Wednesday, March 31, 2010
சமையல் பற்றிய தொடர்ச்சி ரொம்ப நாளாக எழுதாமல் அப்படியே இருக்கு. எப்படியாவது இன்று அடுத்த பகுதி எழுத முடிவு பண்ணியாச்சு.
போன பகுதியில் சமைக்கும் போதும், சமையலுக்கு முன்னும் செய்ய வேண்டியது பற்றி சொன்னேன். இப்ப சமையலுக்கான பொருட்களைப் பற்றி சொல்கிறேன்.
எப்பவும் ஒரு மாதத்திற்கு வேண்டிய பொருட்களை மாத ஆரம்பத்திலேயே வாங்கி வைத்துக் கொண்டால் இடையிடையே கடைக்கு ஓட வேண்டி வராது.
கடைக்கு செல்லுமுன் தேவையான பொருட்களை லிஸ்ட் எழுதி தயாராக வைத்துக் கொண்டால் அங்கு போய் குழப்பம் வராது. மளிகை சாமான்கள் தனியாகவும், மற்ற ஐட்டங்கள் (சோப், பேஸ்ட் போன்றவை) எழுதிக் கொண்டால் அந்தந்த பகுதிகளில் எடுக்க வசதியாக இருக்கும்.
விலை குறைவாக இருக்குன்னு தரம் குறைந்த பொருட்களை வாங்கி, வீணாகி தூக்கி எறிவதை விட கொஞ்சம் விலை கூடினாலும் தரமான பொருட்களை வாங்கினால் கொஞ்சம் நாட்கள் இருந்தாலும் கெடாமல் இருக்கும்.
முடிந்தவரை வீட்டுக்குத் தேவையான வற்றல், வடகம், ஊறுகாயை நாமே கோடை காலத்தில் போட்டு வைத்துக் கொண்டால் நம் டேஸ்ட்டுக்கு ஏற்றாற் போலவும் இருக்கும், மாத பட்ஜெட்டிலும் குறைக்கலாம்.
அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகையையும் மனதில் வைத்து பட்ஜெட்டில் போட்டுக் கொண்டால், பண்டிகை நேரத்தில் கடையில் நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை. உதாரணமாக ஜனவரி மாதம் என்றால் பொங்கல் வரும். மளிகை சாமான் லிஸ்டில் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
விருந்தினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் மாதத்தில் கொஞ்சம் கூடவே எல்லா சாமான்களையும் வாங்கி வைத்து விட்டால், அவர்கள் வந்த பின் வாங்கும் நிலையை தவிர்க்கலாம்.
இப்ப வருட சாமான்கள் காலம் (பங்குனி மாதம்). துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கொத்தமல்லி, வெந்தயம், கசகசா, மொச்சை, சுண்டல் எல்லாம் வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொண்டால் இடையில் கன்னா பின்னாவென்று எகிறும் விலைவாசியில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். அரிசி கூட வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்தப் பருவத்தில் வாங்கினால் எல்லாமே விலை குறைவாக இருக்கும்.
ஐயோடா! அப்படி வாங்கி வைத்தால் வண்டு, பூச்சி வருமேன்னு கேட்கறீங்களா? சரியாக பக்குவப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக 2 வருடம் வரை கூட வைத்திருக்கலாம். இப்ப நான் வைத்திருக்கும் பருப்பு போன்றவை வாங்கி 2 வருடமாகிறது. ஒன்றில் கூட வண்டு, பூச்சி கிடையாது. ஒவ்வொன்றாக எப்படி பாதுகாப்பதுன்னு அப்புறம் சொல்கிறேன்.
Labels: சமையல்-பொது
Thursday, March 25, 2010
இது மேனகா & ஜலீலா எனக்குக் கொடுத்த அழகான அவார்டு. ப்ளாக் ஆரம்பித்ததில் இருந்து முதன்முதலில் கிடைத்த அவார்டு. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி மேனகா & ஜலீலா!! பத்திரமாக வைத்துக் கொள்வேன்:-)
இந்த அவார்டை நான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாருக்கும் மற்றவர்கள் கொடுத்து விட்டார்கள்:-) 12 பேர் எனக்குத் தெரியவில்லைப்பா!
நான் கொடுக்க விரும்புவது :
1. சகோ. ஹைஸ்
2. ஜீனோ
3. செபா அம்மா
4. அதிரா
5. ஹுசைனம்மா
6. சந்தனா
7. பிரபா தாமு.
இவங்க எல்லோரும் அவார்டை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்கான விதிமுறைகள் (!) இதோ:
//To the award winners, please pass this on to your favorite bloggers!
