.

அரிசி:
====

அரிசியை வாங்கி சாக்குடன் வைக்காமல் 2 நாட்கள் தனி அறையில் கொட்டி வைத்திருந்து (முடிந்தால் புடைத்து) பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் கண்டெயினர்களில் கொட்டி வைக்கணும். இடையிடையே நன்கு காய்ந்த மிளகாயை போட வேண்டும். வசம்பை ஒரு துணியில் முடிந்து உள்ளே புதைத்தும் வைக்கலாம். நன்கு காய்ந்த வேப்பிலையை அடியில் போட்டு மேலே பேப்பர் போட்டு அதன் மேலும் அரிசி கொட்டலாம். இப்படி வைத்தால் வருடத்திற்கும் அரிசியில் வண்டு வைக்காது. தினப்படி உபயோகத்திற்கு சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாக எடுத்து வைத்து உபயோகிக்கணும்.


பருப்பு வகைகள்:
============

பருப்பு வகைகளை வாங்கி சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைக்கவும். வெயிலில் இருந்து எடுத்து நன்றாக ஆற விடவும். பருப்பு போட்டு வைக்கப் போகும் பாத்திரங்களை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து, ஆற வைத்து இடைக்கு இடை காய்ந்த மிளகாய் போட்டு டைட்டாக மூடி வைக்கவும். உபயோகிக்க தனியாக ஒரு கிலோ அளவுக்கு சின்ன டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தீர்ந்த பின் ஈரமில்லாத கையால் எடுத்துக் கொண்டு மீண்டும் இறுக்கமாக மூடி வைத்தால் வண்டு, பூச்சி வரவே வராது.

கடுகு:
====

கடுகை தண்ணீரில் கழுவி கல் அரித்து, தண்ணீரை வடித்து 2, 3 நாட்களுக்கு நன்கு காய வைத்து, ஆற விட்டு டப்பாவில் போட்டு வைக்கணும். தினப்படி உபயோகத்திற்கு கொஞ்சம் சின்ன டப்பாவில் வைத்துக் கொள்ளணும்.

மசாலா பொருட்கள்:
==============

சீரகம், சோம்பு, கசகசா, வெந்தயம், மிளகு போன்றவற்றை சுத்தப்படுத்தி, நன்கு வைத்து சூடு ஆறிய பின், சுத்தமாக கழுவி காய வைத்து ஆற வைத்த டப்பாக்களில் போட்டு வைத்து விட்டால் வருடமும் கெடாமல் இருக்கும்.


கொத்தமல்லியை சுத்தம் செய்து பாதியை வறுத்து வைத்துக் கொண்டு மீதியை நன்கு காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

மிளகாய்:
=======

மிளகாயை காய வைத்து காம்பை நீக்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கணும். பாலிதீன் கவர்களில் போட்டு இறுக கட்டியும் டப்பாக்களில் போடு வைக்கலாம். காம்புடன் வைத்தால் வண்டு வரும் வாய்ப்பு உள்ளது.

புளி:
===

புளியை நன்கு காய வைத்து கொட்டை, தூசு, கோது நீக்கி, கல் உப்பு சிறிது சேர்த்து ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக்கி சுத்தமான பிளாஸ்டிக் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி, ஃபிரீஸரில் அடுக்கி வைத்து விட்டால் வருடம் முழுவதும் நிறம் மாறாத புது புளியாக இருக்கும்.

சோயா, சுண்டல், பொட்டுக்கடலை போன்றவைகளை நன்கு காயவைத்து ஆறியபின் டப்பாக்களில் போட்டு வைக்கலாம்.

வருட சாமான்கள் வாங்கிய பின் சாம்பார் பொடிக்கும் வறுத்து அரைத்து வைத்து விடலாம். (எங்கம்மா அரைக்கும் சாம்பார் பொடி ஒரு வருடமே ஆனாலும் வண்டு வைக்காமல் இருக்கும்.)

கொத்தமல்லி கூட வறுத்து பொடி அரைத்து வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் சோம்புப் பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடியும் அரைத்து வைத்துக் கொண்டால் அவசர சமையலுக்கு உதவும்.


பட்டை, கிராம்பு, ஏலக்காய், கொஞ்சம் ஜாதிக்காய் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால், பிரியாணி, குருமா, அசைவ குழம்புகளுக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும். நிறைய பேருக்கு முழுதாக தாளித்து வாயில் பட்டால் பிடிக்காது.

சாம்பார் பொடி தவிர மீதிப் பொடிகளை மாதம் ஒருமுறை கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கும் போது அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

இது போக இன்னும் சில பொடிகளையும் செய்து வைத்துக் கொண்டால் அவசரமாக சமைக்கும் போது டென்ஷனின்றி சமைக்கலாம். என்னென்ன பொடிகள் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

முக்கியமாக சமையலறையில் எப்போதும் ஒரு பேனாவும், சின்ன நோட்டும் இருப்பது நல்லது. எந்தப் பொருள் தீர்ந்தாலும் அதில் குறித்து வைத்து விட்டால், மாதாந்திர லிஸ்ட் எழுதும் போது மறக்காமல் சேர்க்க வசதியாக இருக்கும்.

கேஸ் சிலிண்டர் மாற்றும் தேதி, அரிசி மூட்டை ஓப்பன் செய்யும் தேதி எல்லாவற்றையும் குறித்து வைத்து விட்டால், தீரும் நாள் உத்தேசமாக தெரிவதால், நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.

