Friday, February 14, 2014

மலர்வனத்தின் மணம் நுகர வரும் வண்ணத்துபூச்சிகளுக்கு வணக்கம்.

மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின், இன்னும் சொல்லப் போனால் சரியாக ஒரு வருடம் கழித்து... உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


எல்லோரும் நலம் தானே?

நானே வரவில்லையென்றாலும், இங்கு வந்து சென்ற அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்,

தோழி ஸாதிகா எப்போதுமே, ஏன் செல்வி பிளாக்குக்கு வருவதில்லைன்னு கேட்டுகிட்டே இருப்ப்பாங்க. இந்த புது வருடத்தில் இருந்தாவது பதிவுகள் போட ஆரம்பியுங்கள் என்று நாகை போன போதே என்னிடம் விண்ணப்பம் வைத்தார்கள். என்னை எழுத வைக்க வேண்டுமென்ற அவர்களின் தூண்டுதலுக்கு நன்றிகள்.

மகளின் திருமணம் முடியும் வரை எங்கும், யாருக்கும் பதிவிடுவது இல்லையென்ற என் விரதத்தை, மகளின் திருமணம் முடிந்ததும்  முடித்துக் கொள்ளலாம் என நான் நினைத்திருந்த வேளையில் தான், (திருமணம் முடிந்து 15 நாட்களில்) அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, நீ வந்தால் பரவாயில்லைன்னு தங்கையிடமிருந்து போன் வந்தது. அப்பாவைப் பார்க்கப் போனோம். 

மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுத்துப் பார்த்தாயிற்று. அடிக்கடி மயக்கம் வருகிறது. மருத்துவமனையில் சேர்த்துப் பார்க்கலாம் என்ற மருத்துவரின் சொல்லுக்கு இணங்கி மருத்துவமனையில் சேர்த்ததும், மருத்துவர் சொன்ன சின்ன அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, அதையும் செய்து முடித்ததும், சாரி, சிகிச்சை பலனிக்கவில்லை. அவர் ஒத்துழைக்க மறுக்கிறார், வீட்டுக்குக் கூட்டிப் போய் விடுங்கள் என்று டாகடர் சொன்னதும், வீட்டுக்கு கூட்டி வந்து இரண்டே நாட்களில் ஒரு அதிகாலை நேரம் அப்பாவின் உயிர் பிரிந்ததும் (28.02.2013) ஒரு கனவு போல், கண்மூடி கண்திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. 

அப்பாவின் காரியங்கள் ஒருவழியாக முடிந்ததும், திருமணமான பெண், எனக்கு வெளிநாடு செல்ல விசா வந்து விட்டது. நானும் கிளம்ப வேண்டும் என்று சொல்லவே கனக்கும் மனதோடு, வேண்டிய ஏற்பாடுகளை செய்து பெண்ணை அனுப்பி வைத்தோம். அதன் பின்னும் அப்பாவின் மற்ற காரியங்கள், அம்மாவுக்கான ஏற்பாடுகள், திரும்பவும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என நாட்கள் வெகு வேகமாக ஓடி முடிந்து விட்டது. அப்பாவின் மறைவு, மகளின் பிரிவு என மனம் அமைதி கொள்ளவே கொஞ்ச காலம் பிடித்தது.

மகளுக்குத் திருமணம் முடிந்தே ஒரு வருடம் ஆகப் போகிறது, ஆனாலும், என் விரதம் தான் முடியாமல் நின்றது. இதற்கு மேலும் பதிவிடாமல் இருந்தால், என் வலைப்பதிவில் நுழைய எனக்கே அதிகாரம் இல்லாமல் போய்விடும்:-)

இனியாவது, அவ்வப்போது பதிவுகள் இட வேண்டும் என்ற உறுதியோடு மறுபிரவேசம் செய்திருக்கிறேன்.

வாழ்த்துங்கள். 

