Sunday, April 25, 2010


பதிவு போட்டு ரொம்ப நாளாகி விட்டது. ஊருக்கு போனது, பேரன் வந்தது எல்லாம் போக, இங்கு சொல்லியவைகளை நான் செய்து கொண்டு இருப்பதும் நேரம் இல்லாததற்கு ஒரு காரணம். புரியலையா? வருடாந்திர சாமான்கள் வாங்கியாச்சு. காய வைத்து சுத்தம் செய்யணும். போட்டு வைக்கும் பாத்திரங்களை கழுவி காய வைக்கணும். வைக்கும் இடத்தை துடைத்து அடுக்கணும். எவ்வளவு வேலைகள்? அப்படி தான் இப்ப தோணும். ஆனால், சாமான்கள் வீட்டில் இருந்தால் மன மகிழ்ச்சியோடு சமைப்பதே தனி சுகம் தான்.

வருட சாமான்கள் வாங்க சரியான பருவம் மாசி மாதம் கடைசி முதல் பங்குனி மாதம் முதல் பாதி வரை (பிப்ரவரி 15 தேதியில் இருந்து மார்ச் 15 தேதி வரை) எப்படி பாதுகாப்பதுன்னு போன பதிவில் சொன்னேன். எப்படி பார்த்து வாங்கணும்னு  இப்ப சொல்றேன்.

அரிசி அவரவர் விருப்பம்.வெள்ளைப் பொன்னி, கர்நாடகா பொன்னி, ஆத்தூர் கிச்சடி, மணச்சநல்லூர் பொன்னி இதெல்லாம் சாப்ப்பாட்டுக்கு நன்றாக இருக்கும். பவானியும் நன்றாக இருக்கும். சாதம் நீளநீளமாக இருக்கும். சிலருக்கு பிடிக்காது. 

இட்லிக்கு ஐ.ஆர்.20 நன்றாக இருக்கும். நிறையப் பேர் கார் அரிசி என்று சொல்லப்படும் குண்டு அரிசியை பயன்படுத்துவார்கள். அந்த அரிசி மாவு காணும். ஆனால், ஐ.ஆர்.20 தான் இட்லி சாஃப்டாக இருக்கும்.

துவரம் பருப்பில் பச்சைபருப்பு அதிகம் கலக்காத, பாலிஷ் போடாத பருப்பு என்றால் தான் சாம்பார் ருசியாக இருக்கும். பருப்பு சிறிதும், பெரிதுமாக இல்லாமல் ஒன்று போல் இருக்க வேண்டும். சொத்தையான வெள்ளைப் பருப்பு, ஓட்டைப் பருப்பு இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். பருப்பில் தோல் அதிகம் ஒட்டி இருக்கக் கூடாது.

உளுத்தம் பருப்பு பார்க்கும் போதே ஒரு பளபளப்பு தெரியணும். அள்ளினால் நல்லா மாவு போல் வெள்ளையாக கையில் ஒட்டணும். சிலர் முழு உளுந்து வாங்கி உடைத்துக் கொள்வார்கள். அதற்கு தண்ணீர் குறைவான இடத்தில் விளைந்த பயிறே நன்றாக இருக்கும். முழு உளுந்தில் நல்லெண்ணெய் தடவி ஒரு நாள் முழுவதும் காய வைத்து, திருகு கல்லில் போட்டு  உடைத்து, அதற்கென உள்ள சல்லடையில் சலிப்பார்கள். இப்பல்லாம், மிஷனில் கூட உடைத்து தருகிறார்கள். ஆனால், தோலை கழுவி எடுப்பதே பெரிய வேலையாக இருக்கும். சிலர் உடைத்த தோலுடன் கூடிய பருப்பும் வாங்குவார்கள். அதற்கு   தோல் நல்ல கருப்பாக இருப்பதாக பார்த்து வாங்கணும்.

கடலைப்பருப்பு பெரிதாக இல்லாமல் சிறு பருப்பாக ஒன்று போல் இருக்கணும். கொஞ்சம் லேசாக மினுமினுப்பு இருக்கும்.  ஓட்டை, தோல் இருக்கக் கூடாது.

பாசிப்பருப்பு பெரிதாக இருந்தால் சுவை இருக்காது. சிறிசாக இருக்கணும். வெள்ளை கலராக இல்லாமல் மஞ்சள் கலராக இருக்கணும். பச்சை தோல் இருக்கக் கூடாது.

