Wednesday, February 3, 2010

லவ் பேர்ட்ஸ் - பகுதி 1

எல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன்.


நான் முதலில் வளர்க்கணும் நினைச்சது லவ் பேர்ட்ஸ் தான். பெட் அனிமல்னாலே சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற சிரமங்கள் இருக்குமேன்னு அந்தப் பக்கமே போகக் கூடாதுன்னு நினைச்சேன்.

பையன் மீன் தொட்டி வேணும்னு கேட்ட போது கூட ரொம்ப யோசிச்சு, எல்லாம் அவன் பொறுப்புன்னு சொல்லி ஒரு கிறிஸ்மசுக்கு வாங்கி கிஃப்டா கொடுத்தோம்.   மீன் செத்துப் போகும், திரும்ப வாங்கி விடுவான், செத்துப் போகும் இப்படியே போய் அவனே வெறுத்து கடைசியில் காலியாகவே விட்டுட்டான்.

பையனும் அந்த வருடம் ஸ்கூல் முடித்து காலேஜில் சேர வெளியூர் போய்ட்டா, நாம மட்டும் தனியா இருக்கணுமேன்னு கவலையா இருந்துச்சு. அப்பதான் இவர் என் பர்த்டேக்கு என்ன வேணும்னு கேட்டார். லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடி வேணும்னு கேட்டேன். அழகா கூண்டோடு வாங்கிக் கொடுத்தார். லவ்பேர்ட்ஸ் முட்டை வைத்து, குஞ்சு பொரித்து பெரிய குடும்பமா ஆனது போல் கனவெல்லாம் வந்தது.



ரெண்டு லவ் பேர்ட்ஸும் பச்சையும், மஞ்சளும் கலந்த குட்டி குருவிகள். குட்டியாக இருந்ததால் கொத்தாமல் இரண்டுமே என் கையை நீட்டினால் ஏறி உட்கார்ந்து கொள்ளும். ஃபேனை நிறுத்தி விட்டு, எல்லாக் கதவையும் அடைத்து விட்டு கூண்டை திறந்து விட்டால் போதும். இரண்டும் கூண்டு மேலே வந்து உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருக்கும். விளையாடியது போதும், உள்ளே போங்கள் என்று சொன்னால் போய்விடும். கதவை சாத்தி விடுவோம். அதிலும் முழுவதும் மஞ்சளாக இருக்கும் குருவி தான் எங்களின் பெட். கைகளில் ஏறி விளையாடும். பச்சை கலந்த குருவி கொஞ்சம் பயப்படும். நான் ஆபீசில் இருந்து வந்தால் போதும். கூண்டின் ஓரம் வந்து இதுக்கும், அதுக்கும் நடந்து என்னைக் கூப்பிடும். நான் மறுபுறம் போய் நின்றால் எப்படியோ கண்டு அங்கும் வந்துவிடும். கீழே உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டு இருந்தால் எட்டிக் கூப்பிடும். கீரை, கொத்தமல்லித் தழைன்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க.


எங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஆஸ்பிட்டலிலேயே ஒன்றரை மாதம் இருக்க வேண்டி வந்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்த அன்று என்னைப் பார்த்ததும் இங்கும் அங்கும் ஓடி மஞ்சள் குருவி கத்திய கத்தல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரை ஸ்டெரச்சரோடு மேலே தூக்கி வர வந்த எங்கள் ஆபீஸ் நண்பர்கள் அப்படி ஆச்சரியப்பட்டார்கள். கையில் எடுத்ததும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது. ஆறறிவு இருக்கும் மனிதர்களிடம் உள்ள அன்பை விட, அந்தப் பறவைகள் காட்டிய பாசத்தில் அன்று நெகிழ்ந்து அழுதே விட்டேன். நாங்கள் எவ்வளவோ நல்லது செய்தவர்கள் கூட, எங்களை ஆஸ்பிட்டலில் வந்து பார்க்காத ரணம், இந்தக் குட்டிக் குருவிகள் காட்டிய அன்பில் மறந்தது.