Thursday, February 14, 2013

திருமண அழைப்பு

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நீ..........ண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இடைவேளைக்கான காரணம் மகளின் திருமணம். இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. இம்மகிழ்ச்சியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தவும் வேண்டுகிறேன்.
 
பிப்ரவரி 22-ந்தேதி திருமணம் நடக்க உள்ளது. 23-ந்தேதி பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் திருமண வரவேற்புக்கு அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறேன்.
 
 

 

Wednesday, August 17, 2011


நாளை (18.08.11) என் அம்மாவிற்கு நடக்க இருக்கும் இருதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலமுடன் வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம். கிட்டதட்ட ஒன்றரை மாதமாக நாங்கள் ஏஞ்ஜியோகிராம் பார்க்க, வேறு மருத்துவரைப் பார்க்கவென அலைந்து கொண்டிருந்தோம். கோவையில் நாங்கள் பார்த்த மருத்துவமனை டாக்டர்கள், அடைப்பு 90 முதல் 100 சதவீதம் உள்ளது. சர்ஜரி தான் செய்ய வேண்டும், ஆனால் அம்மா சர்ஜரி தாங்கும் நிலையில் இல்லை, மாத்திரை சாப்பிட்டு எத்தனை நாட்கள் இருக்க முடியுமோ அவ்வளவுதான் என்று சொல்லி விட்டார்கள்.
பல டாக்டர்களை நாங்கள் அணுகிய போது மதுரையில் இந்த டாக்டர் மட்டும் பயமில்லை, சர்ஜரி செய்யலாம் என்று கூறவே, வெள்ளியன்றே மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறோம். நாளை  (18.08.11) காலை 9 மணிக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 

Thursday, July 7, 2011

திரும்பிப் பார்க்கிறேன்....


வாழ்க்கையில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கை முடிக்கும் இவ்வேளையில், நான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கத் தோன்றியது.

நான் கடந்து வந்த பாதை அப்படி ஒன்றும் மலர்ப்படுகை அல்ல. கற்களும், முட்களும் நிறைந்த கரடு முரடான பாதை தான். இவ்வளவு நாட்களில் நான் சாதித்தது என்று சொல்லப் போனால், பெரியதாக எதுவும் இல்லை.

ரொம்ப வசதியான குடும்பம் என்று சொல்ல முடியாது. தொடக்கப்பள்ளி ஆசிரியரின் வீட்டில் என்ன வசதியோடு வளர முடியுமோ அப்படித்தான் நான் வளர்ந்தேன். வீட்டில் மூன்று பெண்களில் மூத்த பெண் என்பதால் வேலைகளும் அதிகம், பொறுப்புகளும் அதிகம். அம்மாவிடம் கற்றுக் கொண்டது என்று சொல்ல சமையலைத் தவிர வேறு எதுவும் இல்லை. குழந்தைகளிடம் எப்படி எல்லாம் கோபப்படக் கூடாது என்பதற்கு என் அம்மாவே எனக்கு உதாரணம். என்னைப் பெற்றவர்களைப் பொறுத்தவரை ஏதோ படிக்க வைத்தார்கள். கல்யாணம் செய்து வைத்தார்கள். அத்துடன் அவர்கள் கடமையும் முடிந்தது. அதன் பிறகு வாழ்க்கையில் நான் எவ்வளவோ கஷ்டங்கள் பட்ட போதும் கண்டு கொள்ளவேயில்லை. வயதானபின் அவர்களை நான் பராமரித்து, அவர்களின் தேவைகளை மட்டுமே நான் கவனிக்க வேண்டும் என நினைத்தனர். குழந்தைகள், என் வாழ்க்கை என நான் நினைக்க ஆரம்பித்ததும் மனத்தாங்கல் வந்தது. இப்போது எல்லாம் சரியாகி சமாதானம் ஆனாலும் ஒரு முழுமையான அம்மா, அப்பா பாசம் இன்று வரை எனக்குக் கிடைக்கவே இல்லை என்பது தான் உண்மை:-( இருப்பினும் இந்த நாளை நான் கொண்டாடக் காரணமாக இருந்த அவர்களுக்கு நன்றி.

