Friday, February 5, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி-2)

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நல்லபடியாகவே வளர்ந்து கொண்டு இருந்தது லவ் பேர்ட்ஸ். கப்பில் தினை தீர்ந்து விட்டால், கப்பை ஆட்டி அழகாக சத்தம் செய்யும். தண்ணீர் வைத்தால் குடித்து விட்டு, உடனே கப்பை தூக்கிப் போட்டு தண்ணீரைக் கொட்டி விடும். ரொம்ப போரடித்தால் அதுகளே கூண்டைத் திறந்து கொண்டு வெளியில் வந்து விளையாடும். அதற்காகவே கூண்டின் கதவில் ஒரு கொக்கி மாட்டி வைத்திருப்பேன். இரண்டும் சேர்ந்து அதையும் கழட்ட முயற்சி செய்யும்.

இப்படி இருக்க ஒரு நாள்...
வழக்கம் போல் பையன் கூண்டைத் தூக்கி வைத்து குருவிகளை வெளியில் விட்டு ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்தான். அவர் எழுந்து நடக்கும் நிலையில் இல்லாததால், நான் ரூமில் அவரிடம் பேசிக் கொண்டே சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தேன். ரூம் கதவு லேசாக திறந்திருந்தது. விளையாடிக் கொண்டே இருந்த மஞ்சள் குருவி ரூமில் என் சத்தம் கேட்கவே, உள்ளே பறந்து வந்திருக்கிறது. பறந்த வேகத்தில் கொஞ்சம் உயரமாகவே பறந்து விட்டது.(சாதாரணமாக அவ்வளவு உயரம் பறக்காது). வந்த வேகத்தில் ஓடிக் கொண்டு இருந்த ஃபேனில் அடிபட்டு என் மடியில் வந்து விழுந்தது. ஐயோ என்று கத்திக் கொண்டே அதை எடுத்து, பையனை தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாயில் விட்டேன். எங்குமே காயம் இல்லை. ஆனால், என்னைப பார்த்துக் கொண்டே மெல்ல மெல்ல கண்களை மூடி உயிரை விட்டு விட்டது.....
பையனும், நானும் அழுத அழுகை கொஞ்சமில்லை. பிரிய மனமின்றி கையில் வைத்து அழுது கொண்டே இருந்தோம். வேறு வழியின்றி செடி போட வைத்திருந்த தொட்டி மண்ணில் ஆழக் குழி தோண்டிப் புதைத்தோம்(நாங்கள் இருந்தது இரண்டாவது மாடியில்).

ஒரு குருவியை இப்படி இழந்து விட்டோம். இன்னொன்றைப் பார்க்க ரொம்பவே பாவமாக இருந்தது. எங்கள் சோகமும் அதிகமாக இருந்தது. வேறு ஒன்றை வாங்கி விட்டால் கொஞ்சம் சரியாகும் என்றெண்ணினோம். அச்சு அசல் அதே போல் ஒரு குருவியை என் பையன் வாங்கி வந்தான். இம்முறை சரியாக பெண் குருவியைக் கொடுத்தார்கள். 2 நாட்கள் பேசாமல் இருந்த பச்சைக் குருவியும் அதனுடன் நட்பாகி விளையாட ஆரம்பித்தது. கொஞ்ச நாட்கள் ஆனதும், பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........                                                                                                                                                                                           அப்பறம்  சொல்றேனே....

8 comments:

geetha said...

செல்விக்கா!
படிச்சதும் நானே ரொம்ப கலங்கிட்டேன். நாங்ககூட பெட் அனிமல்ஸ் மேல ஆசை வைக்காததற்கு காரணம் இதுதான்.
அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா தாங்க முடியாது.
அடுத்த சஸ்பென்ஸ் எப்ப உடைப்பீங்க???
லக்கி ரொம்ப க்யூட். அத்துடன் உங்க கமென்ட் அதைவிட சூப்பர்!!

athira said...

என்ன செல்வியக்கா.. படித்ததும் ஒருமாதிரி ஆகிவிட்டது, அதென்ன அடிக்கடி.. எங்களை கதிரை நுனிக்குக்கொண்டுவந்துவிட்டு, அப்புறம் என நிறுத்திவிடுறீங்கள்.. தொடருங்கோ.

kavisiva said...

அய்யோ ரொம்ப சங்கடமா போயிடுச்சு செல்விம்மா! நான் பெட்ஸ் வளர்க்க தயங்குவதற்கு இதுவும் காரணம் :-(

மீண்டும் சஸ்பென்ஸா?! ஆனால் நான் ஓரளவு யூகித்து விட்டேனே :-)

asiya omar said...

அக்கா,எப்ப அடுத்த இடுகை,லவ் பேர்ட்ஸ் குஞ்சு பொரித்து விடும் சீக்கிரம்.தினம் வந்திட்டு போறேன்.

அண்ணாமலையான் said...

கஷ்டமா இருக்குது

செந்தமிழ் செல்வி said...

உண்மை கீதா! ஆனால், அவைகள் இருப்பதால் தான் இப்ப எங்க வீட்டில் கொஞ்சமாவது சத்தம் கேட்டுக் கொண்டு இருக்கு.
லக்கி மேலே எல்லோரும் கண் வைக்காதீங்கப்பா!
அதிரா,
என் மனதை விட்டு அந்தக் குருவி என்றுமே அகலாது.
அப்படி இல்லைன்னா, அடிக்கடி இந்தப் பக்கம் வரமாட்டீங்கல்ல!
கவி, உன் யூகம் சரியாகவும் இருக்கலாம்:-)
ஆசியா,
சத்தமில்லாமல் வந்து போறீங்களோ? அப்படியும் இருக்கலாம்.
சகோ. அண்ணாமலையான்,
நன்றி.

ஜீனோ said...

ம்ம்..ம்ம்..கஷ்டமா இருக்குது!! :(

அப்புறம், க்ளைமாக்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு இந்த கதைல..அல்லாருமே என்ன சஸ்பென்ஸ்-னு கண்டு பிடிச்சுட்டாங்கள் செல்வி ஆன்ட்டீ!! :D

இமா said...

எனக்கும் இப்படி ஒரு ஃபான் அனுபவம் இருக்கு செல்வி. கொடுமை இல்ல. ;( சீலிங் ஃபான்ல ஒரு சிட்டு அடிபட்டு இறந்து போச்சு. பிறகு எங்கள் வீட்டிற்குச் சிட்டுகள் வருவது இல்லை. ;(

Post a Comment