Tuesday, February 16, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 4)


(குட்டிம்மா என் கையில்)

ஆச்சரியம் காத்திருந்தது.......

குட்டிக் குருவி சட்டிக்கு வெளியே வந்து கூண்டுக்குள் இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டு இருந்தது!!! அதைத் தொடப் போனால் அம்மா குருவி என்னையே கொத்த வந்தது. போகட்டும்னு விட்டு விட்டாலும் குட்டிக் குருவியை எடுக்காமல் இருக்க முடியலை. அம்மாக் குருவியிடம் வேறு போக்குக் காட்டி குட்டியை கையில் எடுத்தால், கண் மட்டும் பெரிசா திருவிழாவில் காணாமற் போன குழந்தை மாதிரி விழித்தது. அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குட்டிக் குருவி என் கையில் தான் இருக்கும். கையில் வைத்து கொத்தமல்லித் தழையை நறுக்கிக் கொடுத்தால் அழகாக எடுத்து சாப்பிடும். பழக ஆரம்பித்த பின் நான் வீட்டிற்கு வந்து விட்டாலே என்னைக் கூப்பிட்டு வெளியே எடுக்கச் சொல்லும். நான் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை பார்த்தாலும் என் தோள் மீது அல்லது கீபோர்டு மேல் தான் உட்கார்ந்திருக்கும். அம்மா குருவியும் போகுது போன்னு விட்டுடுச்சு. குட்டிம்மாவும், நானும் ஒளிந்தெல்லாம் விளையாடுவோம்.

அம்மா குருவிக்கு என்னாச்சுன்னு தெரியலை. அப்பா குருவியை எப்பப் பார்த்தாலும் துரத்தி துரத்தி கொத்திக் கொண்டே இருந்தது. காயமும் ஆகிடுச்சு. எடுத்து மஞ்சள் அரைத்து பத்துப் போட்டு, தனியாக அடைத்து வைத்தோம். குட்டிம்மாவை ஒன்றும் செய்யாது. கொஞ்சம் சரியானது போல் தெரியவே திரும்பவும் கூண்டுக்குள் விட்டோம். நாள் முழுவதும் கொத்தாமல் இருக்கவே சமாதானம் ஆகி விட்டதுன்னு நினைத்தோம். நாங்கள் அனைவரும் அன்று மாலை வெளியே சென்று விட்டோம். திரும்ப வந்து பார்த்தால்....

அப்பா குருவி ரத்த மயமாக நின்று கொண்டு இருந்தது. பதறி வெளியே எடுத்து துடைத்து, மஞ்சள் அரைத்துப் போட்டு தனியாக அடைத்து வைத்தோம். இரவு நாங்கள் படுக்கும் வரை நன்றாகவே இருந்தது. காலையில் எழுந்து பார்த்தால், நாங்கள் முதன் முதலில் வாங்கிய இரண்டாவது குருவியும் உயிரை விட்டிருந்தது....

கண்ணீருடன் அதையும் சட்டியில் புதைத்து வைத்தோம். இனி ஒரு நிமிடமும் அம்மா குருவி வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டேன். என் பையன் அதைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, எங்கள் குட்டிம்மாவுக்கு ஏற்ற மாதிரி ஒரு ஆண் குருவியை வாங்கி வந்தான். கலரும் இரண்டும் ஒன்று போல இருந்தது. மெல்ல நாள் போகப் போக குட்டிம்மாவும் வளர்ந்து இறக்கையெல்லாம் முளைச்சாச்சு. துணையுடன் சண்டை போடாமல் பழகியது.

ஒரு நாள் குட்டிம்மா என்னைக் கத்திக் கூப்பிட்டது. என்னவென்று போனால், சட்டிக்குள் போய் தான் இட்ட முட்டையைக் காட்டியது. அதுவும் மூன்று முட்டை வைத்தது. அடையும் காத்தது. ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்.......

வேறு வழி இல்லை, தொடரும் தான்......

22 comments:

kavisiva said...

மனுஷங்களை மாதிரியே பறவைகளிலும் ரவுடி சொர்ணாக்கா இருக்காங்களா?!