வாங்கி ரொம்ப நாளாச்சே, இன்னும் முட்டை வைக்கலையேன்னு ஒரே யோசனையாக இருந்தது. அப்போது தான் அவருக்கு பயிற்சி கொடுக்க எங்க வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிசியோதெரபிஸ்ட் சொன்னார், இரண்டுமே ஆண் குருவிகள் என்று. ஏதாவது ஒன்றைக் கொடுத்து விட்டு வேறு பெண் குருவி மாற்றி வந்து விடுங்கள் என்று சொன்னார். இரண்டுமே எங்களுக்குப் பிடிச்சது. எதைக் கொடுக்க? கூண்டை வேணா பெரிசா மாற்றலாம்னு யோசித்துக் கொண்டிருந்தோம். விபத்தின் தாக்கம் குறையாததால் அவர் முதலில் நடக்கட்டும்,பிறகு பார்க்கலாம்னு இருந்தோம். அப்போது தான்,

அந்த சம்பவம் நிகழ்ந்தது......

மீதி சிறிய இடைவேளைக்குப் பின்..........

Friday, January 29, 2010

கேட்டு பதறிய சம்பவம்!


ஆனந்த விகடனில் வெளிவந்ததாக ஆபீசில் சொன்னார்கள். நான் படிக்கவில்லை. பிறந்த குழந்தைக்கு மயக்க கலக்கத்தில் படுத்துக் கொண்டே பால் கொடுத்ததால், குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாம். அதன் கண்களை தானம் செய்தார்களாம். கண்தானம் செய்யப்பட்ட விஷயம் தான் பெரிதாகப் பேசப்பட்டது. ரொம்ப நாட்களாக என் மனதை வதைத்துக் கொண்டிருந்த படுத்துக் கொண்டே பாலூட்டிய விஷயத்தை அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் எனக்கு மட்டும் நெருடிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த இடுகை.

நிறைய பெண்கள் செய்யும் தவறே இது தான். எழுந்து உட்கார்ந்து பால் கொடுக்க சோம்பேறித்தனம். படுத்துக் கொண்டே பால் கொடுப்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்று இப்பொழுதாவது மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி.

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளாவது மூச்சு தாங்கி குடித்து விடும்.  பச்சிளங்குழந்தைகளுக்கு படுத்து கொண்டு பால் கொடுத்தால் மூச்சு முட்டும். அப்படி கொடுக்கும் போது நாம் கையால் அழுத்திப் பிடித்து கொடுக்கவும் முடியாது. அப்படியே தூங்கிப் போனால், பால் குழந்தையின் மூக்கிலும் ஏறும் வாய்ப்பு உள்ளது. பிரசவம் ஆனபின் களைப்பாகவும், மயக்கமாகவும், அசதியாகவும் தான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் பார்த்து குழந்தையின் விலை மதிக்க முடியாத உயிருடன்
விளையாடலாமா?

எவ்வளவு தூக்கக் கலக்கமாக இருந்தாலும், எழுந்து, நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு (முதுகுக்கு தலையணை கூட வைத்துக் கொள்ளலாம்) குழந்தையின் தலையை முழங்கைக்கு மேல் வைத்து மார்போடு சேர்த்து பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீளும் கை குழந்தையின் தொடை வரை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்த கையின் ஆட்காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே மார்பகத்தை அழுத்திப் பிடித்து குழந்தையின் வாயில் வைத்து பால் புகட்ட வேண்டும்.

பால் அதிகமாக சுரந்தால் பிறந்த குழந்தைகளால் (ஒரு மாதம் வரை) மூச்சு தாங்கி குடிக்க முடியாது. அப்போது விரல்களை நெருக்கிப் பிடித்து பால் குழ்ந்தையின் வாய்க்குள் போகும் அளவை கட்டுப்படுத்த முடியும்.

பால் கொடுத்து முடிந்ததும், குழந்தையை தோளில் சாத்தி முதுகில் சிறிது நேரம் லேசாக தட்டிக் கொடுத்து, (குழந்தைக்கு)ஏப்பம் வந்த பிறகே படுக்க வைக்க வேண்டும்.

முதல் குழந்தை என்றால் நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாது. கூட இருக்கும் பெரியவர்கள் தான் சொல்லித் தர வேண்டும்.

நிறைய மருத்துவமனைகளிலும் ஏகப்பட்ட ஃபீஸ் வாங்குகிறார்களே தவிர, பிரசவம் முடிந்தபின் இதையெல்லாம் எந்த  மருத்துவரும் பொறுமையாக விளக்கிச் சொல்வதில்லை. அங்கு இருக்கும் நர்சுகளோ குழந்தைக்கு அம்மாவை பால் கொடுக்க சொல்லுங்கம்மான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க (சமீபத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆன போது நேர்ந்த அனுபவங்கள் தான்).