கொத்தமல்லி ரொம்ப பொடியாக இல்லாமல் கொஞ்சம் பெரிசா இருந்தால் தான் மணமாக இருக்கும். அள்ளும் போதே  மணக்கும். அதிகம் களிமண் உருண்டைகள், குச்சி, தூசு இல்லாமல் பார்த்து வாங்கணும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுன்னு சும்மாவா சொன்னாங்க? சிறு கடுகு தான் நல்லது. கொஞ்சம் பெரிதாக இருந்தால், தாளித்ததும் முழிமுழிச்சு பார்த்துகிட்டு இருக்கும்:-) நிறைய பேருக்கு அது பிடிக்காது. கல், மண் இல்லாமல் பார்த்து வாங்கணும் (எப்படியும் இருக்கும், குறைவாக இருப்பதாக பார்க்கணும்).

மிளகாய் குண்டு மிளகாயை விட நீள மிளகாய் தான் தினசரி உபயோகத்திற்கு நல்லது. பொடி அரைக்கவும் நீள மிளகாய் தான் நல்லது. செத்துப் போன மிளகாய் அதிகம் இல்லாமல் பார்க்க நல்ல சிவப்பு கலராக, ஆட்டிப் பார்த்தால் நிறைய விதை ஆடுவது
போல இருக்கணும்.

புளி வரட்டு வரட்டுன்னு இல்லாமல் நல்லா சதைப்பிடிப்பாக இருக்கணும். கொட்டை, கோது அதிகம் இல்லாமல் சுத்தமாக இருக்கான்னு பார்க்கணும். புளியை சிறிது வாயில் போட்டு பார்த்தால் புளிப்பும் இருக்கணும், லேசான இனிப்பும் கலந்து ருக்கணும். புளிப்பு மட்டும் இருந்தால் குழம்பு வெடிப்பாக இருக்கும். கண் அடிக்க வைக்கும்;-) இனிப்பாக இருந்தாலும் குழம்பு  இனித்துக் கொண்டு சுவை இருக்காது.

தட்டப்பயிறு (காராமணி) இளம் சிவப்பில் ஒன்று போல் முத்தாக இருக்கணும். ஓட்டை இருக்கக் கூடாது. அதிகம் பிஞ்சு பயிறு இருக்கக் கூடாது. பாசிபயிறும் பச்சைக்கலரில் ஒரே சைஸில் இருக்கணும். வெள்ளை கோடு அதிகம் தெரியக் கூடாது.

கொண்டக்கடலை அதிக சுருக்கம் இல்லாமல், ஓட்டை இல்லாமல் பெரிசு பெரிசா இருக்கணும்.

பொட்டுக்கடலை பெரிசு பெரிசாக இருக்கணும். பொடியாக இருந்தால் பிஞ்சு கடலையை வறுத்ததுன்னு அர்த்தம். கையில் நசுக்கினால் பொருபொருன்னு பொடியாகணும்.

சீரகம் சன்னமாக, லேசாக தேய்த்து முகர்ந்தாலே மணக்கணும். கருப்பா இருந்தால் அது பழைய சீரகம். புதுசுன்னா ஒரு மாதிரி  பிரவுனாக இருக்கணும்.

சோம்பு பச்சை கலரில் இருக்கணும். மஞ்சளாக இருந்தால் அது பழசு. ஒன்று போல் இருக்கணும். பிஞ்சு அதிகம் கலந்து ஏமாற்றி விடுவார்கள். பார்த்து வாங்கணும்.

கசகசா மண் போல கலரில் இல்லாமல், வெள்ளையாக இருக்கான்னு  பார்த்து வாங்கணும்.

மிளகு சுருக்கம் அதிகம் இல்லாமல், மணமாக, நல்ல கருப்பு நிறத்தில் இருக்கணும்.

ஏலக்காய் பச்சை கலரில் திரண்டு இருக்கணும்.

வெந்தயம் மஞ்சள் வண்ணத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்பாக இருப்பது போல் இருக்கணும். பச்சை அதிகம் கலந்து இருக்கக் கூடாது.

வாங்கும் பருவம் முடிந்து விட்டதேன்னு நினைக்க வேண்டாம். இப்பக் கூட ஒண்ணும் மோசமில்லை. பருப்பு விலை ஏறி, திரும்பவும் இறங்கி உள்ளது. புளி விலையும் குறைந்து உள்ளது. மற்ற பொருட்களின் விலை ரொம்ப அதிகமாக ஏறவில்லை. வாங்கணும்னு நினைப்பவர்கள் இப்பவும் வாங்கலாம்.


பி.கு: இதையும் எந்தப்   புத்தகத்திலிருந்தாவது  காப்பி  அடிச்சு போட்டேனான்னு   சொல்வாங்களான்னு  பார்ப்போம்:-)

;;