Thursday, April 28, 2011

திருப்தியாக முடித்த வேலை!!!

தோழி ஸாதிகாவிடம் பேசிய பின்பு, அடுத்த நாளே பிளாக்கில் பதிவிட நினைத்திருந்தேன். அதற்குள் இந்த முக்கியமான வேலை வரவே அதை 10 நாட்களில் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்த பொழுது, எங்கள் வீட்டில் இருக்கும் நான் வரைந்திருந்த கிளாஸ் பெயிண்டிங்கை பார்த்து விட்டு, அவர்கள் புதியதாக கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டு ஜன்னலுக்கு ஒரு கிளாஸ் பெயிண்டிங் செய்து தர வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டிற்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லையென வரைந்தேன், ஆனால் எந்த நம்பிக்கையில் என்னிடம் இவ்வளவு பெரிய வேலையை தருகிறாரென மலைத்தேன். எனினும் வீடு கட்டி முடியும் தருவாயில் சொல்லுங்கள், பெயிண்டிங் செய்து தருகிறேன் என்று  நானும் சொல்லி இருந்தேன். சொன்னது போலவே கிரகப்பிரவேசத்திற்கு பத்தே நாட்கள் இருக்கும் நிலையில் ஜன்னலின் அளவும், கிளாஸும் என்னிடம் தந்தார் :-)

கண்டிப்பாக கிரகப்பிரவேசத்திற்குள் என்னால் முடித்துத் தர முடியாது என்று சொல்லி விட்டேன். ஏனென்றால் ஜன்னல் அளவு அப்படி!.  ரொம்ப சின்னதாக ஐந்தடி உயரம், மூன்றடி அகலம் தான்!!! (ஆனால், எப்படியும் குறிப்பிட்ட நாளுக்குள் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என மனதிற்குள் முடிவு செய்தேன்.)

இதற்கிடையில் மிக தொலைவிலிருக்கும் அவர்கள் கட்டிக் கொண்டிருந்த வீட்டைப் போய்ப் பார்த்து, ஜன்னல் எங்கு வரும் என்று பார்த்து வந்தோம். தலைவாசலுக்கு அருகில் போர்டிகோவில் முன்புறமுமாக இருந்தது. அடுத்து பெயிண்டிங் செய்வதற்கான டிசைனை நெட்டில் தேட  ஆரம்பித்தேன். ஜன்னல் இரண்டு பக்கமும் பார்வையில் படுவது போன்ற இடமாதலால், எங்கள் வீட்டில் இருப்பது போல் மனித உருவங்கள் சரிவராது என்று பூக்கள் டிசைனை தேடினேன். என் மனதுக்கு பிடித்தது போல் ஒரு டிசைனை தெரிவு செய்து டவுன்லோட் செய்து, ஸ்கேன்  செய்து, ஒரே தாளில் ஜன்னல் சைஸுக்கு (3'x5') ப்ரிண்ட் எடுத்து வந்தேன்.

முதலில் கிளாஸை எங்கே வைத்து வரைவது என்பதே பெரிய யோசனையாக இருந்தது. மடக்கும் கட்டிலை ஹாலில் விரித்து அதன் மேல் மெத்தையை விரித்து கிளாஸை அதன் மேல் வைத்தாயிற்று. பின் தேவைப்படும் எல்லா கிளாஸ் பெயிண்டிங் கலர்களை வாங்கி வந்தாச்சு. தேர்வு செய்த டிசைனை சிடி மார்க்கர் பேனாவால் கிளாஸில் வரைந்தாச்சு. தினமும் இரவு 7 மணிக்கு உட்கார்ந்தால் நடு இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ ஆகும். 

முதலில் பூக்களை கோல்டன் கலர் அவுட்லைனராலும், இலை மற்றும் தண்டை கருப்பு அவுட்லைனராலும்  வரைந்தேன்.



