Tuesday, February 23, 2010

லக்கியின் பிறந்தநாள்!!

நேற்று (22-02-2010) லக்கியின் இரண்டாவது பிறந்தநாளை இனிமையாகக் கொண்டாடினார். எப்படின்னு பாருங்களேன்!

காலையிலேயே ஷாம்பு போட்டு குளித்து, முடியை நன்கு ப்ரஷ் செய்து, பவுடர் எல்லாம் போட்டு, 'போ' கட்டிக் கொண்டு கேக் வெட்ட தயாராக....
கேக்குக்கு முன்பு உட்கார்ந்திருக்கார்.
எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பதுன்னு படுத்துக் கொண்டு....
கேக் தயாராக இருக்கிறது...
சமத்தாக நாங்க கை(கால்) பிடிக்க கேக் வெட்டும் லக்கி....
நான் கேக் ஊட்ட சாப்பிடுகிறார்.
ஓகே! எல்லாரும் அவங்க அவங்க வீட்டில் லக்கி பிறந்தநாளுக்கு கேக் சாப்பிட்டுக்கோங்க:-)

Sunday, February 21, 2010

மணல் ஓவியம்

தேவையான பொருட்கள்:

1) மணல் ஓவியம் கிட் - 1 அல்லது கருப்பு வெல்வெட் துணி - தேவையான அளவு,
2) விருப்பமான படம்,
3) ஃபெவிக்ளூ - 1,
4) வெள்ளை மணல் (கடைகளில் கிடைக்கும்)
5) தேவையான ஃபேப்ரிக் கலர்கள்,
6) வண்ணம் தீட்ட நெ. 1 பிரஷ் - 1.


செய்முறை:

 1) கிட் என்றால் அதிலேயே படம் வரைந்து இருக்கும். இல்லையென்றால் விருப்பமான படத்தை மஞ்சள் கலர் டிரேஸ் பேப்பர் வைத்து துணியில் வரைந்து கொள்ளவும்.
2) படத்தின் அவுட் லைனைக்குள் ஃபெவிக்ளூவை நன்றாக தடவவும்.


3) வெள்ளை மணலை அதன் மேல் இடைவெளி இன்றி தூவி கையால் அழுத்தி விடவும்.


4) சிறிது நேரம் கழித்து துணியைத் தூக்கி தட்டினால், மேலாக ஒட்டாத மணல் தனியாக வந்து விடும்.


5) பிரஷ்ஷின் பின்புறத்தால் அவுட்லைனை விட்டு வெளியே பிசிறாகத் தெரியும் மணலை சீராக்கவும்.

 
6) ஒரு நாள் முழுதும் நன்கு காய விட்டு, பொருத்தமான ஃபேப்ரிக் கலரை பிரஷ்ஷால் எடுத்து பிசிறின்றி தீட்டவும்.

7) டபுள் ஷேடிங் கூட கொடுக்கலாம்.
 

8) படம் முழுவதும் வண்ணம் தீட்டியபின் நன்கு காய விடவும்.

 

9) விருப்பம் போல் பிரேம் செய்து அழகாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாகவும் கொடுக்கலாம்.

Tuesday, February 16, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 4)


(குட்டிம்மா என் கையில்)

ஆச்சரியம் காத்திருந்தது.......

குட்டிக் குருவி சட்டிக்கு வெளியே வந்து கூண்டுக்குள் இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டு இருந்தது!!! அதைத் தொடப் போனால் அம்மா குருவி என்னையே கொத்த வந்தது. போகட்டும்னு விட்டு விட்டாலும் குட்டிக் குருவியை எடுக்காமல் இருக்க முடியலை. அம்மாக் குருவியிடம் வேறு போக்குக் காட்டி குட்டியை கையில் எடுத்தால், கண் மட்டும் பெரிசா திருவிழாவில் காணாமற் போன குழந்தை மாதிரி விழித்தது. அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குட்டிக் குருவி என் கையில் தான் இருக்கும். கையில் வைத்து கொத்தமல்லித் தழையை நறுக்கிக் கொடுத்தால் அழகாக எடுத்து சாப்பிடும். பழக ஆரம்பித்த பின் நான் வீட்டிற்கு வந்து விட்டாலே என்னைக் கூப்பிட்டு வெளியே எடுக்கச் சொல்லும். நான் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை பார்த்தாலும் என் தோள் மீது அல்லது கீபோர்டு மேல் தான் உட்கார்ந்திருக்கும். அம்மா குருவியும் போகுது போன்னு விட்டுடுச்சு. குட்டிம்மாவும், நானும் ஒளிந்தெல்லாம் விளையாடுவோம்.

அம்மா குருவிக்கு என்னாச்சுன்னு தெரியலை. அப்பா குருவியை எப்பப் பார்த்தாலும் துரத்தி துரத்தி கொத்திக் கொண்டே இருந்தது. காயமும் ஆகிடுச்சு. எடுத்து மஞ்சள் அரைத்து பத்துப் போட்டு, தனியாக அடைத்து வைத்தோம். குட்டிம்மாவை ஒன்றும் செய்யாது. கொஞ்சம் சரியானது போல் தெரியவே திரும்பவும் கூண்டுக்குள் விட்டோம். நாள் முழுவதும் கொத்தாமல் இருக்கவே சமாதானம் ஆகி விட்டதுன்னு நினைத்தோம். நாங்கள் அனைவரும் அன்று மாலை வெளியே சென்று விட்டோம். திரும்ப வந்து பார்த்தால்....

