Thursday, March 25, 2010

Sunshine Award..




இது மேனகா & ஜலீலா எனக்குக் கொடுத்த அழகான அவார்டு. ப்ளாக் ஆரம்பித்ததில் இருந்து முதன்முதலில் கிடைத்த அவார்டு. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி மேனகா & ஜலீலா!! பத்திரமாக வைத்துக் கொள்வேன்:-)

இந்த அவார்டை நான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாருக்கும் மற்றவர்கள் கொடுத்து விட்டார்கள்:-) 12 பேர் எனக்குத் தெரியவில்லைப்பா!

நான் கொடுக்க விரும்புவது :


இவங்க எல்லோரும் அவார்டை பெற்றுக் கொள்ளுங்கள். அதற்கான விதிமுறைகள் (!) இதோ:

//To the award winners, please pass this on to your favorite bloggers!

Here are the Rules:

1. Put the logo on your blog or within your post,
2. Pass the award on to 12 bloggers,
3. Link the nominees within your post,
4. Let the nominees know they have received this award by commenting on their blog,
5. Share the love and link to the person from whom you received this award.//
 



என் பெண்ணும் சமைக்க ஆரம்பிச்சுட்டா! இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அதிசயம் தாங்க. கிச்சன் பக்கமே வேறு ஏதாவது வேலை இருந்தால் மட்டுமே எட்டிப் பார்ப்பவள் என் சின்ன மகள். வார இறுதியில் வீட்டுக்கு வந்தாலும், சனிக்கிழமை கூட நாங்கள் ஆபீசிலிருந்து வந்து டீ போட்டுக் குடித்தால் தான் குடிப்பாள். சமையல் செய்து வைத்து விட்டுத்தான் போகணும்.

இப்படியே இருந்தா எப்படிம்மா, சமையல் கத்துக்கோன்னு சொன்னா, நான் ஏன் கத்துக்கணும்பா. திருமணம் ஆன பின்பு எப்படி சமைக்கிறதுன்னு கேட்டா, நல்லா சமைக்கத் தெரிந்த ஒரு பையனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன்னு, இப்ப இல்லை பல வருஷங்களுக்கு முன்பே சொன்னவள்.

எப்படியோ இத்தனை நாட்கள் ஹாஸ்டல், பேயிங் கெஸ்ட்னு நாட்களைக் கடத்தி விட்டாள். இப்ப ஷேரிங்கில் இருக்கிறாள். இவளுடன் இருக்கும் இன்னொரு பெண் சமைக்க முடியாது வெளியிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன்னு அப்படியே செய்கிறாள்.

என் பெண் மட்டும் நானே சமைத்துக் கொள்கிறேன், அதற்குத் தகுந்தாற் போல் அடுப்பு ஏதும் வாங்கித் தாருங்கள் என்று சொன்னதால், கடை கடையாக ஏறி விசாரித்து கடைசியில் இன்டெக்ஷன் அடுப்பை வாங்கினோம். வீடு மாற்றிய பின் எடுத்துச் செல்கிறேன், அதுவரை இங்கேயே இருக்கட்டும்னு சொன்னதால், நான் கொஞ்ச நாள் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தேன். ஒருவழியாக வீடு மாற்றிய பின் அடுப்பைக் கொண்டு போய் கொடுத்தோம்.

ம்ஹூம்.... அதில் சாதம் வைக்க சரி வரலைன்னு சொன்னீங்களே! சாதம் வைப்பது போல் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் ஒன்று பார்த்து வாங்கித் தாருங்கள் என்று சொல்ல, திரும்பவும் கடை கடையாக ஏறி இறங்கல். ஒருவழியாக அரை லிட்டர் அளவுள்ள ரைஸ் குக்கரை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தோம். பிறகும் ஒருவாரம் புது வீட்டில் ஃபிளக் பாயிண்ட் அடுப்பு பக்கத்தில் இல்லை. என்ன செய்வதுன்னு யோசித்துதான் செய்யணும்னா. ம்ம்ம்ம்ம்ம்..... எப்படியோ 6,000 ரூபாய்க்கு மேல் வாங்கிய அடுப்பும், குக்கரும் பயனின்றித் தான் இருக்கப் போகுதோன்னு யோசனையாக இருந்தது.

