Thursday, March 4, 2010

லவ்பேர்ட்ஸ் - இறுதிப் பகுதி !

ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்....

ஒரு முட்டை கூட இல்லை. நாங்களும் முட்டை கெட்டுப் போயிருந்தால் ஓடாவது இருக்குமேன்னு தேடிப் பார்த்தோம். எங்கும் எதுவும் இல்லை. குட்டிம்மா பாவமாக உட்கார்ந்திருந்தது. அப்பறமாகத்தான் கடைக்காரன் சொன்னான், முட்டையை பல்லி சாப்பிட்டு இருக்கும்னு. முதல்லேயே தெரிந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமேன்னு ஆதங்கமாக இருந்தது.

முட்டை காணாமல் போன கோபத்தில் அம்மா மாதிரியே இதுவும் துணையைக் கொத்த ஆரம்பித்தது. எதற்கு வம்புன்னு ஆண் குருவியைக் கொண்டு போய்க் கொடுத்திட்டோம். கொஞ்ச நாள் தனியாகவே குட்டிம்மா இருந்தது. வீடு மாற்றி புது வீட்டிற்கு வந்தோம். நாங்களே வீடு வேலைகள் நடந்து கொண்டு இருந்ததால், இருக்க இடமின்றி ஒரு ரூமில் அடைந்து கொண்டிருக்க, கூண்டும் நாளுக்கு ஒரு இடமாக இருந்தது.

ரொம்ப பாவமாக இருக்கவே வேறு ஒரு ஆண் குருவி வாங்கி வந்து விட்டோம். அதனோடு ரொம்ப நல்லா விளையாடியது. மீண்டும் குட்டிம்மா இரண்டு முட்டை வைத்தது. இம்முறை ரொம்ப முன் ஜாக்கிரதையாக மயிலிறகை கூண்டு மேல் வைத்து பல்லி வராமல் பாதுகாத்தோம். ஆனாலும் இரண்டு முட்டையும் கெட்டுப் போய் ஒரு நாள் சட்டிக்கு வெளியே தூக்கிப் போட்டு விட்டது. இந்த முறை குட்டிம்மா கோபப்படவில்லை. துணையுடன் எப்போதும் போல் விளையாடியது.

பெண் பிரசவத்திற்கு வந்து பிரசவமும் ஆச்சு. அதன்பின் எனக்கு ரொம்ப முடியாமல் போய் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை. சர்ஜரி முடிந்து என்னால் எதையும் கவனிக்க முடியாமல் இருந்தது. தினையும், தண்ணீரும் என் கணவர் தான் வைப்பார். என்னைப் பார்த்தாலே கூப்பிடும். பேசி விட்டு போய் விடுவேன்.

என்ன ஆச்சுன்னு தெரியலை. ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தால்....என் குட்டிம்மா இறந்து கிடந்தாள்.

என்னால் அழக் கூட முடியவில்லை. நெஞ்செல்லாம் கனக்க குட்டிம்மா வெளியேறினாள். மீதி இருந்த ஒரு குருவியைக் கொடுத்திடலாமான்னு யோசிச்சேன். வேண்டாம், அதற்குத் துணை வாங்கி விடலாம்னு எல்லாரும் சொல்லவே, கொஞ்ச நாட்கள் கழித்து, வேறு ஒரு குருவி வாங்கி விட்டோம். பெண் குருவின்னு கேட்டு வாங்கினோம். பழகி கொஞ்சம் பெரிதானதும் தான் தெரிந்தது, அதுவும் ஆண்குருவி தான்னு.

கொடுத்துட்டு வேறு மாற்ற மனசின்றி இரண்டுக்கும் சேர்த்து இரண்டு பெண்குருவி வாங்கி விடலாம்னு முடிவு செய்தாச்சு. ஆனால், கூண்டு ஒரு ஜோடிக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கு. அதனால் வீட்டு வேலை செய்யும் போது மீதி ஆன மரத்தை வைத்து பெரிய கூண்டு செய்து தரச் சொல்லி தச்சரிடம் சொல்லிக் கொண்டே இருக்கோம். அவரும் இன்றைக்கு, நாளைக்குன்னு நாள் கடத்திகிட்டே இருக்கார்.