Here are the Rules:
1. Put the logo on your blog or within your post,
2. Pass the award on to 12 bloggers,
3. Link the nominees within your post,
4. Let the nominees know they have received this award by commenting on their blog,
5. Share the love and link to the person from whom you received this award.//
Labels: விருதுகள்
என் பெண்ணும் சமைக்க ஆரம்பிச்சுட்டா! இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அதிசயம் தாங்க. கிச்சன் பக்கமே வேறு ஏதாவது வேலை இருந்தால் மட்டுமே எட்டிப் பார்ப்பவள் என் சின்ன மகள். வார இறுதியில் வீட்டுக்கு வந்தாலும், சனிக்கிழமை கூட நாங்கள் ஆபீசிலிருந்து வந்து டீ போட்டுக் குடித்தால் தான் குடிப்பாள். சமையல் செய்து வைத்து விட்டுத்தான் போகணும்.
இப்படியே இருந்தா எப்படிம்மா, சமையல் கத்துக்கோன்னு சொன்னா, நான் ஏன் கத்துக்கணும்பா. திருமணம் ஆன பின்பு எப்படி சமைக்கிறதுன்னு கேட்டா, நல்லா சமைக்கத் தெரிந்த ஒரு பையனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன்னு, இப்ப இல்லை பல வருஷங்களுக்கு முன்பே சொன்னவள்.
எப்படியோ இத்தனை நாட்கள் ஹாஸ்டல், பேயிங் கெஸ்ட்னு நாட்களைக் கடத்தி விட்டாள். இப்ப ஷேரிங்கில் இருக்கிறாள். இவளுடன் இருக்கும் இன்னொரு பெண் சமைக்க முடியாது வெளியிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன்னு அப்படியே செய்கிறாள்.
என் பெண் மட்டும் நானே சமைத்துக் கொள்கிறேன், அதற்குத் தகுந்தாற் போல் அடுப்பு ஏதும் வாங்கித் தாருங்கள் என்று சொன்னதால், கடை கடையாக ஏறி விசாரித்து கடைசியில் இன்டெக்ஷன் அடுப்பை வாங்கினோம். வீடு மாற்றிய பின் எடுத்துச் செல்கிறேன், அதுவரை இங்கேயே இருக்கட்டும்னு சொன்னதால், நான் கொஞ்ச நாள் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தேன். ஒருவழியாக வீடு மாற்றிய பின் அடுப்பைக் கொண்டு போய் கொடுத்தோம்.
ம்ஹூம்.... அதில் சாதம் வைக்க சரி வரலைன்னு சொன்னீங்களே! சாதம் வைப்பது போல் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் ஒன்று பார்த்து வாங்கித் தாருங்கள் என்று சொல்ல, திரும்பவும் கடை கடையாக ஏறி இறங்கல். ஒருவழியாக அரை லிட்டர் அளவுள்ள ரைஸ் குக்கரை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தோம். பிறகும் ஒருவாரம் புது வீட்டில் ஃபிளக் பாயிண்ட் அடுப்பு பக்கத்தில் இல்லை. என்ன செய்வதுன்னு யோசித்துதான் செய்யணும்னா. ம்ம்ம்ம்ம்ம்..... எப்படியோ 6,000 ரூபாய்க்கு மேல் வாங்கிய அடுப்பும், குக்கரும் பயனின்றித் தான் இருக்கப் போகுதோன்னு யோசனையாக இருந்தது.
எனக்கு சமைக்க அரிசி, பருப்பெல்லாம் வேண்டும்னு சொன்னாள்னு அதையும் கொண்டு கொடுத்தோம். இந்தவாரம் வந்த போது ஹவுஸ் ஓனர் ஃபிளக் பாயிண்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு டேபிள் போட்டுக் கொடுத்திருக்கார், இனி இந்த வாரத்தில் இருந்து சமைக்கலாம்னு இருக்கேன் என்று சொன்னாள். நேற்று போன் செய்து நான் இன்று ஃப்ரைடு ரைஸ் செய்தேன் என்றாள். எங்களால் நம்பவே முடியவில்லை!!! இரவு மாவு வாங்கி இட்லியும், தோசையும் செய்தேன். இன்று காலை தக்காளி தொக்கு, இட்லி. மதியத்திற்கு சர்க்கரைப்பொங்கல் (சரியான சர்க்கரைப் பொங்கல் பைத்தியம்) செய்தேன்னு சொன்ன போது, அட! நம்ம பொண்ணும் தேறி விட்டாளேன்னு இருந்தது. இவள் சமைத்ததை ஆபீஸில் உடன் பணிபுரிபவர்கள் சாப்பிட்டுவிட்டு சூப்பராக இருக்குன்னு சொல்லி இருக்கிறார்கள்!!!
