Friday, February 5, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி-2)

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நல்லபடியாகவே வளர்ந்து கொண்டு இருந்தது லவ் பேர்ட்ஸ். கப்பில் தினை தீர்ந்து விட்டால், கப்பை ஆட்டி அழகாக சத்தம் செய்யும். தண்ணீர் வைத்தால் குடித்து விட்டு, உடனே கப்பை தூக்கிப் போட்டு தண்ணீரைக் கொட்டி விடும். ரொம்ப போரடித்தால் அதுகளே கூண்டைத் திறந்து கொண்டு வெளியில் வந்து விளையாடும். அதற்காகவே கூண்டின் கதவில் ஒரு கொக்கி மாட்டி வைத்திருப்பேன். இரண்டும் சேர்ந்து அதையும் கழட்ட முயற்சி செய்யும்.

இப்படி இருக்க ஒரு நாள்...
வழக்கம் போல் பையன் கூண்டைத் தூக்கி வைத்து குருவிகளை வெளியில் விட்டு ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்தான். அவர் எழுந்து நடக்கும் நிலையில் இல்லாததால், நான் ரூமில் அவரிடம் பேசிக் கொண்டே சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தேன். ரூம் கதவு லேசாக திறந்திருந்தது. விளையாடிக் கொண்டே இருந்த மஞ்சள் குருவி ரூமில் என் சத்தம் கேட்கவே, உள்ளே பறந்து வந்திருக்கிறது. பறந்த வேகத்தில் கொஞ்சம் உயரமாகவே பறந்து விட்டது.(சாதாரணமாக அவ்வளவு உயரம் பறக்காது). வந்த வேகத்தில் ஓடிக் கொண்டு இருந்த ஃபேனில் அடிபட்டு என் மடியில் வந்து விழுந்தது. ஐயோ என்று கத்திக் கொண்டே அதை எடுத்து, பையனை தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாயில் விட்டேன். எங்குமே காயம் இல்லை. ஆனால், என்னைப பார்த்துக் கொண்டே மெல்ல மெல்ல கண்களை மூடி உயிரை விட்டு விட்டது.....
பையனும், நானும் அழுத அழுகை கொஞ்சமில்லை. பிரிய மனமின்றி கையில் வைத்து அழுது கொண்டே இருந்தோம். வேறு வழியின்றி செடி போட வைத்திருந்த தொட்டி மண்ணில் ஆழக் குழி தோண்டிப் புதைத்தோம்(நாங்கள் இருந்தது இரண்டாவது மாடியில்).

ஒரு குருவியை இப்படி இழந்து விட்டோம். இன்னொன்றைப் பார்க்க ரொம்பவே பாவமாக இருந்தது. எங்கள் சோகமும் அதிகமாக இருந்தது. வேறு ஒன்றை வாங்கி விட்டால் கொஞ்சம் சரியாகும் என்றெண்ணினோம். அச்சு அசல் அதே போல் ஒரு குருவியை என் பையன் வாங்கி வந்தான். இம்முறை சரியாக பெண் குருவியைக் கொடுத்தார்கள். 2 நாட்கள் பேசாமல் இருந்த பச்சைக் குருவியும் அதனுடன் நட்பாகி விளையாட ஆரம்பித்தது. கொஞ்ச நாட்கள் ஆனதும், பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........                                                                                                                                                                                           அப்பறம்  சொல்றேனே....

லக்கியின் காத்திருப்பு...

 
சகோதரர். ஹைஸின் பார்சலுக்காக இப்படி காத்திருந்த லக்கி......

இப்படி மாறி காத்திருக்க ஆரம்பித்து.......


இப்ப இப்படி வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டேஏஏஏ.........

Wednesday, February 3, 2010

லவ் பேர்ட்ஸ் - பகுதி 1

எல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன்.


நான் முதலில் வளர்க்கணும் நினைச்சது லவ் பேர்ட்ஸ் தான். பெட் அனிமல்னாலே சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற சிரமங்கள் இருக்குமேன்னு அந்தப் பக்கமே போகக் கூடாதுன்னு நினைச்சேன்.

பையன் மீன் தொட்டி வேணும்னு கேட்ட போது கூட ரொம்ப யோசிச்சு, எல்லாம் அவன் பொறுப்புன்னு சொல்லி ஒரு கிறிஸ்மசுக்கு வாங்கி கிஃப்டா கொடுத்தோம்.   மீன் செத்துப் போகும், திரும்ப வாங்கி விடுவான், செத்துப் போகும் இப்படியே போய் அவனே வெறுத்து கடைசியில் காலியாகவே விட்டுட்டான்.