இப்போதைக்கு இரண்டு ஆண் குருவிகளும் விளையாடிக் கொண்டு இருக்கு. போன வாரம் வந்த என் பேரனுக்கும் லவ்பேர்ட்ஸ் தான் ரொம்பப் பிடிச்சுது. அதன் சத்தம் கேட்கும் போதெல்லாம் கிட்டே போய்ப் பார்ப்பான். கொத்தமல்லி கொடுத்தால், அவனும் சேர்ந்து கொடுத்தான். அவனுக்கு அதை கையில் தொட்டுப் பார்க்க ரொம்ப ஆசை. அவை பயந்து சட்டிக்குள் போய் உட்கார்ந்து கொண்டன. இதுவே என் குட்டிம்மாவாக இருந்தால், தானே வந்து கையில் உட்கார்ந்து கொள்ளும் :-((

இப்பல்லாம் ரொம்பவும் அதன் அருகில் போய் விளையாடக் கூட கஷ்டமாக இருக்கு.

இவ்வளவுக்கு பின்னும் லவ்பேர்ட்ஸ் ஆசையை விடாமல், இருப்பவற்றை வளர்த்துகிட்டு இருக்கேன். புது கூண்டு செய்து குடும்பம் பெரிதான பின்னர் அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

இப்போதைக்கு லவ்பேர்ட்ஸ் பற்றிய தொடர் நிறைவுறுகிறது:-)

12 comments:

ஸாதிகா said...

லக்கி,லவ்பேர்ட்ஸ் இன்னும் என்னென்னவெல்லாம் வளர்க்கிறீர்கள் தோழி.எனக்கென்னவோ வீட்டில் பிராணிகள் வளர்ப்பதில் ஈடுபாடு இல்லை.ஆனால் உங்கள் பதிவு படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

செந்தமிழ் செல்வி said...

ஸ்னேகிதி ஸாதிகா,
இன்னும் மீன்கள் இருக்கு.
சில நேரம் நல்லா பொழுது போகும். எங்காவது போகணும்னா கஷ்டமா இருக்கும். அவைகளுக்கு ஏதாவது ஆச்சுன்னாலும் கஷ்டமாக இருக்கும்.
மிக்க நன்றி.

ஸாதிகா said...

அடுத்து கண்ணாடிதொட்டிக்குள் குத்தாட்டம் போடும் உங்கள் மீன் செல்லங்களைப்பற்றி எழுதுங்கள்!

geetha said...

செல்விக்கா!
லவ்பேர்ட்ஸ் பற்றின இறுதிப்பகுதி மனசை ரொம்ப கனக்க வெச்சிடுச்சு!
இரண்டு பறவைகளும் பார்க்கவும் ரொம்ப அழகாய் இருக்கு.
பேரனுக்கு ஊருக்கு போனாலும் இந்த பறவைகள் நினைவாவே இருக்கும்.
மீன்களும் வளர்க்கிறீர்களா?அதனைப்பற்றியும் எழுதவும்.

asiya omar said...

லவ் பேர்ட்ஸ் பகுதி -2 இனிமேல் வருமா?ஆத்தா மாடு வளர்த்தா,கோழி வளர்த்தா மாதிரி,லவ் பேர்ட்ஸ் வளர்த்தா,லக்கி வளர்த்தா ,மீன் வளர்த்தான்னு டயலாக் எழுதலாம் போல.சூப்பர் செல்விக்கா செல்லங்களை(குட்டிமாவை) வைத்து எழுதிய இந்த தொடர் அருமை.

அண்ணாமலையான் said...

ரைட்டு

செந்தமிழ் செல்வி said...

ஸ்னேகிதி ஸாதிகா,
நேரம் இருக்கிறப்ப எல்லாம் எழுதுகிறேன். ஊக்கத்திற்கு நன்றி.
கீதா,
அடுத்து லக்கி, பிறகு மீன்கள்:-)
ஆசியா,
கண்டிப்பாக வரும். நீங்க வேறே எத்தனை லவ் பேர்ட்ஸ் கொடுத்து இருக்கீங்க, அதைப் பற்றியும் எழுத வேண்டாமா:-)
சகோ. அண்ணாமலையான்,
நன்றி.

Anonymous said...

நானும் லவ் பேட்ஸ் வீட்ல வைச்சிருக்கேன். பல்லி எல்லாம் முட்டையை சாப்பிட்டதில்லை. எப்படி என்று தெரியவில்லை. இன்று வரை நிறைய குட்டி லவ் பேட்ஸ் வந்திருக்கு. அம்மாவோட கை ராசினு அப்பா சொல்லுவார். வீட்டிற்கு வெளியே தான் எங்கள் கூடு இருக்கிறது. 6 அடி கூடு என்பதால். தேங்காய் ஓட கவர் இருக்கில்ல (பொச்சு மட்டை என்று இலங்கையில் கூறுவார்க்ள்) அதில் தான் நிறைய சின்ன சின்ன கூடு செய்து கூட்டினுள் உயரத்தில் அடுக்கி வைத்தோம். அப்பத் தான் முட்டை இட நிறய இடங்கள் இருக்கும். அப்படி செய்து பாருங்களேன். பல்லி எல்லா கூடுகளிலும் போய் சாப்பிடாது என்று நினைக்கிறேன்.

லப் பேட்ஸ் குட்டிக்கு கழுத்தே இருக்காது. ரொம்ப குண்டா அசிங்கமாக இருக்கும். வளர வளர அழகாக இருக்கும். கூடு பக்கத்தில போய் உக்காந்தா நேரம் போவதே தெரியாது. அபூர்வமாக கொஞ்சம் பிங்க் கலந்த லவ் பேட்ஸ் வரும். குட்டி லவ் பேட்ஸ் வந்தா நிறைய தினையை சாப்பிட்டுவிடும். தண்ணி குடிக்கத் தெரியாது போல. சாப்பிட்டே செத்துவிடும். அதனால் கொஞ்சம் உயரத்தில் சாப்பாடு தட்டை வைத்துவிடுங்கள்.

தட்டையான தட்டில் தண்ணீர் வைத்தால் குட்டி விழுந்து சாகாது. நாமளே கொஞ்சமாக தினையை அரைத்து தண்ணீரில் கலந்து வைத்தால் (பேஸ்ட் மாதிரி) அதுவாக சாப்பிடும். குட்டிக்கும் செரிமானமாகும்.

மீனக்ளே ஈசியாக வளர்க்கக் கூடிய பெட். ஆனால், சின்ன மீனகளை வளர்ப்பது கஷ்டம். ஓரளவு 3 அல்லது 4 இஞ்ச் இருக்கும் மீன்கள் பராமரிப்புக்கு ஈசியாக இருக்கும். ஃபைட்டர் மீன்களை வளர்ப்பது கடினம். தண்ணியின் தன்மை கொஞ்சம் வேறு பட்டாலே செத்துவிடும். ஆனாலும் அழகானவை ரைட். ரொம்ப குட்டித் தொட்டியில் மீனை போடாமல் கொஞ்சம் இரண்டு அடி நீளமான மீன் தொட்டியில் விடுங்கள். பெட்டர் மீன்கள் சின்னது என்றாலும் கொஞ்சம் பெரிய தொட்டியில் விட்டால் நல்லது. இல்லாவிட்டால் தன் விம்பத்தைப் பார்த்து வேற மீன் போல என்று கடிக்கப் போய் கண்ணாடியில் முட்டிக்கொள்ளும். கோல்ட் பிஷ் ரொம்ப ஈசியாக வளர்க்கக் கூடியது. கண்டிப்பாக் ஓக்சிஷன் சப்ளை குடுங்க. இந்தியாவில் தானே ஹைரில்லா தாவரம் கிடைக்கும். கழுவி விட்டு மீன் தொட்டியில் போட்டும் வைக்கலாம். எல்லாம் வீட்டில் செய்து பார்த்தவை. இரண்டு மூன்று சைசில் மீன் தொட்டிகளை வாங்கி மீன் வளருங்கள். குடுவைகள் போல இணைப்புடன் இருக்கும் தொட்டிகள் கூட அழகாக இருக்கும். கலர் ஃபெபில்ஸ் போடாதீங்க. ரொக்சிக் ஆயிடும். இங்கே ஆஸ்ரேலியாவில் கூட மீன் வளர்க்கிறேன். ஃபைட்டர் மீன்கள் தான். பராமரிப்பு கொஞ்சம் கஷட்டம். ஆனாலும் அவை நீத்துவதை ரசிக்கும் போது எல்லா கஷ்டமும் மறந்துவிடும்.