எனக்கு சமைக்க அரிசி, பருப்பெல்லாம் வேண்டும்னு சொன்னாள்னு அதையும் கொண்டு கொடுத்தோம். இந்தவாரம் வந்த போது ஹவுஸ் ஓனர் ஃபிளக் பாயிண்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு டேபிள் போட்டுக் கொடுத்திருக்கார், இனி இந்த வாரத்தில் இருந்து சமைக்கலாம்னு இருக்கேன் என்று சொன்னாள். நேற்று போன் செய்து நான் இன்று ஃப்ரைடு ரைஸ் செய்தேன் என்றாள். எங்களால் நம்பவே முடியவில்லை!!! இரவு மாவு வாங்கி இட்லியும், தோசையும் செய்தேன். இன்று காலை தக்காளி தொக்கு, இட்லி. மதியத்திற்கு சர்க்கரைப்பொங்கல் (சரியான சர்க்கரைப் பொங்கல் பைத்தியம்) செய்தேன்னு சொன்ன போது, அட! நம்ம பொண்ணும் தேறி விட்டாளேன்னு இருந்தது. இவள் சமைத்ததை ஆபீஸில் உடன் பணிபுரிபவர்கள் சாப்பிட்டுவிட்டு சூப்பராக இருக்குன்னு சொல்லி இருக்கிறார்கள்!!!

இப்பல்லாம் இரவு 10 மணி ஆனால் போதும். போன் செய்து, என்னிடம் இதெல்லாம் இருக்கு, இதை வைத்து நாளைக்கு என்ன செய்யட்டும்னு ரெசிபி கேட்க ஆரம்பித்து விடுகிறாள். நான் சொன்னால்,அதெல்லாம் தான் எனக்குத் தெரியுமே என்கிறாள். ஆக, என் பெண் என்பதை அவளும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறாள் என்பதே சந்தோஷம் தான். எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டேன்.

எப்போதோ ஒரு முறை (+2 லீவில் என்று நினைக்கிறேன்) மாலையில் சாப்பிட ஏதாவது செய்கிறேன்னு வீட்டில் இருந்த சேமியாவைப் பார்த்து, அதை வேக வைத்து பாயசம் வைக்கலாம்னு, வேக வைத்து எடுத்தால் ஒரு பாத்திரம் நிறைய வந்திருக்கிறது (பின்னே! ரோஸ்டட் சேமியா அரை கிலோவை வேக வைத்தால் எவ்வளவு வரும் ! ?) ஆனால் வெகு சாமர்த்தியமாக சேமியாவை மூன்றாகப் பிரித்து பாயசம், வடை, கட்லெட்னு செய்து விட்டாள். எல்லோரும் நன்றாகவே சாப்பிட்டோம்னாலும் இன்றளவும் அதைச் சொல்லியே அவளைக் கிண்டல் செய்வோம்:-)

அப்படி இருந்த பெண் இன்று அவளுக்கு மட்டும்னு அளவு பார்த்து சமைக்கிறாள்னு பெருமையாகத் தான் இருக்கு. கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு புதினா நிறைய கொடுத்து விட்டார். அதை வைத்து என்ன செய்யன்னு கேட்டாள். மிக்ஸி இல்லாமல் எப்படி சட்னி அரைப்பாய்? அப்படியே ஈரத்துணியில் சுற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்துன்னு நான் சொன்னால், ஏற்கனவே நான் அப்படித்தான் வைத்திருக்கேன் என்கிறாள். மீதி வைக்கும் பாலைத் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்து மூடி வை, கெடாமல் இருக்கும்னு நான் சொன்னால், அதுகூடவா எனக்குத் தெரியாது, அப்படித்தான் வைக்கிறேன் மம்மி! என்கிறாள். காரட் வதங்க லேட்டாகும், அதை முதலில் வதக்கி விட்டுப் பிறகு தான் குடை மிளகாய் சேர்த்து வதக்கணுங்கிறது வரை தெரிந்திருக்கிறது!

இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கும் பெண், சமையலிலும் விரைவில் தேறி விட மாட்டாளா என்ன????

;;