அப்பா குருவி ரத்த மயமாக நின்று கொண்டு இருந்தது. பதறி வெளியே எடுத்து துடைத்து, மஞ்சள் அரைத்துப் போட்டு தனியாக அடைத்து வைத்தோம். இரவு நாங்கள் படுக்கும் வரை நன்றாகவே இருந்தது. காலையில் எழுந்து பார்த்தால், நாங்கள் முதன் முதலில் வாங்கிய இரண்டாவது குருவியும் உயிரை விட்டிருந்தது....

கண்ணீருடன் அதையும் சட்டியில் புதைத்து வைத்தோம். இனி ஒரு நிமிடமும் அம்மா குருவி வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டேன். என் பையன் அதைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, எங்கள் குட்டிம்மாவுக்கு ஏற்ற மாதிரி ஒரு ஆண் குருவியை வாங்கி வந்தான். கலரும் இரண்டும் ஒன்று போல இருந்தது. மெல்ல நாள் போகப் போக குட்டிம்மாவும் வளர்ந்து இறக்கையெல்லாம் முளைச்சாச்சு. துணையுடன் சண்டை போடாமல் பழகியது.

ஒரு நாள் குட்டிம்மா என்னைக் கத்திக் கூப்பிட்டது. என்னவென்று போனால், சட்டிக்குள் போய் தான் இட்ட முட்டையைக் காட்டியது. அதுவும் மூன்று முட்டை வைத்தது. அடையும் காத்தது. ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்.......

வேறு வழி இல்லை, தொடரும் தான்......

Wednesday, February 10, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 3)


பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........

சின்னக் கோலிக்குண்டு சைஸில் பழுப்பு கலரில் ஒரு முட்டை!! ஐ! ஒரு வழியா நம்ம வீட்டு லவ் பேர்ட்ஸும் முட்டை வெச்சிருக்குன்னு சந்தோஷமாக இருந்தது. எல்லோரும் சொன்னாங்க.கூண்டுக்குள் பஞ்சை போட்டு வைங்கன்னு.  கொஞ்சம் பஞ்சை பிய்த்து கூண்டுக்குள் போட்டு வைத்தோம். அதைத் தூக்கிக் கொண்டு போய் சட்டிக்குள் வைத்துக் கொண்டது.

ஒரு நாள் விட்டு அடுத்த நாள் எட்டிப் பார்க்கும் போது இன்னொரு முட்டை. அதே போல் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் மூன்றாவது முட்டை. 21 நாட்கள் ஆகும், குஞ்சு பொரிக்கன்னு சொன்னாங்க. அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும் மாற்றிமாற்றி சட்டிக்குள் உட்கார்ந்து அடை காத்தது. நாளை எண்னிக் கொண்டே வந்தேன்.

22 வது நாள் காலையில் எழும் போதே ஏதோ வித்தியாசமான சப்தம் கேட்டது. இஸ்க், இஸ்க்னு மெதுவா கேட்டது. எழுந்து நேரே போய் சட்டியைப் பார்த்தால், விரல் நுனி பெருசுக்கு ஒரு புழு போல் ஒன்று சட்டுக்குள் இருந்தது. மூக்கும், கண்ணும் மட்டும் தான் பெரிசா தெரிந்தது. கண் சரியா விழிக்கலை. ஆனா, வாயைத் திறந்து கொண்டே சத்தம் மட்டும் போட்டுக் கொண்டே இருந்தது.

அம்மாக் குருவி வெளியில் வந்து தினையை எடுத்துப் போய் குட்டிக்கு ஊட்டிக் கொண்டே இருக்கும்.  அப்பாக் குருவி அந்த வேலையைச் செய்யலைன்னு கொத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு ஓரமாக போய் உட்கார்ந்திருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் போதாமல் குட்டி கத்திகிட்டே இருக்கும்.

அடுத்த ரெண்டு முட்டையும் எப்ப பொரிக்கும்னு பார்த்துகிட்டே இருந்தால் குட்டி வெளியில் வரவே இல்லை..... ஒரு நாள் ஆபீஸ் போய்ட்டு வந்து பார்த்தால், முட்டைகளை சட்டிக்கு வெளியில் தூக்கிப் போட்டு இருந்தது. உள்ளேஒன்றும் இல்லை. முட்டை கெட்டுப் போய்ட்டா, அப்படித்தான் தூக்கிப் போடுமாம். பாவமாக இருந்தது.

அப்பப்ப எட்டிப் பார்க்கும் போதெல்லாம், குட்டிக்குருவிக்கு லேசாக முடி வந்திருக்கும். பார்க்கவே அருவருப்பாக இருப்பது போல் இருக்கும். நாங்க எட்டிப் பார்த்தாலே அம்மாக் குருவி உள்ளே போய் தன் இறகால் குட்டியை மூடிக் கொள்ளும். அம்மாக்குருவி, அப்பாக்குருவி இரண்டுமே மஞ்சள், பச்சை, கருப்பு கலந்த கலர். ஆனால் குட்டி என்னவோ ஊதா வண்ணத்தில் இருப்பது போல் தெரிந்தது. சரியாக முடி வளராததால் என்ன கலர்னு சரியா தெரியலை. ஆனா, ரொம்ப வேகமாக வளர்ந்துகிட்டு வந்தது. எப்படி சட்டியை விட்டு வெளியில் வரும்னு எங்களுக்கெல்லாம்  யோசனையாக இருந்தது.

ஒரு நாள் காலையில் எழுந்து வந்து பார்த்தால் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது........
இன்னும் வளரும்...

;;