Friday, March 5, 2010

குறிப்பு திருட்டு

சமீப காலமாக ஏதாவது ஒரு தளத்தில் யாராவது ஒருவரால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை (சமையல் குறிப்புகள் உட்பட) எடுத்து கொஞ்சம் மாற்றியோ இல்லை அப்படியேவோ தனது பெயரில் வேறு தளத்துக்கு கொடுப்பது அதிகமாகி விட்டது. எதற்காக இந்த திருட்டு வேலை? பெயரும், புகழும் வேண்டியா? அப்படி வேண்டுமாயின், தன் சொந்த குறிப்புகளை, திறமையை கொடுக்க வேண்டியது தானே? இப்படி திருட்டுத்தனம் செய்து பேர் வாங்கச் சொல்லி யார் கேட்கிறார்கள்? கஷ்டப்பட்டு சொந்தக் குறிப்புகள் கொடுத்தவர்களின் மனது என்ன கஷ்டப்படும்?

கொஞ்ச நாள் முன்பு தான் தோழி ஜலீலாவின் குறிப்புகள் எடுக்கப்பட்டு வேறு பிளாக்கே வந்தது என்று சொன்னார்கள். குறிப்புகள் கொடுப்பவர்கள் எல்லாரும் எல்லா இடத்திலும் செக் பண்ணிக் கொண்டா இருக்க முடியும்?

நமக்குத் தெரிந்த சில விஷயங்கள் நம்மோடு போகாமல், பலருக்கும் பயனளிக்கட்டுமேன்னு தான் சொல்றோம். தேவையானவங்களுக்கு அந்த லின்க்கை கொடுத்து படிக்க சொல்ல வேண்டியதுதானே! தனக்கே வேண்டுமென்றால், பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளட்டுமே! அதை விட்டு என்னவோ தானே கஷ்டப்பட்டு கொடுத்த குறிப்பு போல் கொடுத்து இப்படி பேர் சம்பாரிக்க நினப்பது அவர்களுக்கே கேவலமாக இல்லையா?

எது எதைத்தான் திருடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இன்னும் எவ்வளவு பேர் என்ன சொன்னாலும், இது போல் திருடுபவர்கள் மாறுவது போல் தெரியவில்லை.

அவங்க அவங்க குறிப்புகளை பத்திரமாக லாக்கரில் வைத்து பூட்டி வைத்துக் கொள்ளுங்கப்பா. இப்படி சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்:-) திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிறது இதற்கும் பொருந்துமோ?

(அறுசுவை.காம் தளத்தில் உள்ள  என்னுடைய பல குறிப்புகள் பலராலும் திருடப்பட்டு வெவ்வேறு தளங்களில் வேறு பெயர்களால் பதியப்படுவதைக் கண்டு ஏற்பட்ட மன உளைச்சலின் வெளிப்பாடே இந்தப் பதிவு:-( )

;;