கொஞ்சம் கொஞ்சமாக பூக்களும், இலைகளும் வண்ணம் பெற ஆரம்பித்தது. உயிர் பெற்றனவா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்:-) 


கிளாஸ் கலரில் டபுள் ஸேடு கொண்டு வருவது மிகவும் கஷ்டமான வேலை. இரண்டு, மூன்று கலர்களை மிக்ஸ் செய்து பூக்களும், இலைகளும் கொண்டு வருவதற்குள் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் போனேன். ஃபேன் போட்டால் கலர்கள் உலர்ந்து விடும். ஏசி ரூமுக்குள்ளும் அதே கதி  தான். அதனால், வியர்வை சொட்ட சொட்ட.... சொட்டும் வியர்வை கிளாஸிலும் படாமல் போடுவதற்குள் ரொம்பவே ரிஸ்க் எடுத்து விட்டோமோ என்று கூட தோன்றியது.


 அதிலும் முதலாவதாக வண்ணமிட்ட இந்தப் பூ மட்டும் எனக்கு ரொம்பவே பிடித்தது.


இடையில் இன்னொரு சோதனை. பூக்களுக்கு நான் போட்டு வந்த கலர் தீர்ந்து போய் இரண்டு இதழ்களுக்கு மட்டும் போட வேண்டிய நிலையில் கலர் கிடைக்காமல் கடை கடையாக அலைந்து கடைசியில் அந்தக் கலரை வாங்கி இதழை முடித்தேன்.


பார்டராக போட்ட பிரவுன் கலர்தான் என்னை ரொம்பவே படுத்தி விட்டது. மற்ற கலர்கள் போல் இல்லாமல் ரொம்ப திக்காக இருக்கவே, கலர் இறங்காமல் விரல்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்து விட்டது. இன்னுமே அந்த வலி சரியாகவில்லை.


ரிவர்ஸ் பெயிண்டிங் என்பதால் முழுவதும் முடித்த பிறகு தான் என்னாலேயே படத்தின் முன் பக்கத்தைப் பார்க்க முடிந்தது:-)


கிளாஸ் பெயிண்டிங்கில் பெரிய பிரச்னையே ஏர் பப்பிள்ஸ் தான். அதிலும் அவ்வளவு பெரிய பெயிண்டிங்கில் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் சில சின்ன சின்ன பப்பிள்ஸ் வரத்தான் செய்தது. எப்படியோ கிரகப்பிரவேசத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே பெயிண்டிங்கை முடித்து, காய்வதற்கு ஒரு நாள் டைம் விட்டு கிரகப்பிரவேசத்திற்கு முந்தின நாள் பெயிண்டிங்கை அனுப்பி வைத்து விட்டேன்.


 கிரகப்பிரவேசத்தன்று பெயிண்டிங் பொருத்தப்பட்ட ஜன்னலைப் பார்த்தபோது மனதில் ஏற்பட்ட திருப்திக்கும்,  சந்தோஷத்திற்கும் அளவே இல்லை.........  நண்பரின் பிரமாண்டமான வீட்டிற்கு இந்த பெயிண்டிங் மேலும் அழகு சேர்த்தது.

வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் பார்த்து வியந்து பாராட்டியதை நண்பர் சொன்ன பொழுது 10 நாட்களாக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து விட்டன.



நீங்களும் பார்த்து ஏதாவது சொல்லி விட்டுப் போனால், இன்னும் சந்தோஷமாக இருக்கும்:-))

25 comments:

இமா க்றிஸ் said...

சிம்ப்ளி சுப்பர் செல்வி. ரொம்பவே பொறுமை உங்களுக்கு.

Rathnavel Natarajan said...

அருமையாக இருக்கிறது. எனது மருமகளுக்கு க்ளாஸ் பைண்டிங் பிடிக்கும். இந்த லிங்க் அவர்களுக்கு அனுப்பி விட்டேன்.
வாழ்த்துக்கள் அம்மா.

ஹைஷ்126 said...

அன்று தற்செயலாக பார்க்க முடியாமல் போனது. நேற்று நீங்கள் சொல்லிய பின்னும் நேரம் இல்லாததால் வந்து பார்க்க முடியவில்லை. காலையில் பார்த்தால் சூப்பார நீல நிற பூக்கள் அருமையாக இருக்கிறது.

