Thursday, April 28, 2011

திருப்தியாக முடித்த வேலை!!!

தோழி ஸாதிகாவிடம் பேசிய பின்பு, அடுத்த நாளே பிளாக்கில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்குள் இந்த முக்கியமான வேலை வரவே அதை 10 நாட்களில் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்த பொழுது, எங்கள் வீட்டில் இருக்கும் நான் வரைந்திருந்த கிளாஸ் பெயிண்டிங்கை பார்த்து விட்டு, அவர்கள் புதியதாக கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டு ஜன்னலுக்கு ஒரு கிளாஸ் பெயிண்டிங் செய்து தர வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டிற்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லையென வரைந்தேன், ஆனால் எந்த நம்பிக்கையில் என்னிடம் இவ்வளவு பெரிய வேலையை தருகிறாரென மலைத்தேன். எனினும் வீடு கட்டி முடியும் தருவாயில் சொல்லுங்கள், பெயிண்டிங் செய்து தருகிறேன் என்று  நானும் சொல்லி இருந்தேன். சொன்னது போலவே கிரகப்பிரவேசத்திற்கு பத்தே நாட்கள் இருக்கும் நிலையில் ஜன்னலின் அளவும், கிளாஸும் என்னிடம் தந்தார் :-)

கண்டிப்பாக கிரகப்பிரவேசத்திற்குள் என்னால் முடித்துத் தர முடியாது என்று சொல்லி விட்டேன். ஏனென்றால் ஜன்னல் அளவு அப்படி!.  ரொம்ப சின்னதாக ஐந்தடி உயரம், மூன்றடி அகலம் தான்!!! (ஆனால், எப்படியும் குறிப்பிட்ட நாளுக்குள் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என மனதிற்குள் முடிவு செய்தேன்.)

இதற்கிடையில் மிக தொலைவிலிருக்கும் அவர்கள் கட்டிக் கொண்டிருந்த வீட்டைப் போய்ப் பார்த்து, ஜன்னல் எங்கு வரும் என்று பார்த்து வந்தோம். தலைவாசலுக்கு அருகில் போர்டிகோவில் முன்புறமுமாக இருந்தது. அடுத்து பெயிண்டிங் செய்வதற்கான டிசைனை நெட்டில் தேட  ஆரம்பித்தேன். ஜன்னல் இரண்டு பக்கமும் பார்வையில் படுவது போன்ற இடமாதலால், எங்கள் வீட்டில் இருப்பது போல் மனித உருவங்கள் சரிவராது என்று பூக்கள் டிசைனை தேடினேன். என் மனதுக்கு பிடித்தது போல் ஒரு டிசைனை தெரிவு செய்து டவுன்லோட் செய்து, ஸ்கேன்  செய்து, ஒரே தாளில் ஜன்னல் சைஸுக்கு (3'x5') ப்ரிண்ட் எடுத்து வந்தேன்.

முதலில் கிளாஸை எங்கே வைத்து வரைவது என்பதே பெரிய யோசனையாக இருந்தது. மடக்கும் கட்டிலை ஹாலில் விரித்து அதன் மேல் மெத்தையை விரித்து கிளாஸை அதன் மேல் வைத்தாயிற்று. பின் தேவைப்படும் எல்லா கிளாஸ் பெயிண்டிங் கலர்களை வாங்கி வந்தாச்சு. தேர்வு செய்த டிசைனை சிடி மார்க்கர் பேனாவால் கிளாஸில் வரைந்தாச்சு. தினமும் இரவு 7 மணிக்கு உட்கார்ந்தால் நடு இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ ஆகும். 

முதலில் பூக்களை கோல்டன் கலர் அவுட்லைனராலும், இலை மற்றும் தண்டை கருப்பு அவுட்லைனராலும்  வரைந்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக பூக்களும், இலைகளும் வண்ணம் பெற ஆரம்பித்தது. உயிர் பெற்றனவா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்:-) 


கிளாஸ் கலரில் டபுள் ஸேடு கொண்டு வருவது மிகவும் கஷ்டமான வேலை. இரண்டு, மூன்று கலர்களை மிக்ஸ் செய்து பூக்களும், இலைகளும் கொண்டு வருவதற்குள் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் போனேன். ஃபேன் போட்டால் கலர்கள் உலர்ந்து விடும். ஏசி ரூமுக்குள்ளும் அதே கதி  தான். அதனால், வியர்வை சொட்ட சொட்ட.... சொட்டும் வியர்வை கிளாஸிலும் படாமல் போடுவதற்குள் ரொம்பவே ரிஸ்க் எடுத்து விட்டோமோ என்று கூட தோன்றியது.


 அதிலும் முதலாவதாக வண்ணமிட்ட இந்தப் பூ மட்டும் எனக்கு ரொம்பவே பிடித்தது.


இடையில் இன்னொரு சோதனை. பூக்களுக்கு நான் போட்டு வந்த கலர் தீர்ந்து போய் இரண்டு இதழ்களுக்கு மட்டும் போட வேண்டிய நிலையில் கலர் கிடைக்காமல் கடை கடையாக அலைந்து கடைசியில் அந்தக் கலரை வாங்கி இதழை முடித்தேன்.


பார்டராக போட்ட பிரவுன் கலர்தான் என்னை ரொம்பவே படுத்தி விட்டது. மற்ற கலர்கள் போல் இல்லாமல் ரொம்ப திக்காக இருக்கவே, கலர் இறங்காமல் விரல்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்து விட்டது. இன்னுமே அந்த வலி சரியாகவில்லை.


ரிவர்ஸ் பெயிண்டிங் என்பதால் முழுவதும் முடித்த பிறகு தான் என்னாலேயே படத்தின் முன் பக்கத்தைப் பார்க்க முடிந்தது:-)


கிளாஸ் பெயிண்டிங்கில் பெரிய பிரச்னையே ஏர் பப்பிள்ஸ் தான். அதிலும் அவ்வளவு பெரிய பெயிண்டிங்கில் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் சில சின்ன சின்ன பப்பிள்ஸ் வரத்தான் செய்தது. எப்படியோ கிரகப்பிரவேசத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே பெயிண்டிங்கை முடித்து, காய்வதற்கு ஒரு நாள் டைம் விட்டு கிரகப்பிரவேசத்திற்கு முந்தின நாள் பெயிண்டிங்கை அனுப்பி வைத்து விட்டேன்.


 கிரகப்பிரவேசத்தன்று பெயிண்டிங் பொருத்தப்பட்ட ஜன்னலைப் பார்த்தபோது மனதில் ஏற்பட்ட திருப்திக்கும்,  சந்தோஷத்திற்கும் அளவே இல்லை.........  நண்பரின் பிரமாண்டமான வீட்டிற்கு இந்த பெயிண்டிங் மேலும் அழகு சேர்த்தது.

வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் பார்த்து வியந்து பாராட்டியதை நண்பர் சொன்ன பொழுது 10 நாட்களாக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து விட்டன.நீங்களும் பார்த்து ஏதாவது சொல்லி விட்டுப் போனால், இன்னும் சந்தோஷமாக இருக்கும்:-))

;;