கொடுமை என்னவென்றால் கூட இருப்பவர்களும் படுத்துகிட்டே பால் கொடுக்கச் சொல்வார்கள். அதைப் பார்த்து, அறிவுரை சொல்லியும் இருக்கிறேன். சரி சரிம்பாங்க. நாம் இந்த பக்கம் வந்ததும் அவங்க வழிக்கு போயிடுவாங்க.நல்லதுக்கு தானே சொன்னார்களென்று தெரிவதில்லை.

இப்பவும் அப்படித்தான், மனம் பொறுக்காமல் கொட்டி விட்டேன். இதைப் படித்து ஒரு சிலராவது புரிந்து கொண்டால் போதும்.

பத்து நிமிட கஷ்டம் பார்த்து
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த
பத்தரை மாற்றுத் தங்கத்தை
பறி கொடுத்து விடாதே மகளே!

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க, கிடைத்ததொரு செல்வத்தை நம் சோம்பேறித்தனத்தாலும், அஜாக்கிரதையாலும் இழக்கலாமோ?

Tuesday, January 26, 2010

சமைக்குமுன்....


சமையல்னு தலைப்பைப் பார்த்தவுடன் வழக்கம் போல ஏதாவது குறிப்பா இருக்கும்னு தானே நினைச்சீங்க! அதுவும் உண்டு. அதுக்கு முன்பு சொல்ல வேண்டிய சில விஷயங்களைச் சொல்லிட்டு அப்பறமா குறிப்புகளுக்கு போகிறேனே:-)

சமையல் ஒரு கடல். இதில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரையும் சொல்லவே முடியாது. கொஞ்சமாகத் தெரிந்தாலும், ருசியாக சமைத்து, அழகாக பரிமாறத் தெரிந்தாலே போதும். வகை வகையாக சமைத்து, வாயில் வைக்க முடியாமல், கசகசன்னு பரிமாறினாலும் சாப்பிட தோன்றாது.



சமையலறை எனபது ஒரு பரிசோதனைக்கூடம் போல். ஒரே குறிப்பை, ஒரே அளவு பொருட்களை வைத்து 10 பேர் சமைத்தால், பத்தும் ஒன்று போல் இருக்காது. காய்கறி நறுக்கும் முறை, வதக்கும்(வேகும்) நேரம், அடுப்பின் எரிநிலை பொறுத்து ருசியும் மாறுபடும். இருக்கும் பொருட்களை வைத்து குறுகிய நேரத்தில் வாய்க்கு ருசியாக சமைப்பவர்களை சமையல் கலை நிபுணர்கள் என்றே சொல்லாம்.

சமைக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
சமையலறையில் சமைக்கப் போகும் பெண்ணே, அழகுக் கண்ணே,
சில புத்திமதிகள் சொல்லறேன் கேளு முன்னே :-)

அடுத்த நாளுக்கு என்ன சமையல்னு முந்தின நாளே யோசித்து முடிவு செய்து விட்டால், அடுத்த நாள் மளமளன்னு சமைக்க ஆரம்பிக்க முடியும்.  தேவையான காய்கறி, பொருட்கள் இருக்கான்னு பார்த்து, வேண்டுமானவற்றை வாங்கி வைத்து விடலாம்.

இல்லையென்றாலும் காலையில் எழுந்து பிரஷ் செய்யும் நேரத்தை வீணாக்காமல், யோசித்து வைத்துக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் லூஸ் ஹேர்தான் ஃபாஷன். அந்த ஃபாஷனை சமையலறையில் மட்டும் தவிர்த்து, எப்போதுமே சமைக்கப் போகும் முன் தலையை தூக்கி வாரி கிளிப் போட்டுக் கொண்டால், சமைக்கும் போது முடி உதிர்ந்து சமைக்கும் பொருட்களில் விழுவதைத் தவிர்க்கலாம்.

1. காய்கறிகளை அழகாக, ஒரே அளவில் சீராக நறுக்கினாலே சமையல் பார்க்க நன்றாக இருக்கும்.

