Sunday, March 21, 2010

நைட்டி கலாச்சாரம்




ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனுஷனைக் கடித்துங்கிற மாதிரி இந்த நைட்டி சமாச்சாரம் ஆகி விட்டது.

நைட்டி என்றால் இரவு உடைங்கிற அர்த்தமாவது நிறைய பேருக்கு தெரியுமா தெரியாதான்னு சந்தேகமாக இருக்கு.

ஆரம்பத்தில் இரவில் மட்டும் நைட்டி அணிவது,  அதிலும் மேல்தட்டு மக்கள் தான் அதிகம் அணிவது என்று இருந்தது. மெல்ல மெல்ல மாறி வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் பெண்களின் உடை நைட்டி என்பது போல் என்றாகியது. வெளியாட்கள் யாரும் வீட்டிற்கு வந்தால் உடை மாற்றிக் கொண்டு இருந்தனர். அதுவும் பிறகு மாறி ஒரு துப்பட்டாவோ, துண்டோ மேலே போட்டுக் கொள்ளவாவது செய்தனர். சமீபமாக அதற்கும் ஒருபடி மேலே போய் அப்படியே பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கும் போய் வர ஆரம்பித்து விட்டனர்.

சமீபத்தில் நான் கண்ட இரு காட்சிகள் இதற்கெல்லாம் மேலே..

நேற்று முன் தினம் காலையில் 10 மணிக்கு நாங்கள் டிபன் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றோம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது ஒரு பெண் தனது குழந்தையுடனும், வேலைக்காரப் பெண்ணுடனும் அங்கு வந்தாள். அதிலென்ன இருக்கு, ஹோட்டல்னா நாலு பேர் சாப்பிட வரத் தான் செய்வாங்கன்னு சொல்றீங்களா? கூட வந்த வேலைக்காரப்பெண் நீட்டாக உடை உடுத்தி, நன்றாக தலைசீவி வந்திருந்தாள். அந்தப் பெண்ணோ தூங்கி எழுந்த முகத்தை கழுவி விட்டு சரியாக துடைக்கக்கூட இல்லாமல் தூக்கி சொருகிய முடியுடன் நைட்டியோடு வந்திருந்தாள். அதற்குப் போதுமான உள்ளாடைகள் கூட இல்லை. பார்த்தால் உடல்நிலை சரியில்லாதவள் போலும் இல்லை. நன்றாகவே இருந்தாள். ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் முகச் சுளிப்போடு பார்த்தனர். அப்படியே வந்து சாப்பிட்டு விட்டு சென்றாள். குழந்தைக்கு வேலைக்காரப் பெண் ஊட்டி விட்டாள். நிச்சயமாக பக்கத்திலேயே உள்ள வீட்டில் இருந்து தான் வந்திருக்க வேண்டும். பணம் எடுக்க ஆகும் நேரம் ஆகுமா, உடை மாற்ற? அந்த ஹோட்டல் ஒன்றும் மூலையில் உள்ள சாதாரண ஹோட்டல் அல்ல. டூரிஸ்ட்டுகள் வரும் மெயினான இடத்தில் உள்ள பிரபல ஹோட்டல் தான். தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக சாப்பிட்டு வெளியே வந்தோம்.

அதே நாள் மதியம் இதை விட கோபமேற்றும் சம்பவம்.

பீச்சில் நடந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் ஒரு பெண் நைட்டியுடன் வந்து பொருட்களை செலக்ட் செய்து வாங்கிக் கொண்டு இருந்தாள். எவ்வளவு பேர் வரும் இடம், நைட்டியுடன் வரலாமாங்கிற அறிவு கூடவா இருக்காது? அதுவாவது பார்க்க நீட்டாக இருந்தாலும் பரவாயில்லையே! சகிக்க முடியவில்லை.

அணிவதற்கும், வேலை செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது என்பதற்காக இப்படியா? வெளியில் வரும் போதாவது கண்ணியமான உடைகள் அணிய வேண்டும் என்று தோன்றாதா? நாமே இப்படி உடை உடுத்தி விட்டு பார்க்கும் ஆண்களைக் குறை சொல்லி என்ன பயன்? எங்கே போய்க் கொண்டு இருக்கிறோம் நாம்?

எந்த இடத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்ற விவஸ்தை கூடவா பெண்களிடம் குறைந்து போய் விட்டது? மற்ற அலங்காரத்திற்கு ஆகும் நேரம் ஆகுமா உடை மாற்ற?

சமீப காலமாக, பல டீன் ஏஜ் பெண்கள் உடை உடுத்துவது பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது. லோஹிப் பேண்ட், கண்டபடி வசனம் எழுதிய டீசர்ட்னு நன்றாக இருக்கும் ஆண்களைக் கூட கெடுப்பது போல் உள்ளது. பிள்ளைகளுக்கு தெரியவில்லை என்றால், அப்பெண்களின் அம்மாக்களாவது பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சொல்லித் தர மாட்டார்களா? நம் பெண் நீட்டாக உடை உடுத்தி வெளியே செல்கிறாளா என்பதைக் கூட கவனிக்க முடியாத அளவு பிசியாகி விட்டார்களோ?

பெற்றோர்களுக்குன்னு சில கடமைகள் இருக்கு. அதில் உடை விஷயம் அத்தியாவசியமான ஒன்று. மாடர்ன் உடைகள் உடுத்த வேண்டாம்னு சொல்லவில்லை. பார்க்க கண்ணியமாக இருப்பது போல் உடுத்த சொல்லிக் கொடுக்கலாமே!

;;