Tuesday, March 23, 2010

குக்(கர்) ஜாக்கிரதை...
சமையல் பகுதியில் சமைக்குமுன் சொல்ல வேண்டிய விஷயத்தில் சொல்லணும்னு நினைத்திருந்தேன். அதற்குள் எல்லாரையும் தொற்றும் வைரஸ் காய்ச்சல் என் ப்ளாக்கையும் தொற்றவே, அதற்கான வைத்தியத்தில் பொழுது போயிற்று. அப்பறம் ஊர்சுற்றல், உடம்பு படுத்தல்னு நாளைக் கடத்தியாயிற்று. இது யாருக்கும் தெரியாத புது விஷயம் அல்ல. ஆனாலும், இன்னும் அங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியால் தான் இதை எழுதுகிறேன். இதைப் படித்தால் விஷயம் தெரிந்தவர்கள கூட, இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பிரஷர் குக்கர் இல்லத்தரசிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் போல் தான். அதையும் சரியாகப் பயன்படுத்தினால் தான் நமக்கும் நல்லது, குக்கருக்கும் நல்லது.

குக்கர் கழுவும் போது மூடியில் உள்ள வெண்ட் வால்வு எனப்படும் ஓட்டையை நன்கு சுத்தப்படுத்தி கழுவ வேண்டும்.

அந்த ஹோல் எப்பவும் எந்த அடைப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கேஸ்கட்டை கழுவி தண்ணீரிலோ, ஃப்ரீசரிலோ போட்டு வைப்பது அதன் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்.

வெயிட் எடுத்து ஆறியபின், பைப்பில் வேகமாக வரும் தண்ணீரில் வெயிட்டை காண்பித்து, உள்ளே அடைத்திருக்கும் உணவுத்துகள்களை நீக்கி காய வையுங்கள். பருப்பு, சாதம் முதலியவை வேகும் போது கஞ்சி போன்றவை வெளியே வரும் போது வெயிட்டின் சந்துகளில் அடைத்திருக்கும்.

உள்ளே பாத்திரம் வைத்து சமைக்கும் போது குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டீர்களான்னு ஒரு முறைக்கு பலமுறை செக் செய்த பின் அடுப்பில் வையுங்கள். குக்கரில் தண்ணீர் இல்லாமல் வைத்தால் குக்கர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

அரிசிக்கு போதுமான தண்ணீர் வையுங்கள். அதிகமானால் பொங்கி வெளியே வரும். போதவில்லை என்றால், சாதம் தீய்ந்து விடும்.

குக்கரைத் திறக்கும் போது எப்போதும் கைப்பிடி பக்கம் மேலே தூக்காமல், எதிர்ப்புறத்தை மேலே உயர்த்தி திறக்க வேண்டும். அப்போதுதான் வேகமாக வெளியே வரும் ஆவி நம் கையில் படாமல் தப்பலாம்.

எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான விஷயம் - குக்கரின் கொள்ளளவு தெரிந்து அந்த அளவு நிரப்ப மட்டுமே (ரிப்பீட்டு......) மட்டுமே வைக்க வேண்டும்.

எப்போதுமே குக்கரின் முக்கால் பாகம் வரை மட்டுமே நிரப்பி, மீதி பாகத்தை பொருட்கள் வேக இடம் விட வேண்டும்.


அரை லிட்டர் அரிசி தான் வேகும் கொள்ளவு உள்ள குக்கரில் அதைவிடக் குறைவாக அரிசி வைக்கலாம். எக்காரணம் கொண்டும் அதை விடக் கூட வைக்கவே வைக்காதீர்கள். உங்களுக்கு சந்தேகம் இருப்பின், குக்கர் வாங்கும் போது கொடுத்த விளக்கப் புத்தகத்தை படித்த பின்போ இல்லை அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோ செய்யுங்கள். இப்பதான் கையிலேயே போன் இருக்கே! ஒரு போன் செய்து கேட்டாலே எவ்வளவோ கஷ்டங்களைத் தவிர்க்கலாம். இதை ஏன் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால்......

பதினைந்து நாட்களுக்கு முன்பு என் பெண் செய்த காரியம். 3 டமளர் அரிசி மட்டுமே வேகும் கொள்ளளவு கொண்ட குக்கரில் 6 டம்ளர் அரிசியைப் போட்டு அடுப்பில் வைத்து விட்டு, பக்கத்து அடுப்பில் இவள் வேலை செய்து கொண்டிருக்க, பிரஷர் தாங்காமல் குக்கரின் அனைத்து கேஸ் ரிலீஸ் சிஸ்டம் வழியாகவும் உள்ளிருக்கும் அரிசி, கஞ்சியோடு வெளியே வந்து பக்கத்தில் இருந்த பெண்ணின் வலது கையில் பட்டு கை முழுக்க கொப்புளம் போட்டு, கையை பார்க்கவே வயிறெல்லாம் கலங்கியது. இன்னும் புண் ஆறவில்லை. ஆறினாலும் கை முழுக்க தழும்பாக இருக்கும். நல்லவேளையாக குழந்தை வேறு அறையில் தூங்கிக் கொண்டு இருந்ததால் தப்பியது. இல்லையென்றால், இவள் சமைக்கும் போது ஒன்று இடுப்பிலோ அல்லது சிட்டரில் உட்கார்ந்து கிச்சனில் இருந்திருப்பான்.

என் பெண் செய்த இன்னுமொரு தவறு, பக்கத்து வீட்டில் சொன்னாங்கன்னு, மேலே உப்பு தூவியது. தேவையா இது? கொஞ்சம் யோசிக்காமல் செய்த காரியம் எவ்வளவு கஷ்டத்திற்கு உள்ளாக்கி விட்டது.

இதுபோல் கையில் ஆவி பட்டாலோ, கொதிக்கும் பொருட்கள் பட்டு விட்டாலோ குளிந்த நீரில் நன்கு காட்டியபின், புளித்த மாவு (இட்லி மாவு) அல்லது தேனை நன்கு தடவ எரிச்சலும் அடங்கும். கொப்புளமும் அதிகம் போடாது. தேன் தடவினால், காயம் ஆறிய பின், தழும்பும் வராது. சோற்றுக் கற்றாழை இருந்தாலும் அதை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஜெல்லுடன் தடவலாம்.

இனி மேலும் யாரும் இது போல் செய்யாதீர்கள்!!! முக்கியமாக சமைக்கும் போது குழந்தைகளை சமையல் அறைக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சமையலறை ஆபத்தான இடமாக மாறாமல் பார்த்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கு.

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன்:-)

;;