செந்தமிழ் செல்வி said...

யப்பா!!! எவ்வளவு பெரிய பதிவு!! எனக்காக மெனக்கெட்டு அடிச்சிருக்கீங்க. மிக்க நன்றி.
பெரிய கூண்டு செய்ததும் பயன்படும். அவசியமான விளக்கம்.
கோல்ட் ஃபிஷ் தான் சீக்கிரம் செத்து விடுகிறது. கலர் பபுள்ஸ் போட்டால் மீனுக்கு ஆகாதுன்னு போடலை.
மிக மிக நன்றி அனாமிகா!

Anonymous said...

Pleasure Auntie. வாலை கணக்கெடுக்காவிட்டால் ஒரு இரண்டு இஞ்ச் உடல் உள்ள வகை கோல்ட் பிஷ் சாகிறதா? ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவில் தானே இருக்கிறீங்க ஆன்ட்டி? சிலோனில் இந்த வகை மீன் சாதாரணமாகவே வளப்பார்கள். அது பெரிசாகாது. படம் போடுறீங்களா? அப்பாகிட்ட கேட்டு சொல்றேன். அவர் தான் மிருகங்களில் பைத்தியாமாக இருப்பார். எங்களுக்கும் அது தொற்றிவிட்டது.

I am talking about this fish type of kutti fishes only.
http://myfishtanks.info/wp-content/uploads/2009/07/goldfish3.jpg

Anonymous said...

I am having this type of fishes.
http://www.alivenotdead.com/attachments/2009/04/07/10/176514_200904071033558.thumb.jpg

Please don't go for it. It is so hard to maintain them. பெண் மீனை கூட‌ விடாது துரத்திட்டே இருக்கும்.

சில வேளைகளில் பைத்தியம் மாதிரி ஓட்டிட்டே இருக்கும். ஒரு இடத்தில நிக்காது. ஆனாலும் ரொம்ப கலர்ஃபுல்லான மீனகள். என்னிடம், இளம் மஞ்சள்+ வெள்ளை, கருநீலம்+சிவப்பு, சிவப்பு, கடல் நீல நிறங்களில் பேட்டா பிஷ் இருக்கு. அதுவும் வால் வெள்ளை நிறத்திலும், மெல்லிய லேஸ் வைத்து தைத்தது மாதிரி அதன் உடல் நிறம் வாலின் முனையில் மெல்லிய கோடஇருப்பது அபூர்வம். அழகாகாக இருக்கும்.

cibi said...

எங்கள் வீட்டில் மூன்று ஜோடி லவ்பேட்ஸ் இருந்தது. இதில் சில இறந்து விட்டன. தற்போது இரண்டு ஜோடிகள் இருக்கிறது. இரண்டுக்கும் தனித்தனி கூண்டு அமைத்துள்ளோம். இதில் ஒரு பெண் பறவை பானையில் முட்டையிட்டுள்ளது. ஆனால் அடைக்காக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. மற்றொரு பறவை முட்டைகளை கீழே தள்ளி உடைத்துவிட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை. இப்பறவைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் எனக்கு எனவே முட்டைகள் பொறிந்தால் குஞ்சுகள் தாராளமாக வளர கூட்டுடன் பெரிய மரப்பெட்டியை செய்து இணைத்து வைத்துள்ளேன். இருப்பினும் முட்டைகள் முட்டைகளாகவே இருக்கிறது. நாளடைவில் முட்டைகள் அனைத்தும் வீனாகி விடுமோ என்று கஷ்தமாக உள்ளது. எனவே தயவுசெய்து எனக்கு முட்டைகளை பராமரிக்கும் முறைபற்றியும், லவ்பேட்ஸ் வளர்ப்பு பற்றியும் கூறுங்கள் இது எனக்கு மட்டுமல்ல என்போன்ற அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

Post a Comment