Tuesday, February 16, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 4)


(குட்டிம்மா என் கையில்)

ஆச்சரியம் காத்திருந்தது.......

குட்டிக் குருவி சட்டிக்கு வெளியே வந்து கூண்டுக்குள் இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டு இருந்தது!!! அதைத் தொடப் போனால் அம்மா குருவி என்னையே கொத்த வந்தது. போகட்டும்னு விட்டு விட்டாலும் குட்டிக் குருவியை எடுக்காமல் இருக்க முடியலை. அம்மாக் குருவியிடம் வேறு போக்குக் காட்டி குட்டியை கையில் எடுத்தால், கண் மட்டும் பெரிசா திருவிழாவில் காணாமற் போன குழந்தை மாதிரி விழித்தது. அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குட்டிக் குருவி என் கையில் தான் இருக்கும். கையில் வைத்து கொத்தமல்லித் தழையை நறுக்கிக் கொடுத்தால் அழகாக எடுத்து சாப்பிடும். பழக ஆரம்பித்த பின் நான் வீட்டிற்கு வந்து விட்டாலே என்னைக் கூப்பிட்டு வெளியே எடுக்கச் சொல்லும். நான் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை பார்த்தாலும் என் தோள் மீது அல்லது கீபோர்டு மேல் தான் உட்கார்ந்திருக்கும். அம்மா குருவியும் போகுது போன்னு விட்டுடுச்சு. குட்டிம்மாவும், நானும் ஒளிந்தெல்லாம் விளையாடுவோம்.

அம்மா குருவிக்கு என்னாச்சுன்னு தெரியலை. அப்பா குருவியை எப்பப் பார்த்தாலும் துரத்தி துரத்தி கொத்திக் கொண்டே இருந்தது. காயமும் ஆகிடுச்சு. எடுத்து மஞ்சள் அரைத்து பத்துப் போட்டு, தனியாக அடைத்து வைத்தோம். குட்டிம்மாவை ஒன்றும் செய்யாது. கொஞ்சம் சரியானது போல் தெரியவே திரும்பவும் கூண்டுக்குள் விட்டோம். நாள் முழுவதும் கொத்தாமல் இருக்கவே சமாதானம் ஆகி விட்டதுன்னு நினைத்தோம். நாங்கள் அனைவரும் அன்று மாலை வெளியே சென்று விட்டோம். திரும்ப வந்து பார்த்தால்....

அப்பா குருவி ரத்த மயமாக நின்று கொண்டு இருந்தது. பதறி வெளியே எடுத்து துடைத்து, மஞ்சள் அரைத்துப் போட்டு தனியாக அடைத்து வைத்தோம். இரவு நாங்கள் படுக்கும் வரை நன்றாகவே இருந்தது. காலையில் எழுந்து பார்த்தால், நாங்கள் முதன் முதலில் வாங்கிய இரண்டாவது குருவியும் உயிரை விட்டிருந்தது....

கண்ணீருடன் அதையும் சட்டியில் புதைத்து வைத்தோம். இனி ஒரு நிமிடமும் அம்மா குருவி வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டேன். என் பையன் அதைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, எங்கள் குட்டிம்மாவுக்கு ஏற்ற மாதிரி ஒரு ஆண் குருவியை வாங்கி வந்தான். கலரும் இரண்டும் ஒன்று போல இருந்தது. மெல்ல நாள் போகப் போக குட்டிம்மாவும் வளர்ந்து இறக்கையெல்லாம் முளைச்சாச்சு. துணையுடன் சண்டை போடாமல் பழகியது.

ஒரு நாள் குட்டிம்மா என்னைக் கத்திக் கூப்பிட்டது. என்னவென்று போனால், சட்டிக்குள் போய் தான் இட்ட முட்டையைக் காட்டியது. அதுவும் மூன்று முட்டை வைத்தது. அடையும் காத்தது. ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்.......

வேறு வழி இல்லை, தொடரும் தான்......

;;