பழகிவிட்டால் பறவைகள் நம் குழந்தை போல்தான். எங்கள் மாமியர் வீட்டில் வளர்க்கும் கிளிகளும் இது போலத்தான். எல்லோரும் தூங்கும் போது அமைதியாக இருக்கும். காலையில் எழுந்து அதனருகில் போய் பேசாவிட்டால் கத்தி கத்தி கூப்பாடு போட்டு நம்மை கூப்பிடும். போய் இரண்டு நிமிடம் அதோடு கொஞ்சினால் அமைதியாகிவிடும்.

ஹுஸைனம்மா said...

அக்கா, மர்மக் கதை மாதிரில்ல போகுது!! ஆனாலும் கொலையாளிக்குத் தகுந்த தணடனை கொடுக்காம விட்டுட்டீங்க போங்க!

asiya omar said...

செல்விக்கா,எப்படி அம்மாகுருவி அடித்து அப்பாகுருவிக்கு இரத்தக்காயம்,இறப்பு எல்லாம்,நம்ப முடியலை,சில நேரங்களில் மனைவி அருவாளால் வெட்டி கணவரை கொலை மாதிரி செய்தியாய் இருக்கே.பாவம் அக்கா உங்க மனசு என்ன பாடு பட்டு இருக்கும்.

Mrs.Menagasathia said...

ரொம்ப சஸ்பென்சா எழுதறீங்க செல்விமா....

geetha said...

ஹை செல்விக்கா!
மறுபடியும் அடுத்த பகுதி வந்திட்டதா! ரொம்ப சந்தோஷம். ஆனா, அப்பாக்குருவியின் முடிவு வருத்தமாய் இருக்கு!
அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திட்டு இருக்கேன்
செல்விக்கா!
உங்க ஞாபகசக்தி ரொம்ப அபாரம். அதிரா, உண்மையான நிகழ்வினை கதை போல் சொல்றீங்கன்னு சொல்லியிருக்காங்க.
அம்மாக்குருவி என்னக்காரணத்தால் அப்பாக்குருவியை இப்பிடி கொடூரமாய் கொத்தியிருக்கும்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.
குட்டிக்குருவிக்கு சாப்பாடு ஊட்டலன்னு கோபமாய் இருக்குமோ???
இல்ல குட்டிமேல் பாசமில்லாத அப்பாவெல்லாம் ஒரு அப்பாவான்னு நினைச்சிருக்குமோன்னு பயங்கர யோசனை!!!!

செந்தமிழ் செல்வி said...

மாம் கவி, அப்பா குருவியை காலால் அழுத்தி கொண்டு நடு மண்டையில் நச்சு நச்சுன்னு அது கொத்தும் போது எனக்கும் அப்படித்தான் இருந்தது.
லவ் பேர்ட்ஸை விட கிளிகள் இன்னும் புத்திசாலி கவி. அந்தக் கதையும் இருக்கு. பிறகு சொல்றேன்:-)
ஹுசைனம்மா,
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நல்லா வச்சு சாத்தணும்னுதான் தோணுச்சு! அதை திரும்பக் கொடுப்பதே தண்டனை போலத்தான்னு விட்டுட்டேன்.
ஆசியா,
நீங்க சொல்வது போலத்தான் எனக்கும் முதலில் நம்ப முடியலை. தொடர்ந்து கொத்தும் போது தான் தெரிந்தது அதுகளும் நம் போலத்தான்னு.
ரொம்பவே அழுதேன், தெரியாமல் கூண்டில் விட்டுட்டு போய் விட்டோமேன்னு.
மேனகா,
மிக்க நன்றி. மனதில் நின்றதை அப்படியே எழுதுகிறேன். அவ்வளவுதான்.
கீதா,
அடுத்த பகுதி விரைவில் வரும்:-) அந்த அளவுக்கு அவைகள் என் மனதில் இடம் பிடித்டு விட்டன கீதா.
நீ சொல்வது உண்மைதான். அப்பா குருவிக்கு எப்பவுமே சட்டிக்குள் போவதென்றால் பயம். உள்ளே விட்டால் கூட பயந்து உடனே வெளியே ஓடி வந்து விடும். அதனாலேயே அது முட்டையை அடை காக்கவும் இல்லை. குட்டிக்கு ஊட்டவும் இல்லை. அந்தக் கோபமும் இருக்கலாம். பாசம் இல்லாமல் இல்லை. குட்டி வெளியில் வந்த பின் ஊட்டும். கொஞ்சியது. ஆனால், அம்மா குருவிக்கு என்ன வஞ்சமோ, கொன்றே விட்டது.

ஹைஷ்126 said...

//மனுஷங்களை மாதிரியே பறவைகளிலும் ரவுடி சொர்ணாக்கா இருக்காங்களா?! //

//சில நேரங்களில் மனைவி அருவாளால் வெட்டி கணவரை கொலை மாதிரி செய்தியாய் இருக்கே.//

என்ன இது கதையை விட பின்னூட்டம் கொடுப்பவர்கள் திகிலூட்டுகிறார்கள் :)

ஸாதிகா said...

தோழி,உங்கள் செல்லத்தைப்பற்றி மினிதொடர் ஆக சஸ்பென்ஸ் வைத்து தொடரும் போட்டு அனைவரையும் ஆவல் கொள்ள வைத்துவிடுகின்றீர்கள்.ஹைஷ் சார் சொல்லுவது போல் பின்னூட்டங்களும் திகில் கொடுக்கின்றது.தொடருங்கள்!

ஸாதிகா said...

பிளாக்கில் எழுத்துக்களின் சைசை மாற்றிவிடுங்கள்.நம்மை மாதிரி வாழ்க்கையில் கண்ணாடியே அணியாமல் காலத்தை தள்ளிவிடலாம் என்று இருக்கும் அதிவீர,வீராங்கனைகள் சுலபமாக படிக்கவேண்டும் அல்லவா?

geetha said...

ஸாதிகா அக்கா!
உங்களுக்கு எழுத்து சைஸ் இன்னும் கொஞ்சம் பெரிசாய் வேணும்னா. கீ போர்டில் கன்ட்ரோல் பட்டனை ப்ரெஸ் பண்ணிட்டு மௌசை முன், பின் ஸ்க்ரால் பண்ணினால் எழுத்துக்கள் பெரிதாகும், சிறிதாகும்.
ஏற்கெனவே தெரிந்திருந்தால் மன்னிக்கவும்!

ஜீனோ said...

மனுஷ ஜந்து முதக்கொண்டு:)..ரோபோட் ஜந்து முதக்கொண்டு:))..பறவையினம் வரைக்கும் பாவப்பட்ட ஜன்மம் ஆண்ஜன்மம்தான்!! இந்தக் கொடுமையைக் கேக்க ஆளேயில்லை! ஹும்..எல்லாம் வல்லோன் விட்ட வழி...:(:) ;)

செல்வி ஆன்ட்டி..அடுத்த செட் முட்டைஸ் வந்தாச்சு..ஜூப்பர்! புதிய பறவை சிறகை விரித்து பறக்கிறதே..:D:D:D

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஹைஸ்,
நலமா? பின்னூட்டத்தினாலும் பதிவு இன்னும் சுவாரசியமாகுது பாருங்களேன்:-)

தோழி ஸாதிகா,
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள் போல!!

/பிளாக்கில் எழுத்துக்களின் ைசை மாற்றிவிடுங்கள்./
உங்கள் கட்டளை நிறைவேற்றப்பட்டு விட்டது. இப்ப ஓகேவா?

நன்றி கீதா.

ஜீனோ,
/பாவப்பட்ட ஜன்மம் ஆண்ஜன்மம்தான்/

மனித ஜென்மத்தைத் தவிரன்னு சொல்லி இருந்தால் சரியாக இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.

/.அடுத்த செட் முட்டைஸ் வந்தாச்சு..ஜூப்பர்! புதிய பறவை சிறகை விரித்து பறக்கிறதே/

அவசரப்படக் கூடாது:-)

இலா said...

தொடரும் ..... கதை இப்படியா பாதியிலே தொங்க விடுறது...சீக்கிரம் சொல்லுங்க...

அப்புறம் ஜீனோ/நீங்க.. பாட்டு.. சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே.. கமல்/ஊர்வசி படம்: அந்த ஒரு நிமிடம்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

குட்டிக் குருவி ரொம்போஓஒ க்யூட்.. பிஞ்சுக் குழந்தை மாதிரி இருக்கார்..

ம்ம்.. பிரசவத்தால் ஏதும் மனச்சேதம் ஏற்பட்டிருக்குமோ அம்மாக்கு? அப்பா பாவம்.. ம்ம்..

பேரன் பேத்தி முட்டைஸ் வந்தாச்சா? :)) சீக்கிரம் தொடருங்க..

geetha said...