பையனும் அந்த வருடம் ஸ்கூல் முடித்து காலேஜில் சேர வெளியூர் போய்ட்டா, நாம மட்டும் தனியா இருக்கணுமேன்னு கவலையா இருந்துச்சு. அப்பதான் இவர் என் பர்த்டேக்கு என்ன வேணும்னு கேட்டார். லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடி வேணும்னு கேட்டேன். அழகா கூண்டோடு வாங்கிக் கொடுத்தார். லவ்பேர்ட்ஸ் முட்டை வைத்து, குஞ்சு பொரித்து பெரிய குடும்பமா ஆனது போல் கனவெல்லாம் வந்தது.



ரெண்டு லவ் பேர்ட்ஸும் பச்சையும், மஞ்சளும் கலந்த குட்டி குருவிகள். குட்டியாக இருந்ததால் கொத்தாமல் இரண்டுமே என் கையை நீட்டினால் ஏறி உட்கார்ந்து கொள்ளும். ஃபேனை நிறுத்தி விட்டு, எல்லாக் கதவையும் அடைத்து விட்டு கூண்டை திறந்து விட்டால் போதும். இரண்டும் கூண்டு மேலே வந்து உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருக்கும். விளையாடியது போதும், உள்ளே போங்கள் என்று சொன்னால் போய்விடும். கதவை சாத்தி விடுவோம். அதிலும் முழுவதும் மஞ்சளாக இருக்கும் குருவி தான் எங்களின் பெட். கைகளில் ஏறி விளையாடும். பச்சை கலந்த குருவி கொஞ்சம் பயப்படும். நான் ஆபீசில் இருந்து வந்தால் போதும். கூண்டின் ஓரம் வந்து இதுக்கும், அதுக்கும் நடந்து என்னைக் கூப்பிடும். நான் மறுபுறம் போய் நின்றால் எப்படியோ கண்டு அங்கும் வந்துவிடும். கீழே உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டு இருந்தால் எட்டிக் கூப்பிடும். கீரை, கொத்தமல்லித் தழைன்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க.


எங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஆஸ்பிட்டலிலேயே ஒன்றரை மாதம் இருக்க வேண்டி வந்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்த அன்று என்னைப் பார்த்ததும் இங்கும் அங்கும் ஓடி மஞ்சள் குருவி கத்திய கத்தல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரை ஸ்டெரச்சரோடு மேலே தூக்கி வர வந்த எங்கள் ஆபீஸ் நண்பர்கள் அப்படி ஆச்சரியப்பட்டார்கள். கையில் எடுத்ததும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது. ஆறறிவு இருக்கும் மனிதர்களிடம் உள்ள அன்பை விட, அந்தப் பறவைகள் காட்டிய பாசத்தில் அன்று நெகிழ்ந்து அழுதே விட்டேன். நாங்கள் எவ்வளவோ நல்லது செய்தவர்கள் கூட, எங்களை ஆஸ்பிட்டலில் வந்து பார்க்காத ரணம், இந்தக் குட்டிக் குருவிகள் காட்டிய அன்பில் மறந்தது.

வாங்கி ரொம்ப நாளாச்சே, இன்னும் முட்டை வைக்கலையேன்னு ஒரே யோசனையாக இருந்தது. அப்போது தான் அவருக்கு பயிற்சி கொடுக்க எங்க வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிசியோதெரபிஸ்ட் சொன்னார், இரண்டுமே ஆண் குருவிகள் என்று. ஏதாவது ஒன்றைக் கொடுத்து விட்டு வேறு பெண் குருவி மாற்றி வந்து விடுங்கள் என்று சொன்னார். இரண்டுமே எங்களுக்குப் பிடிச்சது. எதைக் கொடுக்க? கூண்டை வேணா பெரிசா மாற்றலாம்னு யோசித்துக் கொண்டிருந்தோம். விபத்தின் தாக்கம் குறையாததால் அவர் முதலில் நடக்கட்டும்,பிறகு பார்க்கலாம்னு இருந்தோம். அப்போது தான்,

அந்த சம்பவம் நிகழ்ந்தது......

மீதி சிறிய இடைவேளைக்குப் பின்..........

Friday, January 29, 2010

கேட்டு பதறிய சம்பவம்!