மூச்சு வாங்குது. கொஞ்சம் ரெஸ்ட்..........

Thursday, April 8, 2010

என் வீட்டு தோட்டத்தில்....


அழகான வெள்ளை ரோஜா - மலிக்காவுக்கு!!!
டபுள் கலர் ரோஸ் தான்! இப்படி இருக்கு!!!

மஞ்சள் ரோஜா - யாருக்கு வேணுமோ, எடுத்துக்கலாம்!!!

அடுக்கு செம்பருத்தி - ஒரு வகை...

அடுக்கு செம்பருத்தியில்   இன்னொரு வகை...

வெண்டைக்காய் பூ கூட அழகுதான்!!

கத்தரிப்பூ கலருக்கு  வேறு பெயர் இருக்கா???

பாகல் பூ தான் வெச்சிருக்கு, காய் ஒன்றே ஒன்று தான்!!!

அரளிப்பூவும் அழகு தான், இல்லே???

மல்லிகையும், மணி ப்ளாண்ட்டும்....

கிறிஸ்மஸ் மரம் (செடி???!!!)

இன்றைய அறுவடை :-)))))
ரொம்ப சுத்தி காண்பிச்சு டயர்டாகியாச்சு. அதனால் இன்னிக்கு காஃபி போட முடியலை :-(

Monday, April 5, 2010

அழகாய் பூ(காய்)க்குதே!!

எங்க வீட்டுத் தோட்டத்தை கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?

இந்த காலிஃபிளவர் - இமாவுக்கு!!!!


அழகான வெள்ளை ரோஜா!


இது ஒரு வகை கீரை!!!

 
குட்டி குட்டி கத்தரிக்காய்!!


ஸ்..ஸ்..ஸ்...ஆஆஆ!!!!! ரொம்ப காரம்!!


தென்னையும், புதினாவும்....

இன்றைக்கு சுற்றியது போதும். டயர்டா இருப்பீங்க! ஒரு காஃபி குடித்து விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு மீதி தோட்டத்தை நாளைக்கு சுற்றிப் பார்க்கலாமா?



இதோ சூடான காஃபி :-))))))
BYE! BYE!!

Sunday, April 4, 2010

ஈஸ்டர் வாழ்த்துக்கள்

                       அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்

Thursday, April 1, 2010


விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் -2 தொடர்ந்து பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி. பெரியவர்களே பாட கஷ்டப்படும் பாடல்களை சின்ன குழந்தைகள் பாடுவது ரொம்ப அழகு. அதிலும் குறிப்பாக ஸ்ரீகாந்த். ஆறே வயது நிரம்பிய அசத்தல் குழந்தை.

அத்தனை போடியாளர்களின் நடுவில் தன் திறமையால் தேர்வாகி, இதுவரை தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த்.

எந்த சுற்றானாலும் தன் இனிய குரலால் எல்லோரையும் வசப்படுத்தி வந்தார். அவனது குரல் இனிமைக்கு இந்நிகழ்ச்சியைப் பார்ர்க்கும் அனைவருமே கண்டிப்பாக ரசிகராகத்தான் இருந்திருப்பார்கள்.

கடைசி எட்டு பேரில் ஒருவராக இருந்த ஸ்ரீகாந்த் இந்த வார எலிமினேஷனில் வெளியேறினார். முடிவை சொன்ன மனோ அவர்கள், ஸ்ரீகாந்தை மடியில் உட்கார்த்தி வைத்து வாழ்த்தி பாடியது கூட அந்தக் குழந்தைக்கு புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஸ்ரீகாந்த் இல்லாமல் எப்படி இன்னும் 6 வாரம் போகப் போகுதுன்னு நினைச்சாலே கஷ்டமா இருக்குன்னு மனோ சொன்னார். நீ ஏதாவது பாட விரும்புகிறாயா என்று கேட்டவுடன், எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று அக்குழந்தை பாட, மனோவே அழுது விட்டார். அவர் வெளியேறும் போது கலங்காதவர்கள் இல்லை. நம் கண்களும் குளமாக பிரியா விடை கொடுத்தோம்.

அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இப்படி குழந்தையைப் பெற என்ன புண்ணியம் செய்தார்களோ? இந்த சின்ன வயதிலேயே எவ்வளவு திறமை!!!

ஹை பிட்ச் பாடல்களுத்தான் அவர் குரல் ஏற்றதாக இருந்தாலும், எல்லாப் பாடல்களையும் பயமின்றி அவர் பாடுவதே தனி அழகு தான். அதுமட்டுமன்றி மற்றவர்கள் அளவுக்கு அவர் வயதும் இல்லை. இந்த வயதில் இவ்வளவு தூரம் பாடல்களை நினைவில் வைத்துப் பாடுவதே பெரிய விஷயம். அதற்காவே அவரைப் பாராட்டலாம். எது எப்படியோ இந்நிகழ்ச்சியில் அவர் பாடுவது எல்லோருக்கும் ஒரு எண்டர்டெயினிங்காவே இருந்தது.

அவரின் திறமைகள் வளர்ந்து, பெரிய பாடகராக வர நாமும் வாழ்த்துவோம்.

கொசுறு: விரைவில் ஸ்ரீகாந்தை வெள்ளித்திரையிலும் காணலாம். சத்யராஜின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்காராம்.

;;