ஹை!
செல்விக்கா, உங்க குட்டிமா ரொம்ப க்யூட்! கலர்தான் ரொம்ப அழகு!
எனக்கு ரொம்ப பிடிச்சமான ஒரு அழகான பச்சை!
செல்விக்கா!
எங்கப்பா, மாடு வளர்த்தாரு,ஆடு வளர்த்தாரு, கோழி வளர்த்தாரு,பூனை வளர்த்தாரு, அவ்வளவு ஏன், என்னைக்கூட வளர்த்தாரு, ஆனா லவ் பேர்ட்ஸ் வளர்க்கலியேயேஎஏஏஏஏ!
உங்க குட்டிம்மாவை பார்த்து எனக்கும் ஆசை வந்திடுச்சு.
இந்தியாவில் வந்து செட்டில் ஆகிறப்ப கண்டிப்பா வளர்க்க முடிவு பண்ணிட்டேன்.

செந்தமிழ் செல்வி said...

இலா,
தொடர்கதைன்னா அப்படித்தான் முக்கியமான இடத்தில 'தொடரும்'னு போட்டுருவாங்க. ம்ம், சீக்கிரம் சொல்லிடறேனே!

சந்தனா,
குட்டிம்மா ரொம்ப அழகா இருப்பா. பேரன், பேத்தி...?!!!?? அவசரமென்ன? மெதுவா வரும்;0

கீதா,
அன்றே படம் போட இருந்தேன். படம் இணைக்கும் ஆப்ஷன் வரவே இல்லை. நானும் முயன்று முயன்று தோற்றேன். கடைசியில் ஓபராவில் ப்ராப்ளம். இப்பதான் கண்டு பிடித்து படம் இணைக்க முடிந்தது.

//எங்கப்பா, மாடு வளர்த்தாரு,ஆடு வளர்த்தாரு, கோழி வளர்த்தாரு,பூனை வளர்த்தாரு, அவ்வளவு ஏன், என்னைக்கூட வளர்த்தாரு, ஆனா லவ் பேர்ட்ஸ் வளர்க்கலியேயேஎஏஏஏஏ!//
ஹாஹாஹா, நல்ல ஜோக் கீதா!
லவ் பேர்ட்ஸ் வளர்க்கலாம் கீதா, நல்லா பொழுதும் போகும், வீடும் லைவாக இருக்கும். நன்றிம்மா.

இமா said...

We too had lovebirds back @ home. interesting post Selvi. Should ask Mum to read dis. ;)

செந்தமிழ் செல்வி said...

அப்படியா இமா? படிச்சாங்களா?

இமா said...

yuo. ;) She has read it all. ;)

செந்தமிழ் செல்வி said...

நன்றி இமா, அம்மாவுக்கு என் அன்பை சொல்லுங்க.

இமா said...

solliyaachchu. ;) tkz.

மதுஷங்கர் said...

எங்க வீட்டில் அப்படித்தான் ஒரு குருவி 8 முட்டை இட்டது, குஞ்சு பொறிக்க ஆரம்பித்தது. ஆனால் இரண்டு இரண்டு நாள் இடைவெளியில் 4 குஞ்சுகள் இறந்து விட்டது. அடுத்து பொறிச்ச 3 குஞ்சுகளில் ஒன்று இறந்து விட்டது, ஒரு முட்டை பொறிக்கவே இல்லை. இப்பொழுது மீதம் உள்ள இரண்டு குஞ்சுகளுமே நன்கு வளர்ந்து பறக்கும் தருவாயில் இருக்கிறது. இதற்குப் பெயர் தான் "Survival of the fittest". அதாவது சத்துக் குறைவான குஞ்சு மற்றும் தாயிடம் சத்தம் போட்டு உணவு கேட்க இயலாத குஞ்சுகளுக்கு தாயே உணவு ஊட்டாது (உள்ளுணர்வு - பின்னால் ஆபத்து நிறைந்த இந்த உலகில் பலம் இல்லாமல் வாழ முடியாது என்பதால்) அதனால் குஞ்சுகள் உணவில்லாமல் இறந்து விடும். அதே போல் நல்ல பலமுள்ள குஞ்சுகள் மற்ற பலஹீனமான குஞ்சுகளை மிதித்து கொன்று விடும் (உணவுக்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காக (இதுவும் "Survival of the fittest" தான்). இதற்கு கவலைப்படத் தேவை இல்லை இது இயற்க்கை தான்.
நன்றி
உமா…

Post a Comment