ஆடர் பற்றி நேரில் பேசுகிறேன் :)))

வாழ்க வளமுடன் வளர்க உங்கள் கண்ணாடி பெய்ண்டிங்க்!

Mahi said...

சூப்பரா இருக்கு செல்வி அக்கா! வெகுநாள் கழித்து ஒரு பிரம்மிப்பூட்டும் பூங்கொத்துடன் வந்திருக்கீங்க!

Asiya Omar said...

ரொம்ப அழகு,அருமையான வேலைப்பாடு.இனியும் நல்ல நல்ல செய்தியோடு வர வாழ்த்துக்கள்..

sathishsangkavi.blogspot.com said...

அழகு....

graceravi said...

மிகவும் அருமையாக இருக்கிறது இந்த வயதிலும் நீங்கள் இப்படி சுறுசுறுப்பாக செய்திருக்கிற அழகை பார்த்து வியப்பாக இருக்கிறது. வயதை குறித்து சொன்னதால் தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் அக்கா. எனக்கும் உங்கள் வயதில் ஒரு அக்கா இருக்கிறார்கள். மேலும் மேலும் உங்கள் கைவண்ணம் வளர வாழ்த்துக்கள்.

அஸ்மா said...

சூப்பரா இருக்கு செல்வியக்கா!

Anonymous said...

ungalukku mattumilla kadaisi padathai paarthu enakkum sandhoshamaaga irundhadhu..padam romba romba arumai..kodutha velaiyai sonnadhu sonnadhu pola seidhu mudippadhil neenga ketti kaariyaache.naan yaarunnu kandupidingka paappom


T..

athira said...

செல்வியக்கா சூப்பரோ சூப்பர்!!! சொல்ல வார்த்தை வரேல்லை...

பிரித்தானிவிலிருந்து ஒரு ஓடர் கிடைச்சிருக்கு... ரேட் பற்றி உள்ளுக்குள்ளால பேசுவம்:), இங்க சனமெல்லாம் எலிக்காதோட திரிகினம்:)).

ஒரு குட்டி அட்வைஸ் செல்வியக்கா:
பெயிண்ட் போட முன்னர், அவர்களின் வீட்டு சுவரின் கலரைக் கேட்டு அதுக்கு மச் பண்ற மாதிரி போட்டால் இன்னும் கலக்கலாக இருக்கும். இது முதல்தடவைதானே, இனிமேல் அப்படிச் செய்தால் நல்லது.

ஊசிக்குறிப்பு:
காதைக் கொண்டுவாங்கோ செல்வியக்கா.... உங்கட வீட்டு ஜன்னல் பெய்ண்ட்டிங்கை விட, இது இன்னும் அழகாக இருக்கு..மனம் வைத்துச் செய்திருக்கிறீங்கள்... வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

ஆஹா...ரொம்ப ரொம்ப அழகாக வரைந்து இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...

vanathy said...

wow! super work, Akka.

athira said...

அன்று தற்செயலாக பார்க்க முடியாமல் போனது. நேற்று நீங்கள் சொல்லிய பின்னும் நேரம் இல்லாததால் வந்து பார்க்க முடியவில்லை.////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இவருக்கு எப்பத்தான் நேரம் கிடைக்கப்போகுதோ:))).

ஆடர் பற்றி நேரில் பேசுகிறேன் :)))/// செல்வியக்கா இந்த ஓடரை முதலில் எடுங்க... பிளேன் ஜன்னலுக்குப்போல இருக்கூஊஊஊ:))).(இது வேற பிளேன்:)).

ஸாதிகா said...

ஆஹா..அருமை தோழி.எனது அத்தனை வேலைப்பளுவிலும் நேற்று உங்களை தொடர்பு கண்டு பேசி வாழ்த்தி பாராட்டி விட்ட திருப்தி எனக்கு.அழகான படம்,சூப்பர் காம்பினேஷன்..கணககள் கட்டிப்போட்டு விட்டது.இத்தனை அழகாக வரைந்த உங்கள் கரங்களுக்கு அண்ணனை சொல்லி பிளாட்டினவளையல் ஒரு ஜோடி வாங்கிபோடச்சொல்லுங்கள்.(பாண்டியில் இருந்து அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரிப்பது இங்கே கேட்கின்றது)

செந்தமிழ் செல்வி said...

