Wednesday, February 10, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 3)


பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........

சின்னக் கோலிக்குண்டு சைஸில் பழுப்பு கலரில் ஒரு முட்டை!! ஐ! ஒரு வழியா நம்ம வீட்டு லவ் பேர்ட்ஸும் முட்டை வெச்சிருக்குன்னு சந்தோஷமாக இருந்தது. எல்லோரும் சொன்னாங்க.கூண்டுக்குள் பஞ்சை போட்டு வைங்கன்னு.  கொஞ்சம் பஞ்சை பிய்த்து கூண்டுக்குள் போட்டு வைத்தோம். அதைத் தூக்கிக் கொண்டு போய் சட்டிக்குள் வைத்துக் கொண்டது.

ஒரு நாள் விட்டு அடுத்த நாள் எட்டிப் பார்க்கும் போது இன்னொரு முட்டை. அதே போல் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் மூன்றாவது முட்டை. 21 நாட்கள் ஆகும், குஞ்சு பொரிக்கன்னு சொன்னாங்க. அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும் மாற்றிமாற்றி சட்டிக்குள் உட்கார்ந்து அடை காத்தது. நாளை எண்னிக் கொண்டே வந்தேன்.

22 வது நாள் காலையில் எழும் போதே ஏதோ வித்தியாசமான சப்தம் கேட்டது. இஸ்க், இஸ்க்னு மெதுவா கேட்டது. எழுந்து நேரே போய் சட்டியைப் பார்த்தால், விரல் நுனி பெருசுக்கு ஒரு புழு போல் ஒன்று சட்டுக்குள் இருந்தது. மூக்கும், கண்ணும் மட்டும் தான் பெரிசா தெரிந்தது. கண் சரியா விழிக்கலை. ஆனா, வாயைத் திறந்து கொண்டே சத்தம் மட்டும் போட்டுக் கொண்டே இருந்தது.

அம்மாக் குருவி வெளியில் வந்து தினையை எடுத்துப் போய் குட்டிக்கு ஊட்டிக் கொண்டே இருக்கும்.  அப்பாக் குருவி அந்த வேலையைச் செய்யலைன்னு கொத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு ஓரமாக போய் உட்கார்ந்திருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் போதாமல் குட்டி கத்திகிட்டே இருக்கும்.

அடுத்த ரெண்டு முட்டையும் எப்ப பொரிக்கும்னு பார்த்துகிட்டே இருந்தால் குட்டி வெளியில் வரவே இல்லை..... ஒரு நாள் ஆபீஸ் போய்ட்டு வந்து பார்த்தால், முட்டைகளை சட்டிக்கு வெளியில் தூக்கிப் போட்டு இருந்தது. உள்ளேஒன்றும் இல்லை. முட்டை கெட்டுப் போய்ட்டா, அப்படித்தான் தூக்கிப் போடுமாம். பாவமாக இருந்தது.

அப்பப்ப எட்டிப் பார்க்கும் போதெல்லாம், குட்டிக்குருவிக்கு லேசாக முடி வந்திருக்கும். பார்க்கவே அருவருப்பாக இருப்பது போல் இருக்கும். நாங்க எட்டிப் பார்த்தாலே அம்மாக் குருவி உள்ளே போய் தன் இறகால் குட்டியை மூடிக் கொள்ளும். அம்மாக்குருவி, அப்பாக்குருவி இரண்டுமே மஞ்சள், பச்சை, கருப்பு கலந்த கலர். ஆனால் குட்டி என்னவோ ஊதா வண்ணத்தில் இருப்பது போல் தெரிந்தது. சரியாக முடி வளராததால் என்ன கலர்னு சரியா தெரியலை. ஆனா, ரொம்ப வேகமாக வளர்ந்துகிட்டு வந்தது. எப்படி சட்டியை விட்டு வெளியில் வரும்னு எங்களுக்கெல்லாம்  யோசனையாக இருந்தது.

ஒரு நாள் காலையில் எழுந்து வந்து பார்த்தால் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது........
இன்னும் வளரும்...

;;