2. சமைக்க வேண்டிய பொருட்களை (நறுக்கிய காய்கறிகள், எண்ணெய், மசாலாப் பொருட்கள், பாத்திரம்) தயாராக எடுத்து வைத்துக் கொண்டு சமைக்க ஆரம்பித்தால், அடுப்பில் வைத்தது தீயாமல், குறுகிய நேரத்தில் சமைக்க முடியும்.
3. அரைத்து செய்யும் சமையலாக இருந்தால், அரைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. ஊற வைத்து செய்வதாக இருந்தால் முன்பே ஊற வைத்து தயாரான பின் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.
5. பாத்திரத்தை பிடிப்பதற்கான டவலையோ, இடுக்கியையோ பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
6. அடுப்பை எப்போதும் மிதமான தீயில் வைத்து சமைக்க பழக வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே ஏற்றி வைக்க வேண்டும். பொருளும் தீய்ந்து போகாது, காஸும் மிச்சமாகும். (இப்போது இருக்கும் விலைவாசியில் 4 நாட்கள் கூட கேஸ் வந்தாலே கணவரிடம் ஒரு குட் வாங்கலாமே!)
7. காய்களின் தோல், வெங்காயத்தோல்  முதலியவற்றை நறுக்கி முடித்தவுடன் அதற்கான குப்பைத் தொட்டியில் போட்டு விட்டால் கிச்சன் முழுக்க ஓடாது.
8. சமைக்கும் போது காட்டன் துணி வகைகளையே உடுத்த வேண்டும். இல்லையேல் மேலே ஏப்ரான் கட்டிக் கொள்ளலாம்.
9. உபயோகித்த பின் கழுவ வேண்டிய பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுமிடத்தில் போட்டு விட்டால், இடம் நிறைய இருப்பது போல் இருக்கும் (சில பேர் சமைத்து முடித்தபின் சமையலறையைப் பார்த்தால் ஒரு போர்க்களம் போல் இருக்கும்).
10. மிளகாய், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் முதலியவற்றை எடுத்த பின் மறக்காமல் கைகழுவி விட்டால், பிறகு கண்ணைக் கசக்கிக் கொண்டு இருக்கும் அவசியம் இருக்காது.
11. பிரிஜ்ஜில் இருந்து எடுத்து சமைப்பதாக இருந்தால் அரை மணி முன்பே வெளியே எடுத்து வைத்தால், எரிவாயு மிச்சமாகும்.
12. எப்போதும் சமைக்கும் போது ஒரு ஜக்கில் தண்ணீர் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
13. வேலைக்கு செல்லும் பெண்கள் வார விடுமுறை அன்றே தேங்காயைத் துருவி கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி பிரீஸரில் வைத்துக் கொள்ளலாம்.
14. அடுத்த 2 நாட்களுக்கு தேவையான வெங்காயம், பூண்டை உரித்து ட்ப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைக்கலாம்.
15. இஞ்சி, பூண்டு பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
16. புளிக்கரைல் செய்து, சிறிது உப்பு போட்டு கலக்கி பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
17. முந்தின நாள் இரவே காய்களை நறுக்கி டப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
18. கொஞ்சம் வெங்காய சட்னி, வத்தக் குழம்பு செய்து பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் சமயத்துக்கு உதவும்.
19. மொத்தமாக இட்லிக்கு மாவு அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஒரேயடியாக இட்லிக்கு என்றில்லாமல், அடை, ஆப்பம், பணியாரம், காஞ்சீபுரம் இட்லி என பிரித்து அரைத்து வைத்துக் கொண்டால் வெரைட்டியாக செய்ய முடியும். (இரவும் டிபன் செய்பவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்).
20. சப்பாத்திக்கும் மாவு பிசைந்து டப்பாவில் போட்டு மேலாக சுத்தமான துணியால் மூடி, டப்பாவை மூடி வைத்தால் 3 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

...இன்னும் மணக்கும்.

தமிழ்த்தாய் மன்னிப்பாளாக!

வலைப்பூ முழுவதும் சுத்தத் தமிழில் எழுதலாம், இருப்பினும் பேச்சுத் தமிழுக்கு மாறினால் தான் பதிவுகள் இயல்பாய் இருக்கும். ஆகவே, இனி பேச்சுத்தமிழுக்கு மாறலாமென்று இருக்கிறேன்.

;;