Friday, February 14, 2014

மலர்வனத்தின் மணம் நுகர வரும் வண்ணத்துபூச்சிகளுக்கு வணக்கம்.

மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின், இன்னும் சொல்லப் போனால் சரியாக ஒரு வருடம் கழித்து... உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


எல்லோரும் நலம் தானே?

நானே வரவில்லையென்றாலும், இங்கு வந்து சென்ற அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்,

தோழி ஸாதிகா எப்போதுமே, ஏன் செல்வி பிளாக்குக்கு வருவதில்லைன்னு கேட்டுகிட்டே இருப்ப்பாங்க. இந்த புது வருடத்தில் இருந்தாவது பதிவுகள் போட ஆரம்பியுங்கள் என்று நாகை போன போதே என்னிடம் விண்ணப்பம் வைத்தார்கள். என்னை எழுத வைக்க வேண்டுமென்ற அவர்களின் தூண்டுதலுக்கு நன்றிகள்.

மகளின் திருமணம் முடியும் வரை எங்கும், யாருக்கும் பதிவிடுவது இல்லையென்ற என் விரதத்தை, மகளின் திருமணம் முடிந்ததும்  முடித்துக் கொள்ளலாம் என நான் நினைத்திருந்த வேளையில் தான், (திருமணம் முடிந்து 15 நாட்களில்) அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, நீ வந்தால் பரவாயில்லைன்னு தங்கையிடமிருந்து போன் வந்தது. அப்பாவைப் பார்க்கப் போனோம். 

மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுத்துப் பார்த்தாயிற்று. அடிக்கடி மயக்கம் வருகிறது. மருத்துவமனையில் சேர்த்துப் பார்க்கலாம் என்ற மருத்துவரின் சொல்லுக்கு இணங்கி மருத்துவமனையில் சேர்த்ததும், மருத்துவர் சொன்ன சின்ன அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, அதையும் செய்து முடித்ததும், சாரி, சிகிச்சை பலனிக்கவில்லை. அவர் ஒத்துழைக்க மறுக்கிறார், வீட்டுக்குக் கூட்டிப் போய் விடுங்கள் என்று டாகடர் சொன்னதும், வீட்டுக்கு கூட்டி வந்து இரண்டே நாட்களில் ஒரு அதிகாலை நேரம் அப்பாவின் உயிர் பிரிந்ததும் (28.02.2013) ஒரு கனவு போல், கண்மூடி கண்திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. 

அப்பாவின் காரியங்கள் ஒருவழியாக முடிந்ததும், திருமணமான பெண், எனக்கு வெளிநாடு செல்ல விசா வந்து விட்டது. நானும் கிளம்ப வேண்டும் என்று சொல்லவே கனக்கும் மனதோடு, வேண்டிய ஏற்பாடுகளை செய்து பெண்ணை அனுப்பி வைத்தோம். அதன் பின்னும் அப்பாவின் மற்ற காரியங்கள், அம்மாவுக்கான ஏற்பாடுகள், திரும்பவும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என நாட்கள் வெகு வேகமாக ஓடி முடிந்து விட்டது. அப்பாவின் மறைவு, மகளின் பிரிவு என மனம் அமைதி கொள்ளவே கொஞ்ச காலம் பிடித்தது.

மகளுக்குத் திருமணம் முடிந்தே ஒரு வருடம் ஆகப் போகிறது, ஆனாலும், என் விரதம் தான் முடியாமல் நின்றது. இதற்கு மேலும் பதிவிடாமல் இருந்தால், என் வலைப்பதிவில் நுழைய எனக்கே அதிகாரம் இல்லாமல் போய்விடும்:-)

இனியாவது, அவ்வப்போது பதிவுகள் இட வேண்டும் என்ற உறுதியோடு மறுபிரவேசம் செய்திருக்கிறேன்.

வாழ்த்துங்கள். 

;;