Friday, January 29, 2010
ஆனந்த விகடனில் வெளிவந்ததாக ஆபீசில் சொன்னார்கள். நான் படிக்கவில்லை. பிறந்த குழந்தைக்கு மயக்க கலக்கத்தில் படுத்துக் கொண்டே பால் கொடுத்ததால், குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாம். அதன் கண்களை தானம் செய்தார்களாம். கண்தானம் செய்யப்பட்ட விஷயம் தான் பெரிதாகப் பேசப்பட்டது. ரொம்ப நாட்களாக என் மனதை வதைத்துக் கொண்டிருந்த படுத்துக் கொண்டே பாலூட்டிய விஷயத்தை அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் எனக்கு மட்டும் நெருடிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த இடுகை.
நிறைய பெண்கள் செய்யும் தவறே இது தான். எழுந்து உட்கார்ந்து பால் கொடுக்க சோம்பேறித்தனம். படுத்துக் கொண்டே பால் கொடுப்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்று இப்பொழுதாவது மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி.
கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளாவது மூச்சு தாங்கி குடித்து விடும். பச்சிளங்குழந்தைகளுக்கு படுத்து கொண்டு பால் கொடுத்தால் மூச்சு முட்டும். அப்படி கொடுக்கும் போது நாம் கையால் அழுத்திப் பிடித்து கொடுக்கவும் முடியாது. அப்படியே தூங்கிப் போனால், பால் குழந்தையின் மூக்கிலும் ஏறும் வாய்ப்பு உள்ளது. பிரசவம் ஆனபின் களைப்பாகவும், மயக்கமாகவும், அசதியாகவும் தான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் பார்த்து குழந்தையின் விலை மதிக்க முடியாத உயிருடன்
விளையாடலாமா?
எவ்வளவு தூக்கக் கலக்கமாக இருந்தாலும், எழுந்து, நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு (முதுகுக்கு தலையணை கூட வைத்துக் கொள்ளலாம்) குழந்தையின் தலையை முழங்கைக்கு மேல் வைத்து மார்போடு சேர்த்து பிடித்துக் கொள்ள வேண்டும்.
நீளும் கை குழந்தையின் தொடை வரை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்த கையின் ஆட்காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே மார்பகத்தை அழுத்திப் பிடித்து குழந்தையின் வாயில் வைத்து பால் புகட்ட வேண்டும்.
பால் அதிகமாக சுரந்தால் பிறந்த குழந்தைகளால் (ஒரு மாதம் வரை) மூச்சு தாங்கி குடிக்க முடியாது. அப்போது விரல்களை நெருக்கிப் பிடித்து பால் குழ்ந்தையின் வாய்க்குள் போகும் அளவை கட்டுப்படுத்த முடியும்.
பால் கொடுத்து முடிந்ததும், குழந்தையை தோளில் சாத்தி முதுகில் சிறிது நேரம் லேசாக தட்டிக் கொடுத்து, (குழந்தைக்கு)ஏப்பம் வந்த பிறகே படுக்க வைக்க வேண்டும்.
முதல் குழந்தை என்றால் நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாது. கூட இருக்கும் பெரியவர்கள் தான் சொல்லித் தர வேண்டும்.
நிறைய மருத்துவமனைகளிலும் ஏகப்பட்ட ஃபீஸ் வாங்குகிறார்களே தவிர, பிரசவம் முடிந்தபின் இதையெல்லாம் எந்த மருத்துவரும் பொறுமையாக விளக்கிச் சொல்வதில்லை. அங்கு இருக்கும் நர்சுகளோ குழந்தைக்கு அம்மாவை பால் கொடுக்க சொல்லுங்கம்மான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க (சமீபத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆன போது நேர்ந்த அனுபவங்கள் தான்).
கொடுமை என்னவென்றால் கூட இருப்பவர்களும் படுத்துகிட்டே பால் கொடுக்கச் சொல்வார்கள். அதைப் பார்த்து, அறிவுரை சொல்லியும் இருக்கிறேன். சரி சரிம்பாங்க. நாம் இந்த பக்கம் வந்ததும் அவங்க வழிக்கு போயிடுவாங்க.நல்லதுக்கு தானே சொன்னார்களென்று தெரிவதில்லை.
இப்பவும் அப்படித்தான், மனம் பொறுக்காமல் கொட்டி விட்டேன். இதைப் படித்து ஒரு சிலராவது புரிந்து கொண்டால் போதும்.
பத்து நிமிட கஷ்டம் பார்த்து
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த
பத்தரை மாற்றுத் தங்கத்தை
பறி கொடுத்து விடாதே மகளே!
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க, கிடைத்ததொரு செல்வத்தை நம் சோம்பேறித்தனத்தாலும், அஜாக்கிரதையாலும் இழக்கலாமோ?
Labels: குழந்தை வளர்ப்பு
Tuesday, January 26, 2010
இல்லையென்றாலும் காலையில் எழுந்து பிரஷ் செய்யும் நேரத்தை வீணாக்காமல், யோசித்து வைத்துக் கொள்ளலாம்.
Labels: சமையல்-பொது
வலைப்பூ முழுவதும் சுத்தத் தமிழில் எழுதலாம், இருப்பினும் பேச்சுத் தமிழுக்கு மாறினால் தான் பதிவுகள் இயல்பாய் இருக்கும். ஆகவே, இனி பேச்சுத்தமிழுக்கு மாறலாமென்று இருக்கிறேன்.
Labels: பொதுவானவை
Sunday, January 24, 2010
மலர்வனத்தில் பல வண்ண மலர்கள் உண்டு. இவ்வலைப்பூவிலும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.
எனக்குத் தெரிந்த சமையல், கைவேலைப்பாடுகள், கர்ப்பிணி மற்றும் பேறுகால விஷயங்கள், குழந்தை வளர்ப்பு, வாழ்க்கை அனுபவங்கள், புலம்பல்கள் எல்லாம் இடம் பெறும்.
எனக்குத் தெரிந்த சில விஷயங்கள் என்னோடு முடிந்து விடாமல் நிறைய பேருக்கு பலனளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான் டைரியாக எழுதி வைத்தால் என் குழந்தைகள் மட்டுமே பயன் பெறுவர். அது கூட சந்தேகம் தான்:-) இப்போதெல்லாம் யார் படிக்க விரும்புகிறார்கள்? எதற்கெடுத்தாலும் கம்ப்யூட்டரும், நெட்டும் தான். எனவே வலைப்பூவாக இருந்தால், என் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, அவர்களைப் போல் உள்ள மற்றவருக்கும் உபயோகமாக இருக்குமே என்ற எண்ணத்தின் விளைவாக மலர்ந்ததே இந்த 'மலர்வனம்'.
மற்றபடி வலைப்பூ உலகில் பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.
ஆனாலும் மணம் நுகர்ந்து செல்பவர்கள், மணத்தின் தன்மையை சொல்லிப் போனால், மலர்வனத்தை மாற்றி அமைத்து அதிக நறுமணம் கமழச் செய்ய ஏதுவாக இருக்கும்.
அன்புடன்,
செந்தமிழ்.
Labels: பொதுவானவை
Wednesday, January 20, 2010
ப்ரியமானவர்களுக்கு,
என்னுடைய மலர்வனத்திற்கு வருகை புரியும் அனைவரையும் பூச்செண்டுடன் வரவேற்கிறேன்.
அன்புடன்,
செந்தமிழ்.
Labels: பொதுவானவை