இப்பல்லாம் இரவு 10 மணி ஆனால் போதும். போன் செய்து, என்னிடம் இதெல்லாம் இருக்கு, இதை வைத்து நாளைக்கு என்ன செய்யட்டும்னு ரெசிபி கேட்க ஆரம்பித்து விடுகிறாள். நான் சொன்னால்,அதெல்லாம் தான் எனக்குத் தெரியுமே என்கிறாள். ஆக, என் பெண் என்பதை அவளும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறாள் என்பதே சந்தோஷம் தான். எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டேன்.
எப்போதோ ஒரு முறை (+2 லீவில் என்று நினைக்கிறேன்) மாலையில் சாப்பிட ஏதாவது செய்கிறேன்னு வீட்டில் இருந்த சேமியாவைப் பார்த்து, அதை வேக வைத்து பாயசம் வைக்கலாம்னு, வேக வைத்து எடுத்தால் ஒரு பாத்திரம் நிறைய வந்திருக்கிறது (பின்னே! ரோஸ்டட் சேமியா அரை கிலோவை வேக வைத்தால் எவ்வளவு வரும் ! ?) ஆனால் வெகு சாமர்த்தியமாக சேமியாவை மூன்றாகப் பிரித்து பாயசம், வடை, கட்லெட்னு செய்து விட்டாள். எல்லோரும் நன்றாகவே சாப்பிட்டோம்னாலும் இன்றளவும் அதைச் சொல்லியே அவளைக் கிண்டல் செய்வோம்:-)
அப்படி இருந்த பெண் இன்று அவளுக்கு மட்டும்னு அளவு பார்த்து சமைக்கிறாள்னு பெருமையாகத் தான் இருக்கு. கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு புதினா நிறைய கொடுத்து விட்டார். அதை வைத்து என்ன செய்யன்னு கேட்டாள். மிக்ஸி இல்லாமல் எப்படி சட்னி அரைப்பாய்? அப்படியே ஈரத்துணியில் சுற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்துன்னு நான் சொன்னால், ஏற்கனவே நான் அப்படித்தான் வைத்திருக்கேன் என்கிறாள். மீதி வைக்கும் பாலைத் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்து மூடி வை, கெடாமல் இருக்கும்னு நான் சொன்னால், அதுகூடவா எனக்குத் தெரியாது, அப்படித்தான் வைக்கிறேன் மம்மி! என்கிறாள். காரட் வதங்க லேட்டாகும், அதை முதலில் வதக்கி விட்டுப் பிறகு தான் குடை மிளகாய் சேர்த்து வதக்கணுங்கிறது வரை தெரிந்திருக்கிறது!
இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கும் பெண், சமையலிலும் விரைவில் தேறி விட மாட்டாளா என்ன????
Labels: செல்லங்கள்
Tuesday, March 23, 2010
சமையல் பகுதியில் சமைக்குமுன் சொல்ல வேண்டிய விஷயத்தில் சொல்லணும்னு நினைத்திருந்தேன். அதற்குள் எல்லாரையும் தொற்றும் வைரஸ் காய்ச்சல் என் ப்ளாக்கையும் தொற்றவே, அதற்கான வைத்தியத்தில் பொழுது போயிற்று. அப்பறம் ஊர்சுற்றல், உடம்பு படுத்தல்னு நாளைக் கடத்தியாயிற்று. இது யாருக்கும் தெரியாத புது விஷயம் அல்ல. ஆனாலும், இன்னும் அங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியால் தான் இதை எழுதுகிறேன். இதைப் படித்தால் விஷயம் தெரிந்தவர்கள கூட, இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பிரஷர் குக்கர் இல்லத்தரசிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் போல் தான். அதையும் சரியாகப் பயன்படுத்தினால் தான் நமக்கும் நல்லது, குக்கருக்கும் நல்லது.
குக்கர் கழுவும் போது மூடியில் உள்ள வெண்ட் வால்வு எனப்படும் ஓட்டையை நன்கு சுத்தப்படுத்தி கழுவ வேண்டும்.
அந்த ஹோல் எப்பவும் எந்த அடைப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கேஸ்கட்டை கழுவி தண்ணீரிலோ, ஃப்ரீசரிலோ போட்டு வைப்பது அதன் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்.
வெயிட் எடுத்து ஆறியபின், பைப்பில் வேகமாக வரும் தண்ணீரில் வெயிட்டை காண்பித்து, உள்ளே அடைத்திருக்கும் உணவுத்துகள்களை நீக்கி காய வையுங்கள். பருப்பு, சாதம் முதலியவை வேகும் போது கஞ்சி போன்றவை வெளியே வரும் போது வெயிட்டின் சந்துகளில் அடைத்திருக்கும்.