ஆனந்த விகடனில் வெளிவந்ததாக ஆபீசில் சொன்னார்கள். நான் படிக்கவில்லை. பிறந்த குழந்தைக்கு மயக்க கலக்கத்தில் படுத்துக் கொண்டே பால் கொடுத்ததால், குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாம். அதன் கண்களை தானம் செய்தார்களாம். கண்தானம் செய்யப்பட்ட விஷயம் தான் பெரிதாகப் பேசப்பட்டது. ரொம்ப நாட்களாக என் மனதை வதைத்துக் கொண்டிருந்த படுத்துக் கொண்டே பாலூட்டிய விஷயத்தை அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் எனக்கு மட்டும் நெருடிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த இடுகை.

நிறைய பெண்கள் செய்யும் தவறே இது தான். எழுந்து உட்கார்ந்து பால் கொடுக்க சோம்பேறித்தனம். படுத்துக் கொண்டே பால் கொடுப்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்று இப்பொழுதாவது மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி.

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளாவது மூச்சு தாங்கி குடித்து விடும்.  பச்சிளங்குழந்தைகளுக்கு படுத்து கொண்டு பால் கொடுத்தால் மூச்சு முட்டும். அப்படி கொடுக்கும் போது நாம் கையால் அழுத்திப் பிடித்து கொடுக்கவும் முடியாது. அப்படியே தூங்கிப் போனால், பால் குழந்தையின் மூக்கிலும் ஏறும் வாய்ப்பு உள்ளது. பிரசவம் ஆனபின் களைப்பாகவும், மயக்கமாகவும், அசதியாகவும் தான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் பார்த்து குழந்தையின் விலை மதிக்க முடியாத உயிருடன்
விளையாடலாமா?

எவ்வளவு தூக்கக் கலக்கமாக இருந்தாலும், எழுந்து, நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு (முதுகுக்கு தலையணை கூட வைத்துக் கொள்ளலாம்) குழந்தையின் தலையை முழங்கைக்கு மேல் வைத்து மார்போடு சேர்த்து பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீளும் கை குழந்தையின் தொடை வரை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்த கையின் ஆட்காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே மார்பகத்தை அழுத்திப் பிடித்து குழந்தையின் வாயில் வைத்து பால் புகட்ட வேண்டும்.

பால் அதிகமாக சுரந்தால் பிறந்த குழந்தைகளால் (ஒரு மாதம் வரை) மூச்சு தாங்கி குடிக்க முடியாது. அப்போது விரல்களை நெருக்கிப் பிடித்து பால் குழ்ந்தையின் வாய்க்குள் போகும் அளவை கட்டுப்படுத்த முடியும்.

பால் கொடுத்து முடிந்ததும், குழந்தையை தோளில் சாத்தி முதுகில் சிறிது நேரம் லேசாக தட்டிக் கொடுத்து, (குழந்தைக்கு)ஏப்பம் வந்த பிறகே படுக்க வைக்க வேண்டும்.

முதல் குழந்தை என்றால் நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாது. கூட இருக்கும் பெரியவர்கள் தான் சொல்லித் தர வேண்டும்.

நிறைய மருத்துவமனைகளிலும் ஏகப்பட்ட ஃபீஸ் வாங்குகிறார்களே தவிர, பிரசவம் முடிந்தபின் இதையெல்லாம் எந்த  மருத்துவரும் பொறுமையாக விளக்கிச் சொல்வதில்லை. அங்கு இருக்கும் நர்சுகளோ குழந்தைக்கு அம்மாவை பால் கொடுக்க சொல்லுங்கம்மான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க (சமீபத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆன போது நேர்ந்த அனுபவங்கள் தான்).

கொடுமை என்னவென்றால் கூட இருப்பவர்களும் படுத்துகிட்டே பால் கொடுக்கச் சொல்வார்கள். அதைப் பார்த்து, அறிவுரை சொல்லியும் இருக்கிறேன். சரி சரிம்பாங்க. நாம் இந்த பக்கம் வந்ததும் அவங்க வழிக்கு போயிடுவாங்க.நல்லதுக்கு தானே சொன்னார்களென்று தெரிவதில்லை.

இப்பவும் அப்படித்தான், மனம் பொறுக்காமல் கொட்டி விட்டேன். இதைப் படித்து ஒரு சிலராவது புரிந்து கொண்டால் போதும்.

பத்து நிமிட கஷ்டம் பார்த்து
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த
பத்தரை மாற்றுத் தங்கத்தை
பறி கொடுத்து விடாதே மகளே!

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க, கிடைத்ததொரு செல்வத்தை நம் சோம்பேறித்தனத்தாலும், அஜாக்கிரதையாலும் இழக்கலாமோ?

;;