கணவர் - என் கணவர் எனக்குக் கிடைத்திருக்கும் வரம். என்னுள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்தது மட்டுமன்றி, என்னை வெளி உலகத்திற்குக் காட்டியவரே அவர் தான். உடல்நிலை சரியில்லாத போதெல்லாம் கூடவே இருந்து ஒரு குழந்தையைக் கவனிப்பது போல் கவனித்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் என் கண்கள் கலங்குகிறது. ஏழேழு ஜென்மம் மட்டுமல்ல. அதன்பிறகு எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவரே எனக்குக் கணவராக வர வேண்டும். (எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு விமோசனமே கிடையாதா என்று அவர் புலம்புவது உங்களுக்கு கேட்கிறதா?) என் கடைசி மூச்சு உள்ளவரை அவரை விட்டு ஒரு கணமும் பிரியாத வரம் வேண்டும் இறைவா!

என் அம்மா (மாமியார்) - எனக்கு உடம்பு சரியில்லை என்றால், நீ கஷ்டப்படாதே, தம்பியைக் கொஞ்சம் உதவி செய்யச் சொல் என்று சொல்லும் நல்ல மனம் கொண்ட அம்மா. இன்னும் சொல்ல முடியாதவை எவ்வளவோ. இப்படி ஒரு மாமியாரைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.

குழந்தைகள் -
பெரிய மகள் - சந்தோஷத்தையும், துக்கத்தையும் என்னுடன் சரிக்கு சரியாக பகிர்ந்து கொண்டவள். என்னுடைய சபதத்தை நிறைவேற்ற எனக்கு உறுதுணையாக நின்றவள்.

சின்ன மகள் - அவளின் தைரியம் எனக்கே பாடம் சொல்லும். தன்னலம் கருதாத அவளின் மனது யாருக்கும் வராது.

மகன் - அவனிடமிருந்து நான் கற்றுக் கொண்டது எப்போதும் நிதானத்தை கைவிடாத மனஉறுதி.

படிப்பில் எந்த விதத்திலும் சோடை போகாத குழந்தைகள். நன்கு படித்து இன்று எல்லோரும் நல்ல நிலைக்கு வந்து விட்டார்கள். அந்த நிலைக்கு நான் அவர்களைக் கொண்டு வந்து விட்டேன் என்பதில் என் பாதி கடமை முடிந்ததாக நினைக்கிறேன். இன்னும் ஒரு முக்கியமான கடமையைச் செய்யவே இப்போது முழு மூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதனாலேயே வேறு எதிலும் எனக்கு கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை. இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு பாக்கியத்தை இந்த ஜென்மத்தில் அளித்த கடவுளுக்கு நன்றி.

என்னை உயர்வாக நினைக்கும் என் நட்புகளைக் கொடுத்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

கடந்து வந்த பாதையில் என் மனதறிந்து நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லை. யார் மனமும் நோகும் படி பேசியதில்லை. அப்படி தெரியாமல் நான் ஏதும் தவறு செய்திருந்தால் இந்த நேரம் நான் இறைவனிடம் மன்னிப்பு கோருகிறேன். இனி அது போல் நேராதிருக்கவும் வழிகாட்டக் கோருகிறேன். நூறாண்டுகள் வாழ வேண்டுமென்றில்லை, இருக்கும் காலத்தில் ஆரோக்கியத்துடன் இருக்கவும், இனி நடக்க இருக்கும் காரியங்கள் நல்லவிதமாக நடப்பதற்கும், என் உறவுகளும், நட்புகளும் நலமுடன் இருக்கவும் இவ்வேளையில் இறைவனிடம் வேண்டுகிறேன்.





 

;;