உள்ளே பாத்திரம் வைத்து சமைக்கும் போது குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டீர்களான்னு ஒரு முறைக்கு பலமுறை செக் செய்த பின் அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் இல்லாமல் வைத்தால் குக்கர் வெடிக்கும் அபாயம் உள்ளது.
அரிசிக்கு போதுமான தண்ணீர் வையுங்கள். அதிகமானால் பொங்கி வெளியே வரும். போதவில்லை என்றால், சாதம் தீய்ந்து விடும்.
குக்கரைத் திறக்கும் போது எப்போதும் கைப்பிடி பக்கம் மேலே தூக்காமல், எதிர்ப்புறத்தை மேலே உயர்த்தி திறக்க வேண்டும். அப்போதுதான் வேகமாக வெளியே வரும் ஆவி நம் கையில் படாமல் தப்பலாம்.
எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான விஷயம் - குக்கரின் கொள்ளளவு தெரிந்து அந்த அளவு நிரப்ப மட்டுமே (ரிப்பீட்டு......) மட்டுமே வைக்க வேண்டும்.
எப்போதுமே குக்கரின் முக்கால் பாகம் வரை மட்டுமே நிரப்பி, மீதி பாகத்தை பொருட்கள் வேக இடம் விட வேண்டும்.
அரை லிட்டர் அரிசி தான் வேகும் கொள்ளவு உள்ள குக்கரில் அதைவிடக் குறைவாக அரிசி வைக்கலாம். எக்காரணம் கொண்டும் அதை விடக் கூட வைக்கவே வைக்காதீர்கள். உங்களுக்கு சந்தேகம் இருப்பின், குக்கர் வாங்கும் போது கொடுத்த விளக்கப் புத்தகத்தை படித்த பின்போ இல்லை அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோ செய்யுங்கள். இப்பதான் கையிலேயே போன் இருக்கே! ஒரு போன் செய்து கேட்டாலே எவ்வளவோ கஷ்டங்களைத் தவிர்க்கலாம். இதை ஏன் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால்......
பதினைந்து நாட்களுக்கு முன்பு என் பெண் செய்த காரியம். 3 டமளர் அரிசி மட்டுமே வேகும் கொள்ளளவு கொண்ட குக்கரில் 6 டம்ளர் அரிசியைப் போட்டு அடுப்பில் வைத்து விட்டு, பக்கத்து அடுப்பில் இவள் வேலை செய்து கொண்டிருக்க, பிரஷர் தாங்காமல் குக்கரின் அனைத்து கேஸ் ரிலீஸ் சிஸ்டம் வழியாகவும் உள்ளிருக்கும் அரிசி, கஞ்சியோடு வெளியே வந்து பக்கத்தில் இருந்த பெண்ணின் வலது கையில் பட்டு கை முழுக்க கொப்புளம் போட்டு, கையை பார்க்கவே வயிறெல்லாம் கலங்கியது. இன்னும் புண் ஆறவில்லை. ஆறினாலும் கை முழுக்க தழும்பாக இருக்கும். நல்லவேளையாக குழந்தை வேறு அறையில் தூங்கிக் கொண்டு இருந்ததால் தப்பியது. இல்லையென்றால், இவள் சமைக்கும் போது ஒன்று இடுப்பிலோ அல்லது சிட்டரில் உட்கார்ந்து கிச்சனில் இருந்திருப்பான்.
என் பெண் செய்த இன்னுமொரு தவறு, பக்கத்து வீட்டில் சொன்னாங்கன்னு, மேலே உப்பு தூவியது. தேவையா இது? கொஞ்சம் யோசிக்காமல் செய்த காரியம் எவ்வளவு கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டது.
இதுபோல் கையில் ஆவி பட்டாலோ, கொதிக்கும் பொருட்கள் பட்டு விட்டாலோ குளிந்த நீரில் நன்கு காட்டியபின், புளித்த மாவு (இட்லி மாவு) அல்லது தேனை நன்கு தடவ எரிச்சலும் அடங்கும். கொப்புளமும் அதிகம் போடாது. தேன் தடவினால், காயம் ஆறிய பின், தழும்பும் வராது. சோற்றுக் கற்றாழை இருந்தாலும் அதை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஜெல்லுடன் தடவலாம்.
இனி மேலும் யாரும் இது போல் செய்யாதீர்கள்!!! முக்கியமாக சமைக்கும் போது குழந்தைகளை சமையல் அறைக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சமையலறை ஆபத்தான இடமாக மாறாமல் பார்த்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கு.
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன்:-)
Labels: சமையல்-பொது
;;
Subscribe to:
Posts (Atom)