நன்றி இமா! பொறுமை?!!:-)

வாங்க ரத்னவேல் ஐயா,
வணக்கம்! வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி. மருமகள் என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க.

சகோ. ஹைஸ்,
மிக்க நன்றி வாழ்த்துக்கு. ஆர்டர் பற்றி பேச மறந்துட்டீங்களே:-)
மிக்க நன்றி மகி.

வாழ்த்துக்கு நன்றி ஆசியா!

வாங்க சங்கவி! வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

கிரேஸ்,
எங்க அம்மாவே என்னை விட சுறுசுறுப்பாக இருப்பாங்க. வயசாச்சுன்னு நான் சொன்னால் என்னை உதைக்க வந்திடுவாங்க:-) நன்றிம்மா.

செந்தமிழ் செல்வி said...

நன்றி அஸ்மா.

அனானிமஸ்,
உங்களுக்கு பதில் பிறகு.

நன்றி அதிரா. ஆமாம், ரேட் பற்றி தனியாகத்தான் பேசணும். அவங்க வெளிப்புற சுவரின் கலரைப் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை. எப்படியோ மேட்ச் ஆகிடுச்சு. உட்புறம் இன்னும் கலர் பண்ணவில்லை.
உண்மைதான் அதிரா, எங்கள் வீட்டு பெயிண்டிங் முதல் முயற்சி. சித்திரமும் கைப்பழக்கம் அல்லவா:-)

மிக்க நன்றி கீதாச்சல்.

நன்றி வானதி.

செந்தமிழ் செல்வி said...

அட்வான்ஸ் வந்த பின்பு தான் ஆர்டர் எடுக்கப்படும் அதிரா;-)

போனிலும், இங்கும் பாராட்டியதற்கு மிக்க நன்றி தோழி!
உனக்கு தான் நகை மேலெல்லாம் ஆசையே இல்லையேனு அழகா நழுவிட்டார்:-(

Jaleela Kamal said...

ரொம்ப அருமை அழகு அழகு கொள்ளை அழகு,
எதுக்கும் நானும் ஒரு ஆர்டர் போட்டு வைத்து கொள்கிறேன்

AshIQ said...

உங்கள் கைவண்ணம் பாத்து வாயடைத்து நிற்கும்போது பேச்சு வரல, அதுனால என்னத்த சொல்றது? :-)) இருந்தாலும் என் எண்ணத்தை சொல்றேன்
கலக்கிட்டீங்க, மிக அருமையா இருக்கு, வெத்து ஆளுங்களுக்கெல்லாம் கலைமாமனி விருது கொடுக்கிற போது,உங்களுக்கு கிடைக்காமல் போனது அந்த விருதின் துரதிருஷ்டம்.
எனவே உடனடியாக எங்கள் செல்வி அக்காவுக்கு கலைமாமணி விருதை வழங்கி அந்த விருதை கௌரவிக்கமாறு செல்வி ஜெயலலிதா அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ஆஷிக்

'பரிவை' சே.குமார் said...

மிக அருமை.
கொள்ளை அழகு.

செந்தமிழ் செல்வி said...

தம்பி ஆஷிக்,
ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க! அவ்வளவு பெரிய விருதுக்கெல்லாம் தகுதியான ஆள் நான் இல்லைங்க. மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.

மிக்க நன்றி சகோ. குமார்.

Anuprem said...

superb.... iam doing glass painting..but u give me new dimension of that...thank u

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... நன்றி...

Asiya Omar said...

செல்விக்கா நலமா? இனி தொடர்ந்து பதிவிடுங்கள்.பகிர்வுக்கு நன்றி,மகிழ்ச்சி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட முகவரி இதோ

http://blogintamil.blogspot.com/2014/08/blog-post.html?showComment=1406860698831#c8995704589865795738
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment