Friday, March 19, 2010

இந்த தொடரை தொடர அழைத்த ஆசியாவுக்கு மிக்க நன்றி.

1. லக்கியின் பிறந்தநாள் பதிவில் இமாவின் பின்னூட்டம்:

/தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். லக்கி பர்த்டே டு யூ லக்கி. ;)
செல்வி... இப்பதான் புரியுது, கொஞ்ச நாளா என் கனவில முதுகில் லவ்பர்ட் அமர்ந்து இருக்க ஒரு வெள்ளைப் பப்பி வந்த ரகசியம்!!/

2. லக்கியின் காத்திருப்பில் ஜீனோவின் பின்னூட்டம்:

/வாவ்...அழகான லக்கி!
லக்கி,லக்கி, லக்கி,லக்கி!
லவ் பண்ணத் தெரிஞ்சா நீ லக்கி! [டாங்க்ஸ் டு பிரபுதேவா! :)]
திஸ் லக்கி பாக்க ஜீனோ மாதிரியே வெஜிடேரியன் :) போலத்தான் தெரிகிறான் ஆன்ட்டி!
நீங்க பாதாம் சிக்கன் எல்லாம் தருவீங்களோ அவனுக்கு? இட்ஸ் ஓகே, ஆனா புரிட்டோ எல்லாம் கொடுத்துப் பழக்காதீங்கோ..அது அவன் வயித்துக்கு கெடுதல்! ;)/

3. லவ்பேர்ட்ஸ் இறுதிப் பகுதியில் ஆசியாவின் பின்னூட்டம்:

/லவ் பேர்ட்ஸ் பகுதி -2 இனிமேல் வருமா?ஆத்தா மாடு வளர்த்தா,கோழி வளர்த்தா மாதிரி,லவ் பேர்ட்ஸ் வளர்த்தா,லக்கி வளர்த்தா ,மீன் வளர்த்தான்னு டயலாக் எழுதலாம் போல.சூப்பர் செல்விக்கா செல்லங்களை(குட்டிமாவை) வைத்து எழுதிய இந்த தொடர் அருமை./

4. லக்கியின் பிறந்தநாளில் சாய் கீதாவின் பின்னூட்டம்:

/அட!
லக்கிக்கு பிறந்தநாளா???
சொல்லவேயில்ல!!!
பிறந்தாலும் இந்த லக்கி மாதிரி "லக்கியா" பிறக்கணும்னு
லக்கி இனமெல்லாம் பொறாமைப்படபோகிறது.
போட்டோவில் மட்டும் கேக்கை காட்டிட்டு எங்களுக்கெல்லாம் பெரிய பீஸாய்
"அல்வா" கொடுத்திட்டீங்களே செல்விக்கா!/

5. சமைக்குமுன் பதிவில் இலாவில் பின்னூட்டம்:

/உங்க பதிவுக்கான பதில் சொல்ல கொஞ்சம் வேலை செய்து படமெடுக்கணும்... டிப்ஸ் கொடுத்தா ஃபாலோ பண்ணனும் இல்லை.. புது வீடு வேற சும்மா சொல்லக்கூடாது... எக்ஸ்பீரியன்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான்... என்னை மாதிரி கத்துக்குட்டி கத்துக்குட்டி தான்....
அப்படியே சைட்ல யெங் பாட்டின்னு சொல்லிட்டாபோச்சு...
இந்த சமையல் அறை ஒழுங்கமைப்பு பத்தி ஒரு டியூசன் எடுங்க... என்னை மாதிரி "ஆர்கனைசேஷனலி சேலஞ்ச்ட்" க்கு உதவும்.../

6. எப்படி இருந்த சுடிதாரில் ஸ்னேகிதி ஸாதிகாவின் பின்னூட்டம்:

/தோழி,சுடியை சூட்டிகையாக்கிட்டீங்களே!!/

7. லவ் பேர்ட்ஸ் பகுதி-4-ல் கவிசிவாவின் பின்னூட்டம்:

/மனுஷங்களை மாதிரியே பறவைகளிலும் ரவுடி சொர்ணாக்கா இருக்காங்களா?!/

8. லவ் பேர்ட்ஸ் பகுதியில் கீதாவின் பின்னூட்டம்:

/எங்கப்பா, மாடு வளர்த்தாரு,ஆடு வளர்த்தாரு, கோழி வளர்த்தாரு,பூனை வளர்த்தாரு, அவ்வளவு ஏன், என்னைக்கூட வளர்த்தாரு, ஆனா லவ் பேர்ட்ஸ் வளர்க்கலியேயேஎஏஏஏஏ!/

9. குறிப்பு திருட்டு பகுதியில் ஜலீலாவின் பின்னூட்டம்:

/செல்வி அக்கா எல்லாத்தையும் போட்டுட்டாஙகளா, ஐய்யோ அய்யோ எங்கே போய் முட்டி கொள்வது, எல்லா வீட்டு சாப்பாட்டையும் திருடி பூட்டாங்களா
நானும் சம்பந்த பட்ட இடத்திலெல்லாம் போய் கமெண்ட் வழியா போய் எல்லார் சார்பாவும் சண்டை போட்டாச்சு பயன்ல்லை. இப்படி ஹே ஹே நான் செயிலுக்கு போரேன் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொல்வது போல்./

10. இமாவின் 'தலைப்பிடக் கோருகிறேன்' பதிவில் செல்வியின் பின்னூட்டம்:-)

/உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!!??/

ஆசியா, சுலபமாக சொல்லி விட்டீர்கள். மொத்தம் போட்டதே 16 பதிவு. அதற்கு வந்த பின்னூட்டங்கள் எல்லாமே என்னைப் பொறுத்தவரை முக்கியமானவைகள் தான். எனக்குப் பிடித்தமானவைகள் தான். அதில் என்னை சிரிக்க வைத்தவைகள் தான் மேலே உள்ளவை.
இமாவின் பரிசு கிடைத்ததால் என் பின்னூட்டம் எனக்குப் பிடித்தது.

எனக்கு இருக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவும் அதிக போட முடிவதில்லை. மற்ற பிளாக்குகளுக்கு போய் பின்னூட்டமும் கொடுக்க முடியலை. வருத்தமாகத்தான் இருக்கு. தயவு செய்து யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

இதுவரை பின்னூட்டம் அளித்தவர்களுக்கும், இனி அளிக்கப் போகிறவர்களுக்கும் நன்றி.

இத்தொடரைத் தொடர இமா, மேனகா மற்றும் கவிசிவாவை அன்புடன் அழைக்கிறேன்.

Sunday, March 7, 2010

செய்திக்கு சென்ஸார் வருமா?

சமீபமாக மீடியாக்களிலும், பத்திரிக்கைகளிலும் அடிபடுவது சாமியாரைப் பற்றிய செய்தி தான்.

பெட்டிக்கடைகளில் இருந்து ஐடி ஆபீஸ் வரை இது தான் பேச்சாக உள்ளது. திரும்ப திரும்ப பலமுறை ஒரு சினிமாக் காட்சியைப் போன்று மீடியாக்கள் போட்டி போட்டுக் கொண்டு காட்டியது. வந்த விருந்தினர்கள் முன்பு செய்தியைப் பார்க்கவே நெளியும் நிலை. குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு செய்தியைக் கூட நாம் பயமின்றி பார்க்க முடியுமாங்கிறது இப்ப சந்தேகமா இருக்கு.

பூட்டிய கதவுக்குள் நடந்தவற்றை அநியாயம், அயோக்கியத்தனம் என்று சொன்னவர்கள், அதை மறைத்து வைத்த காமிராவால் படம் எடுத்தது எந்த அளவு அயோக்கியத்தனம்? அந்த நிகழ்ச்சி ஒன்றும் இன்று, நேற்று புதியதாக நடந்தது போல் தெரியவில்லை. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது மட்டும் வெளியில் வர என்ன காரணமோ? அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம்!!

ஒரு சாமியார் இவ்வாறு செய்யலாமான்னு கொதித்து எழும் மக்கள் தானே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியது? சாமியைக் கும்பிடலாம். அதற்கு எதற்கு இடைத்தரகர்கள்? என்னை சாமியாராக்கு, என்னை நம்புன்னு எநத சாமியார் சொல்கிறார்? யாரோ ஒருவர் எதையோ சொல்லப் போக, அதுவும் தற்செயலாக நடக்க அவர் சொல்வதெல்லாம் நடக்குதுன்னு ஒரு கோஷ்டி கிளப்பி விட்டு சுயலாபம் பார்க்கிறாங்க.

மக்களும் அதை நம்பி காசு, பணம்னு கொட்ட வேண்டியது. அப்பறம் அந்த சாமியாரைப் பற்றி ஏதாவது உண்மை தெரிய வரும் போது ஆத்திரப்பட்டு எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவது. திருந்தணும்னு நினைச்சிருந்தா ஒரு பிரேமானந்தா பற்றிய உண்மை வந்த போதே, எந்த சாமியார்களையும் மக்கள் ஏறெடுத்தும் பாராமால் இருந்திருந்தால், இன்று இப்படி அவன் அயோக்கியன், இவன் அயோக்கியன்னு சொல்லும் நிலை வந்திருக்குமா? தவறு முழுவதும் தம்மிடம் வைத்துக் கொண்டு ஏமாற்றுவர்களை குறை சொல்லி என்ன பயன்?

ஆங், நான் சொல்ல வந்தது இதுவே இல்லை.

செய்திகள் என்றால் நாட்டு நடப்பு, உலக நடப்புகளை தெரிந்து கொள்வதற்கு என்றிருந்த காலம் போய், செய்திக்கிடையே இப்படிப்பட்ட படங்களைக் காட்டினால் பெரியவர்கள், குழந்தைகள்னு உட்கார்ந்து எப்படி செய்திகளைப் பார்ப்பது?

இது போன்ற படங்களைக் காட்டும் செய்திகளுக்கும் இனி சென்ஸார் வருமா?

Friday, March 5, 2010

குறிப்பு திருட்டு

சமீப காலமாக ஏதாவது ஒரு தளத்தில் யாராவது ஒருவரால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை (சமையல் குறிப்புகள் உட்பட) எடுத்து கொஞ்சம் மாற்றியோ இல்லை அப்படியேவோ தனது பெயரில் வேறு தளத்துக்கு கொடுப்பது அதிகமாகி விட்டது. எதற்காக இந்த திருட்டு வேலை? பெயரும், புகழும் வேண்டியா? அப்படி வேண்டுமாயின், தன் சொந்த குறிப்புகளை, திறமையை கொடுக்க வேண்டியது தானே? இப்படி திருட்டுத்தனம் செய்து பேர் வாங்கச் சொல்லி யார் கேட்கிறார்கள்? கஷ்டப்பட்டு சொந்தக் குறிப்புகள் கொடுத்தவர்களின் மனது என்ன கஷ்டப்படும்?

கொஞ்ச நாள் முன்பு தான் தோழி ஜலீலாவின் குறிப்புகள் எடுக்கப்பட்டு வேறு பிளாக்கே வந்தது என்று சொன்னார்கள். குறிப்புகள் கொடுப்பவர்கள் எல்லாரும் எல்லா இடத்திலும் செக் பண்ணிக் கொண்டா இருக்க முடியும்?

நமக்குத் தெரிந்த சில விஷயங்கள் நம்மோடு போகாமல், பலருக்கும் பயனளிக்கட்டுமேன்னு தான் சொல்றோம். தேவையானவங்களுக்கு அந்த லின்க்கை கொடுத்து படிக்க சொல்ல வேண்டியதுதானே! தனக்கே வேண்டுமென்றால், பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளட்டுமே! அதை விட்டு என்னவோ தானே கஷ்டப்பட்டு கொடுத்த குறிப்பு போல் கொடுத்து இப்படி பேர் சம்பாரிக்க நினப்பது அவர்களுக்கே கேவலமாக இல்லையா?

எது எதைத்தான் திருடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இன்னும் எவ்வளவு பேர் என்ன சொன்னாலும், இது போல் திருடுபவர்கள் மாறுவது போல் தெரியவில்லை.

அவங்க அவங்க குறிப்புகளை பத்திரமாக லாக்கரில் வைத்து பூட்டி வைத்துக் கொள்ளுங்கப்பா. இப்படி சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்:-) திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிறது இதற்கும் பொருந்துமோ?

(அறுசுவை.காம் தளத்தில் உள்ள  என்னுடைய பல குறிப்புகள் பலராலும் திருடப்பட்டு வெவ்வேறு தளங்களில் வேறு பெயர்களால் பதியப்படுவதைக் கண்டு ஏற்பட்ட மன உளைச்சலின் வெளிப்பாடே இந்தப் பதிவு:-( )

Thursday, March 4, 2010

ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்....

ஒரு முட்டை கூட இல்லை. நாங்களும் முட்டை கெட்டுப் போயிருந்தால் ஓடாவது இருக்குமேன்னு தேடிப் பார்த்தோம். எங்கும் எதுவும் இல்லை. குட்டிம்மா பாவமாக உட்கார்ந்திருந்தது. அப்பறமாகத்தான் கடைக்காரன் சொன்னான், முட்டையை பல்லி சாப்பிட்டு இருக்கும்னு. முதல்லேயே தெரிந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமேன்னு ஆதங்கமாக இருந்தது.

முட்டை காணாமல் போன கோபத்தில் அம்மா மாதிரியே இதுவும் துணையைக் கொத்த ஆரம்பித்தது. எதற்கு வம்புன்னு ஆண் குருவியைக் கொண்டு போய்க் கொடுத்திட்டோம். கொஞ்ச நாள் தனியாகவே குட்டிம்மா இருந்தது. வீடு மாற்றி புது வீட்டிற்கு வந்தோம். நாங்களே வீடு வேலைகள் நடந்து கொண்டு இருந்ததால், இருக்க இடமின்றி ஒரு ரூமில் அடைந்து கொண்டிருக்க, கூண்டும் நாளுக்கு ஒரு இடமாக இருந்தது.

ரொம்ப பாவமாக இருக்கவே வேறு ஒரு ஆண் குருவி வாங்கி வந்து விட்டோம். அதனோடு ரொம்ப நல்லா விளையாடியது. மீண்டும் குட்டிம்மா இரண்டு முட்டை வைத்தது. இம்முறை ரொம்ப முன் ஜாக்கிரதையாக மயிலிறகை கூண்டு மேல் வைத்து பல்லி வராமல் பாதுகாத்தோம். ஆனாலும் இரண்டு முட்டையும் கெட்டுப் போய் ஒரு நாள் சட்டிக்கு வெளியே தூக்கிப் போட்டு விட்டது. இந்த முறை குட்டிம்மா கோபப்படவில்லை. துணையுடன் எப்போதும் போல் விளையாடியது.

பெண் பிரசவத்திற்கு வந்து பிரசவமும் ஆச்சு. அதன்பின் எனக்கு ரொம்ப முடியாமல் போய் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை. சர்ஜரி முடிந்து என்னால் எதையும் கவனிக்க முடியாமல் இருந்தது. தினையும், தண்ணீரும் என் கணவர் தான் வைப்பார். என்னைப் பார்த்தாலே கூப்பிடும். பேசி விட்டு போய் விடுவேன்.

என்ன ஆச்சுன்னு தெரியலை. ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தால்....என் குட்டிம்மா இறந்து கிடந்தாள்.

என்னால் அழக் கூட முடியவில்லை. நெஞ்செல்லாம் கனக்க குட்டிம்மா வெளியேறினாள். மீதி இருந்த ஒரு குருவியைக் கொடுத்திடலாமான்னு யோசிச்சேன். வேண்டாம், அதற்குத் துணை வாங்கி விடலாம்னு எல்லாரும் சொல்லவே, கொஞ்ச நாட்கள் கழித்து, வேறு ஒரு குருவி வாங்கி விட்டோம். பெண் குருவின்னு கேட்டு வாங்கினோம். பழகி கொஞ்சம் பெரிதானதும் தான் தெரிந்தது, அதுவும் ஆண்குருவி தான்னு.

கொடுத்துட்டு வேறு மாற்ற மனசின்றி இரண்டுக்கும் சேர்த்து இரண்டு பெண்குருவி வாங்கி விடலாம்னு முடிவு செய்தாச்சு. ஆனால், கூண்டு ஒரு ஜோடிக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கு. அதனால் வீட்டு வேலை செய்யும் போது மீதி ஆன மரத்தை வைத்து பெரிய கூண்டு செய்து தரச் சொல்லி தச்சரிடம் சொல்லிக் கொண்டே இருக்கோம். அவரும் இன்றைக்கு, நாளைக்குன்னு நாள் கடத்திகிட்டே இருக்கார்.

இப்போதைக்கு இரண்டு ஆண் குருவிகளும் விளையாடிக் கொண்டு இருக்கு. போன வாரம் வந்த என் பேரனுக்கும் லவ்பேர்ட்ஸ் தான் ரொம்பப் பிடிச்சுது. அதன் சத்தம் கேட்கும் போதெல்லாம் கிட்டே போய்ப் பார்ப்பான். கொத்தமல்லி கொடுத்தால், அவனும் சேர்ந்து கொடுத்தான். அவனுக்கு அதை கையில் தொட்டுப் பார்க்க ரொம்ப ஆசை. அவை பயந்து சட்டிக்குள் போய் உட்கார்ந்து கொண்டன. இதுவே என் குட்டிம்மாவாக இருந்தால், தானே வந்து கையில் உட்கார்ந்து கொள்ளும் :-((

இப்பல்லாம் ரொம்பவும் அதன் அருகில் போய் விளையாடக் கூட கஷ்டமாக இருக்கு.

இவ்வளவுக்கு பின்னும் லவ்பேர்ட்ஸ் ஆசையை விடாமல், இருப்பவற்றை வளர்த்துகிட்டு இருக்கேன். புது கூண்டு செய்து குடும்பம் பெரிதான பின்னர் அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

இப்போதைக்கு லவ்பேர்ட்ஸ் பற்றிய தொடர் நிறைவுறுகிறது:-)

;;